சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாம் வந்துள்ள நிலையில் எமது மக்களின் அவலங்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நாமே எமது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்கின்ற வாய்ப்பை உருவாக்கிக் கொள்வோம் என்று சுவிஸ் சென்றடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா நோக்கி புறப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 7.10 மணிக்கு ஜெனீவா சென்றடைந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை சுவிஸ் அரசாங்கத் தரப்பினர் வரவேற்றனர்.
சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் தமிழீழ தேசியக்கொடிகளுடன் விமான நிலையத்தில் அதிகாலை 6 மணியிலிருந்து காத்திருந்து வரவேற்பளித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் கைலாகு கொடுத்து வரவேற்றார். அங்கு திரண்டிருந்த மக்களும் மலர்செண்டு கொடுத்து ஆரத்தழுவி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வரவேற்றனர்.
விமான நிலைய விசேட விருந்தினர்களுக்கான மண்டபத்தில் சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை:
நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தாலும் எங்களுடைய கதவுகளை மூடிவிட்டு தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை இல்லாது ஒழித்துவிட்டு சிறிலங்கா அரச பேரினவாதமும் சிறிலங்கா இராணுவ பயங்கரவாதமும் தமிழ் மக்களின் மீது மிலேச்சத்தனமான கொடுமைகளை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தினது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த சர்வதேச சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுவதற்கான நிறைய விடயங்களோடு நாங்கள் வந்துள்ளோம்.
அப்படிப் பேசப்படுகின்ற நிறைய விடயங்களுக்கு சிறிலங்காத் தரப்பினர் என்ன விடைகளை அளிக்கப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.
இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரது முகங்களும் சோகம் தழும்பியிருக்கிறது. தாயகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், எமது மக்களின் அவலங்களை அவலங்களுக்குள்ளும் தேசியத்துக்காக நிற்கும் அம்மக்களின் அபிலாசைகளை இந்த சர்வதேச சமூகத்திடம் சொல்ல உள்ளோம்.
நீங்கள் உறுதி தளராமல் தொடர்ச்சியாக எமது தலைமைக்கும் போராட்டத்துக்கும் வழங்க வேண்டிய உறுதியான பேராதரவின் மூலம்தான் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வு முன்னெடுக்கப்படும். ஆதலினால் பொறுத்துக் கொள்ளுங்கள். கவலையை மறந்து விடுங்கள்.
சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாம் வந்துள்ள நிலையில் எமது மக்களின் அவலங்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நாமே நமது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்கின்ற வாய்ப்பை உருவாக்கிக் கொள்வோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்:
தாயகத்திலிருந்து புறப்படுகின்ற போது எமது மக்களின் உணர்வுகளையும் அவலங்களையும் தாங்கிவந்து விமான நிலையத்தில் வந்திறங்கிய போது ஒரு புதுத்தென்போடும், புதிய மகிழ்வோடும் கூடியிருக்கின்ற உங்களைப் பார்க்கின்ற போது அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றேன்.
விடுதலைப் போராட்டத்துக்கு எப்போதும் பங்களிப்பை வழங்குகின்ற உணர்வுள்ள மக்கள் எம்மை வரவேற்பது என்பது பேச்சுவார்த்தையின் உச்சத்துக்குள் நாங்கள் நின்று கொண்டு உரிமைப் போராட்டத்தின் செய்திகளை சர்வதேச அரங்கின் முன்பாக சொல்வதற்கு நீங்கள் வழங்குகின்ற பேராதரவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்றார்.
இந்நிகழ்வுக்குப் பின்னர் வெளிநாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பை வழங்கி சுவிஸ் அரச தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை அழைத்துச் சென்றனர்.
கிளிநொச்சியிலிருந்து சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்தி மூலம் நேற்று முன்நாள் முற்பகல் 10 மணிக்கு விடுதலைப் புலிகளின் குழுவினர் புறப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், மகளிர் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமிழ்விழி உள்ளிட்டோர் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கருடன் கொழும்பு சென்றடைந்தனர்.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று புதன்கிழமை முற்பகல் 9.10 மணியளவில் புறப்பட்டு நேற்று பிற்பகல் அபுதாபியை சென்றடைந்தனர்.
அபுதாபியில் 6 மணித்தியாலங்களுக்கும் மேல் தங்கியிருந்த இவர்கள் நேற்று நள்ளிரவு அபுதாபியிலிருந்து புறப்பட்டனர்.
நன்றி>புதினம்.
Thursday, October 26, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்லதொரு கட்டுரை.
Post a Comment