Saturday, October 28, 2006

ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விளக்கினார்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப. தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை:

இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டுவரும் நோர்வே அரசாங்கத்திற்கும் பேச்சுக்களை நடாத்துவதற்கு இடமளித்து உதவிய சுவிற்சலாந்து அரசாங்கத்திற்கும் முதலில் எமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து எமக்கு சமாதானத்திலுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.

ஐந்து வருடத்திற்கு முன்பு மார்கழி 24, 2001 இல் நாம் ஒருதலைப்பட்சமாக ஒரு மாதத்திற்கு யுத்தநிறுத்தம் ஒன்றினைப் பிரகடனப்படுத்தினோம். இலங்கை அரசாங்கம் எமது சமாதான சமிக்கைகளை ஊதாசீனப்படுத்தியது. நோர்வே அனுசரணையாளரின் அயராத உழைப்பினால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. எமது தேசியத் தலைவரும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதில் கையொப்பமிட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு சர்வதேச மட்டத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது.

இதுவரைகாலமும் சர்வதேச ஆதரவுடன் இருதரப்பினராலும் கையொப்பமிடப்பட்டு அமுலுக்கு வந்த ஒரேயொரு ஒப்பந்தமாக இது விளங்கியது. இராணுவ சமநிலை காரணமாக ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் இனப்பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என நாம் நம்பினோம்.

அரசியலமைப்புச் சாக்குப்போக்கு
ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகளில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையினைக் கொண்டுவருவதற்கான பல முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பயன்களை எமது மக்கள் அனுபவிப்பதற்காக ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்குக் கோரினோம். சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அதுவும் மறுக்கப்பட்டது. பின்னர், வடகிழக்கில் இயல்புவாழ்க்கையை உருவாக்குவதற்கான முக்கிய அமைப்பாக சிரானை செயற்படுத்த அரசு உறுதிமொழி வழங்கியும் அது செயலற்றதாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யுத்தநிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதாகவன்றி வலுச் சமநிலையைக் குழப்புவதாகவே அமைந்தது. தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலையைத் தோற்றுவிப்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

சிரான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை முடக்கப்பட்ட நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கான அவசர தேவையினை கருத்திற்கொண்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான ஆலோசனையை முன்வைத்தோம். பேச்சுக்கள் இதனடிப்படையில் மீள ஆரம்பிப்பதை தடுக்கும் நோக்கோடு பாராளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. தமிழர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை ஆதரித்த தமது 22 பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவுசெய்தனர். இவர்கள் தமிழர் தாயகத்தின் அதீத பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இருப்பினும் சிறீலங்கா அரசு மக்களின் குரலை உதாசீனம்செய்து இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையைப்பற்றிப் பேசுவதற்கு வரமறுத்தது.

இக்காலகட்டத்தில் எமது தாயகப்பகுதியில் சுனாமிப் பேரவலம் டிசம்பர் 2004 இல் நிகழ்ந்தது. எமது கட்டமைப்புக்கள், படையணிகள், உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களுமே, நினைத்துப்பார்க்க முடியாத அவலத்தை சந்தித்த எமது மக்களுக்குக் கைகொடுக்க முன்வந்தனர். சர்வதேச சமூகம் மிகப்பெரிய அளவில் சுனாமி உதவியினை வழங்குவதற்கு முன்வந்தபோதிலும் இந்தத் தீவில் சுனாமி அவலத்தின் மிகப் பெரிய பங்கிற்கு முகம்கொடுத்த எமது தாயகப்பகுதிக்கு மிகக் குறைவாகவே சர்வதேச உதவி எட்டியது. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஆறு மாதத்திற்குப் பின்பு இருதரப்பு மற்றும் பன்னாட்டு நன்கொடையாளர்களின் ஊக்குவிப்புடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தம் சர்வதேச உதவி தமிழர் தாயகத்தையும் எட்டச்செய்து சமாதான முன்னெடுப்பகளுக்கும் பெரும் அனுசரணையாக இருந்திருக்கும். இதுவும் அரசியலமைப்பை சாட்டாகவைத்து நிராகரிக்கப்பட்டது.

அண்மையில் வடகிழக்கு இணைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சிறீலங்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தமையானது இந்நீதிமன்றம் சிங்களப் பெரும்பான்மைப்போக்கிற்கு உதவுகின்ற தொடர்ச்சியான செயற்பாட்டின் ஓர் அங்கமாகக் கருதப்படவேண்டும் என்பதையே காட்டுகின்றது. வடகிழக்கு தமிழர்களின் தொன்மையான தாயகப்பிரதேசம். ஆயிரமாயிரம் வருடங்களாக இது தமிழர் தாயகப்பிரதேசமாகவே இருந்திருக்கிறது. சிறீலங்கா நீதிமன்றத்தின் அண்மைய தீர்மானமானது சிறீலங்கா அரசியலமைப்பின்கீழ் சிறீலங்காப் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என்ற கருத்திற்கு குவிந்துவரும் சாட்சியங்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.

ஜெனீவா – 1 உம் ஒட்டுக்குழுக்களும்
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச யதார்த்தவாதியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்தார். அவர் 2006ம் ஆண்டு முற்பகுதியில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுல் படுத்துவது பற்றி பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். இக்காலகட்டத்தில் கண்காணிப்புக் குழு, ஒட்டுக்குழுக்களைப் பற்றியும் அரச படைகள் அவர்களுடன் சேர்ந்தியங்குவது பற்றியும் தம்முடைய விசாரணைகள் அடங்கிய ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. டிசம்பர் 2005 இலிருந்து பேச்சுக்களுக்கான இணக்கம் ஜனவரி 26 இல் அடையுமட்டும் ஒட்டுக்குழுக்களின் வன்முறைகள் மிகவேகமாக அதிகரித்தன. கண்காணிப்புக் குழுவின் ஒட்டுக்குழுக்கள் பற்றிய அறிக்கை இவ்வன்முறைகளில் எவ்வித மாற்றத்தினையும் கொண்டுவரவில்லை. இத்தீவு முழுமையான நிழல் யுத்தம் ஒன்றிற்குத் திரும்பியது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் நிலமைகள் வளர்ந்துவருவதுபற்றி நாம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறினோம்.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிச்செயற்படும் ஒட்டுக்குழுக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாம் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தோம். உயர்பாதுகாப்பு வலயங்களினால் மக்கள் அடையும் நெருக்கடி பற்றியும் உணர்த்தப்பட்டது. தமிழ் மக்களது விவசாய நிலங்கள், மீன்பிடிப்பிரதேசங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் என்பன இராணுவமயமாக்கப்பட்டமைபற்றி நாம் சுட்டிக்காட்டினோம். அத்தோடு இதனால் எமது அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் கொலை செய்யப்படுவதையும் எடுத்துரைத்தோம். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.13 இற்கமைய தமிழர் தாயகத்தில் நாம் செய்துவந்த எமது அரசியல் வேலைகளை இவ்வன்முறைகளினால் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். இவ்வாதாரங்களைக் காட்டி யுத்தநிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.8 , 1.13 களை அமுல்ப்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.
சமாதான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு யுத்தநிறுத்தம் 100 வீதம் அமுல் படுத்தப்படவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் ஜெனீவாப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அடுத்த சுற்றுப்பேச்சுக்கான திகதியும் தீர்மானிக்கப்பட்டது. ஜெனீவா-1 பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டினை அமுல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலேயே அடுத்தசுற்றுப் பேச்சுவார்த்தை தங்கியிருக்கின்றது என்பதை நாம் வலியுறுத்தினோம். நேர்மையான யுத்தநிறுத்த அமுலாக்கலையே நாம் எமது மக்களுக்காக அரசிடமிருந்து எதிர்பார்த்தோம்.

ஜெனீவா-1 இன் பின்பு - பிரகடனப்படுத்தப்படாத போர்.
கவலைக்கிடமாக, ஜெனீவாவில் உடன்பாடுகண்ட எவையுமே இலங்கை அரசினால் அமுல் படுத்தப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் நடவடிக்கை தமிழர் தாயகப் பிரதேசத்தின் நிலமையை மோசமாக்கி எம்மையும் தமிழ் மக்களையும் விரக்தியின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது. சிறீலங்கா இராணுவத்தின் அப்பட்டமானதும் கொடூரமானதுமான குழந்தைகளினதும் சிறுவர்களினதும் படுகொலைகள் உள்ளுரிலும் வெளியூரிலும் வாழும் தமிழர் மனங்களை உறையச்செய்தது. சர்வதேச சமூகம்கூட இச்சம்பவங்களைப் பற்றி தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இலங்கை இராணுவம் சர்வதேச சமூகத்தினால்; தனது படுகொலைகள் கண்டனத்திற்குள்ளாகும்போது நேரடி வன்முறைகளிலிருந்து விலகி ஒருபடி மேலே சென்று விமானத்தாக்குதல், ஆட்டிலறித் தாக்குதல் மூலம் பொதுமக்கள் கொலைகளில் ஈடுபட்டது. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் மக்கள்மீது தரை, கடல், விமானத்திலிருந்து தாக்குதல் மேற்கொண்டது. இதன்மூலம் பிரகடனப்படுத்தப்படாத போரில் அரசு இறங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இலங்கை அரசின் அழுத்தத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் எமது அமைப்பின்மேல் விதித்த தடையே சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் அவ்வாறான நடவடிக்கைகளில் தயக்கமின்றி ஈடுபட உதவியது. இது சமாதான நடவடிக்கையினையும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டினையும் பாதிக்கும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக்கூறினோம். இத்துரதிர்ஸ்ட நிலையை நாம் கண்காணிப்புக் குழுவிற்குச் சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதைப் புரிந்துகொண்டனர். இலங்கை அரசு எம்மீது தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கறைபூசுவதற்கு முயன்றமையானது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அமுல்ப படுத்துவதில் அரசாங்கத்திற்குள்ள அக்கறையின்மையினையே எடுத்துக்காட்டுகின்றது.

ஜெனீவா உடன்பாடுகள் அமுல்ப்படுத்தப்படாத நிலையில் நோர்வே அனுசரணையாளர்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்கு எம்மை அழைத்திருந்தார்கள். நாம் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு அது முக்கியமானது என்பதையும் மதித்து நோர்வேயின் அழைப்பை ஏற்றோம். முன்னைய நேரடிப் பேச்சுக்களில் எடுத்துக்கொண்ட உடன்பாடுகள் எவையும் அமுல்ப்படுத்தப்படாத நிலையில் ஒஸ்லோவில் அரசுடனான நேரடிப் பேச்சுக்கள் சாத்தியமற்றதாகியது. எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்குரிய உத்தரவாதங்கள் கிடைக்கப்படாத பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றமாட்டோம் எனக் கூறினோம். இருப்பினும், நோர்வேயுடனும் கண்காணிப்புக் குழுவுடனும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுபற்றிக் கலந்துரையாடினோம். ஆனால் சிறீலங்கா அரசு கண்காணிப்புக் குழுவின் முக்கியத்துவத்தை உதாசீனம்செய்து எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றாமல் வெளியேறியது. அவர்கள் தீவிற்குத் திரும்பியதும் இராணுவ வன்முறைகள் மேலும் தீவிரமடைந்ததுடன் பிரகடனப்படுத்தப்படாத போர் ஒன்றையும் ஆரம்பித்தது.

இக்கால கட்டத்தில் ரோக்கியோவில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பைத் தொடர்ந்து அது ஒட்டுக்குழுக்களின் வன்முறையை நிறுத்துமாறும் தீவு முழுவதும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. அத்தோடு எமக்கு சமாதானத்தின்பால் உள்ள ஆர்வத்தினையும் வரவேற்றது. எமது செயற்பாடுகளை ஆதரித்து 15 வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒரே தினத்தில் உரிமைக் குரல் என்ற எழுச்சி நிகழ்வைக் கொண்டாடி அவர்களின் ஆதங்கங்களையும் அபிலாசைகளையும் தீர்த்துவைக்கும் பிரதிநிதிகளாக எம்மை வரித்துக்கொண்டார்கள்.

தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்படாத போர் தீவிரமடைந்துகொண்டு வந்தது. கவலைக்கிடமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இதற்கு ஒரு காரணமாக இருந்தது. நான்கு வருட யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் சந்திக்காத அவலங்களை எமது மக்கள் சந்தித்தனர். திருகோணமலையிலும் வாகரையிலும் எமது தளங்கள் மீதே இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இது நாம் காத்துவந்த பொறுமையை சோதித்தது. நாமும் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அரசின் தாக்குதல்களை நிறுத்தும் முகமாகவே எமது தற்காப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மாவிலாறு
திருகோணமலையில் உருவான மாவிலாறு விடயம் சீறிலங்கா அரசின் தொடர்ந்துவரும் நிலைப்பாட்டின் ஓர் அங்கமே. தமிழ் சிங்கள சமூகத்தவர்களிடையேயான நீர் விநியோகத்திலேயே பிரச்சினை ஆரம்பமானது. தமிழ் மக்கள் தாம் நீர் விநியோகத்திலும் புனரமைப்புக்களிலும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தினர். தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துமுகமாக மாவிலாறு மதகின் கதவுகளை மூடினர். இக்கதவுகள் எமது கட்டப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளதால் நாம் எமது மக்களுடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வுகொண்டுவர முயற்சித்தோம். ஒரு சிவில் அதிகாரி மக்களை அணுகி அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதன்மூலம் இவ்விடயத்திற்கு முடிவுகொண்டு வந்திருக்கலாம். இலங்கை அரசு ஒரு சிவில் பிரச்சினைக்கு சிவில் அணுகுமுறையை ஊதாசீனம்செய்து இராணுவரீதியில் கதவைத்திறக்க முயற்சித்தது. அதற்காகப் பல புதிய போர் முனைகளைத் திறந்தது. எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாரிய ஆட்டிலெறித் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த இராணுவ நகர்வை நிறுத்தவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் மூதூர் பிரதேசத்திலிருந்தே இராணுவ நகர்வுகளும் எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டமையால் மூதூரிலுள்ள இராணுவ நிலைகள் மீது எமது நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இராணுவம் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்திப் பலரை கொன்றுவிட்டு எம்மீது பழி சுமத்தியது. இந்நிலையில் நாம் எமது பழைய நிலைகளுக்குத் திரும்பினோம்.

இதற்கிடையில் அச்சமயம் கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் விசேட தூதுவர் ஜோன் ஹான்சன் பவரோடு இது பற்றிக் கலந்துரையாடினோம். அவருடைய ஆலோசனையின்படி எமது கட்டுப்பாட்டிலுள்ள பூட்டியிருந்த மதகுக் கதவுகளை கண்காணிப்புக் குழுவினரோடு சென்று திறந்துவிடுவதாக முடிவெடுத்தோம்.

கண்காணிப்புக் குழுத் தலைவரோடு அவ்விடத்திற்குச் சென்றோம். எமது வருகையை அறிந்த அரச படைகள் அணைக்கட்டின்மீது எறிகணைத் தாக்குதல் நடத்தின. கண்காணிப்புக் குழுத் தலைவரினதும் ஏனைய கண்காணிப்பாளர்களினதும் உயிர்கள் ஆபத்திற்குள்ளாகின. அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பினர். மறுநாள், மதகுகள் எம்மால் திறந்துவிடப்பட்டன.

இந்த சிவில் பிரச்சினைக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் இரகசிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைந்தது. இதற்கு அது 10,000 துருப்புக்களை பயன்படுத்தியமை எம்மை திருகோணமலையிலுள்ள சம்பூரிலிருந்து வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகவே தோற்றமளித்தது. கண்காணிப்புக் குழுவும் "இந்த நடவடிக்கைகள் தண்ணீருக்கானவையல்ல, வேறு நோக்கம் கொண்டவை போலத் தோன்றுகின்றது " என்று குறிப்பிட்டது. பலரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்வகையில் அரசு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றி இதன்மூலம் உடன்படிக்கையிலிருந்து விலகியது.

வலிந்த இராணுவத் தாக்குதல்கள்
இராணுவம் வலிந்த தாக்குதல்களை நடத்தியபோதெல்லாம் நாம் கண்காணிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தியும் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கி அவர்களை அவ்விடங்களுக்கு அழைத்துச்சென்று காட்டியுமிருந்தோம். குறிப்பாக, கிழக்கில் தாக்குதல்கள் இராணுவத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது என்பதை கண்காணிப்புக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் திருகோணமலை, அம்பாறை என தொடர்ந்த தாக்குதல்கள் யாழ்குடாவின் முகமாலை முன்னரங்க நிலைக்கும் சென்றன. உடன்படிக்கை சரத்து 2.7 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட 16 பாதைகளில் பல அரசினால் மூடப்பட்டன. யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைப்பாதையான யு-9 பாதையும் மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. முகமாலைத் தாக்குதல்கள் தொடர 24 மணித்தியால ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களின் நாளாந்த வாழ்வை இது மிகவும் பாதித்தது. இத்தாக்குதல்கள் எம்மாலேயே ஆரம்பிக்கப்பட்டது என அரசாங்கம் குற்றம்சாட்டியது. நாம் உடன்பாட்டு விதிகள் 3.8, 3.9 இன் பிரகாரம் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பிற்கும் அவர்களின் நடமாடும் சுதந்திரத்திற்கும் அனுமதி வழங்கி களத்தில் சென்று உண்மை நிலைகளை அறியச் சொன்னோம். ஆயினும், அரச படைகள் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டு எனவும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாது எனவும் மறுத்து அவர்கள் பிரசன்னத்தைத் தடுத்தன. இதனால் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு வலுவிழந்தது. இதனைச் சாதமாகப் பயன்படுத்தி வலிந்த தாக்குதலை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்தது.
இப்படியான ஒரு சூழலில்தான் நோர்வேயினதும் இணைத் தலைமை நாடுகளினதும் வேண்டுகோளிற்கிணங்க நாம் நல்லெண்ண சமிக்கையாக ஓர் நிபந்தனையற்ற நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கினோம். அரசு நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு காலமிழுத்து இணங்கியபோதிலும், தனது வலிந்த இராணுவ நடவடிக்கைகளையும் விமானத் தாக்குதலையும் தொடர்ந்தது. பேச்சுக்களுக்கு முன்னர் எம்மீது பாரிய போரைத் திணிக்க அரசு முயன்றது. நாம் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்த அதே சமயத்தில் வாகரையில் வலிந்த தாக்குதல்களை இராணுவம் மேற்கொண்டது. சிறிலங்கா அரசு போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாரிய படைநடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்றால் எமது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டி ஏற்படும் எனத் தெரியப்படுத்தினோம்.

ஏ-9 பாதை மூடப்பட்டதால் ஏற்பட்ட மக்களின் அவலங்களைக் கருத்தில் கொண்டு அது திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கான எமது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாகச் சொன்னோம். இலங்கை அரசு எமது நல்லெண்ணச் சமிக்ஞையை நிராகரித்து ஒரு புதிய வலிந்த தாக்குதலை முகமாலையில் மேற்கொண்டது. இதனை எதிர்த்து நாம் எமது நிலைகளில் இருந்து தற்காப்புத் தாக்குதல் நடாத்தினோம். பெரும் இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அரச படைகள் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. மக்களின் அவல நிலை பற்றி அதனுடைய கரிசனையற்றபோக்குத் தொடர்ந்தது.

மனிதாபிமானப் பணியாளர்களைத் தடுத்தல்
வாகரையில் இடம்பெயர்ந்திருக்கும் 50,000 அகதிகளுக்கு உதவி செய்வதற்கு மனிதாபிமான உதவிகள் செய்யும் அமைப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள்கூட சிறீலங்கா அரசின் கடும்போக்கை மாற்றவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பல மனிதாபிமான அமைப்புக்களின் வேலைகள் சிறீலங்கா அரசின் எரிபொருள், கட்டுமானப் பொருள் தடையினால் முடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவமனையில் தமது பணிகளைப் புரிந்துவந்த எம்.எஸ்.எவ் மருத்துவ நிறுவனத்தின் 4 நிபுணர்களை சிறீலங்கா அரசு வெளியேற்றியுள்ளது. இதைவிட ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தினால் கிளிநொச்சி மருத்துவ சேவை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட வைத்திய நிபுணர் குழு ஒன்றிற்கு சிறீலங்கா அரசு அனுமதி மறுத்துள்ளது. தற்பொழுது கிளிநொச்சி மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர்கூட இல்லை.

மக்கள்
சர்வதேச ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் காலத்தில் பொதுமக்களின் கொலைகளும் காணாமல்போதலும் தொடர்கின்றன.
சிறீலங்கா இராணுவம் ஒட்டுப்படைகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 870 பொதுமக்கள் கொலைசெய்தும், 408 மக்கள் காணாமல்போகச் செய்தும் இருக்கிறது. இவர்களில் 98 பேர் சிறுவர்கள். இரவில் இராணுவ நடமாட்டத்தின்பொழுது நாய் குரைப்பதால் பீதியில் நித்திரையற்ற நிலையில் மக்கள் உள்ளார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பீதி மிக அதிகமாகவே உள்ளது.

அல்லைப்பிட்டியில் இரு குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பில் தூங்கும்போது குடும்பமாகவே கொலைசெய்யப்பட்டனர். இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிவைத்திருந்த தகப்பனுடன் சேர்த்து அந்தக் குழந்தையும் கொல்லப்பட்டது. பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் திருகோணமலையில் குப்புறப்படுத்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அண்ணளவாக 300 சிறுவர்கள் அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஜெனிவாப் பேச்சுவார்த்தையின்பொழுது அரச குழுவின் தலைவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டதைப் பற்றியும் திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றியும் விசாரணைகள் நடத்துவதாகவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினர். இவ்விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

பாரபட்சமற்ற வான்தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் அதேயளவான பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளன. 53 மாணவிகள் முல்லைத்தீவில் கொல்லப்பட்டனர். புதுக்குடியிருப்பில், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் உள்ளடங்குவர். மட்டக்களப்பில் நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் எறிகணைச் சன்னங்கள் தாக்கியதால் வயிற்றிலேயே குழந்தை இறந்தது.

181,643 மக்கள் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ளார்கள். திருகோணமலையில் இடம்பெயர்ந்த பெரும்பான்மையானோருக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவி கிட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அனேக மக்கள் மழையிலும் மரங்களின் கீழுமே வாழ்கின்றார்கள். ஒரு தாய் மழை நேரத்தில் மரத்தின் கீழ் குழந்தையைப் பிரசவித்தார். பெற்றோர் இரவில் மழை பெய்யும்போது எழும்பி தமது குழந்தைகளை மழையிலிருந்து காப்பாற்றும்விதமாக அவர்களின் தலைகளின்மேல் கிடைத்ததைக் காப்பாகப் பிடித்திருக்கிறார்கள். கடனெடுத்து நெல் விதைத்தோர் தமது பயிர்களை விட்டுவிட்டு இடம்பெயர்ந்து கடனை அடைக்கமுடியாத நிலையில் உள்ளார்கள். 81 பாடசாலைகள் அழிக்கப்பட்டோ அல்லது இடப்பெயர்வினால் செயற்படாமலோ உள்ளன. இது பாதுகாப்பு வலையத்தினால் முடக்கப்பட்ட 68 பாடசாலைகளுக்கு மேலதிகமானது.

யு-9 பாதை மூடப்பட்டதால் ஏற்பட்ட பட்டினிச்சாவு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி கொடூரமான, வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். குழந்தைகள் பால்மா இல்லாமல் போசாக்கற்று அவர்களுடைய வளர்ச்சியில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளார்கள். மீனவர்கள் இரவு ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். விவசாயிகள் நெருக்கடி நிலமையாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் விதை நெல் தட்டுப்பாட்டாலும் தமது பயிர்ச் செய்கைகளை முன்னெடுக்கமுடியாமல் உள்ளார்கள். நாளாந்த சம்பளத்திற்கு உழைப்போருக்கு வேலையில்லாமல் அவர்களது குடும்பங்கள் பட்டினியை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது.

எமது பகுதிகளுக்கு எரிபொருள் எடுத்துச் செல்வதற்கு இராணுவத்தினால் விதிக்கப்பட்ட தடையும் யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடும் அங்குள்ள பிரதான மருத்துவமனைகளின்; செயற்பாடுகளை முடக்கியுள்ளது. மின்சார உற்பத்திக்கு எரிபொருளையே நம்பியிருக்கும் இடங்களில் இந்தத் தடை எத்தகைய மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இலங்கை இராணுவத்தினதும் அதனது ஒட்டுக்குழுக்களினதும் கைகளில் மக்கள் படும் அவலங்கள் பற்றிய பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இத்தீவில் நிரந்தர சமாதானத்தையும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வையும் தரவல்ல போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்துவதே இப்பேச்சுவார்த்தைமூலம் நாம் பெறக்கூடிய உச்சக்கட்ட அடைவு ஆகும். மூன்று தசாப்தகாலப் போரைத் தணிவுக்குக் கொண்டுவந்த பெருமை இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்கு உண்டு. இதனை அமுல்ப்படுத்துவதில் சர்வதேசத்தின் பங்கு மிகவும் காத்திரமாக இருக்கிறது. இலங்கை அரசின் மேல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அதனுடைய இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி அதனுடைய போர் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதையும் நிறுத்தும் வல்லமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு.

சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தையில் பங்குகொள்வதை நாம் வரவேற்கின்றோம். இங்கு அவர்கள் தமிழர் தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 100 வீதம் அமுல் படுத்தவும் கண்காணிப்புக்குழுவின் பணிக்கு வலுச் சேர்க்கவும் உதவும்படி சர்வதேச சமூகத்தையும் இணைத்தலைமை நாடுகளையும் நோர்வே அனுசரணையாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நடவடிக்கையானது எமது மக்களின் வாழ்வில் இயல்பு நிலையைக் கொண்டுவரவும் அதனூடாக சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கவும் ஒரு திருப்தியான தீர்வை எட்டுவதற்கும் உத்தரவாதமளிப்பதற்கும் உதவும் என்று நாம் நம்புகின்றோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

சிறிலங்கா அரசாங்கக் குழுவின் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா உரையில் இடம்பெற்றவை:

- கௌரவமான அமைதியையை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படையான சூழ்நிலைக்கு இந்தப் பேச்சுக்கள் உதவும

- உண்மையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் அமைதி உருவாக்கப்பட வேண்டும்.

- அமைதி முயற்சிகளில் உள்ள ஈடுபாட்டினால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டை மகிந்த கூட்டினார். மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துட்ன இணைந்துள்ளது.

- முன்னைய ஜெனீவா பேச்சுக்களுக்கும் யூன் ஓஸ்லோ பேச்சுகளுக்கும் விடுதலைப் புலிகள் வர மறுத்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவில்லை.

- தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்க மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் வல்லுநர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

- பெப்ருவரி ஜெனீவா பேச்சுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் வன்முறைகளால் 897 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டுள்ள பொதுமக்களையும் உள்ளடக்கிய 1363 படுகொலைகளுக்கு புலிகள் பொறுப்பு.

- சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளரையும் அவர்கள் கொன்றுள்ளனர்.

- புலிகளின் படையணிகளில் சிறார் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

- மாவிலாறு நீரை 60 ஆயிரம் மக்களுக்கு விடுதலைப் புலிகள் திறந்துவிட யூலையில் மறுத்தமைக்குப் பின்னர் வன்முறைகள் படிப்படியாக அதிகரித்தன.

- ஓகஸ்ட் மாதம் மூதூரிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர். வடபகுதியிலிருந்து 1991ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் புலிகள் வெளியேற்றினர். அதன் பின்னர் மன்னாரிலிருந்து வெளியேற்றினர். தற்போது கிழக்கு வாழும் முஸ்லிம்களை பலியாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

- ஒக்ரோபர் 16ஆம் நாள் ஹபரணையில் 100க்கும் மேற்பட்ட கடையினர் கொல்லப்பட்டனர்.
- விடுதலைப் புலிகளின் வன்முறைகளால் ஆத்திரமடையும் சிங்களவர்கள் இயல்பிலே மோதலில் ஈடுபடும் நிலை உருவாக்கப்படுகிறது.

- கொப்பிட்டிகெல்லவவில் யூலை 15ஆம் நாள் 64 பொதுமக்களை கிளைமோர் மூலம் விடுதலைப் புலிகள் கொன்றனர்.

- முஸ்லிம்களை வெளியேற்றும் நோக்கில் மூதூரில் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தியதில் 53 ஆயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

- கெப்பிட்டிக்கொல்லவவில் நேற்றும் கிளைமோர் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கில் அக்கரைப்பற்றில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை வாகனம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. வவுனியாவில் மன்னார் வீதியில் இன்று காலைகூட சிறிலங்கா காவல்துறை நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

- இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பேச்சுக்களை தொடர மகிந்த ராஜபக்ச முடிவு செய்தார்.

- பேச்சுகளில் நாம் ஈடுபடுவதானது பலவீனத்தை வெளிப்படுத்துவது அல்ல. இலங்கையின் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கான அமைதியை உருவாகக் வேண்டும் என்ற எமது ஈடுபாட்டின் வெளிப்பாட்டிலேயே நாம் பேச்சுக்களுக்கு முன்வந்துள்ளோம்.

- நாளாந்தம் நடைபெறும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டு எமது நாட்டைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார் நிமல் சிறிபால டி சில்வா.
நன்றி>புதினம்.

No comments: