- ஜூனியர் விகடன்-
"ஈழ விடுதலைப் போராட்டம் என்பது எமது தேசியத் தலைவர் பிரபாகரனால் ஒரு கைத்துப்பாக்கியோடு துவங்கி வைக்கப்பட்டது. நீதியான, நியாயமான விடுதலைப் போரை சர்வதேச சமூகத்துக்குத் தெரிவித்து, பலம் கொண்ட ஒரு போராளி அமைப்பாக இதை வளர்த்தெடுத்திருக்கிறார். ஈழவிடுதலையின் தீரத்தில் இதுவரை 18,842 மாவீரர்கள் விதைக்கப்பட்டிருக் கிறார்கள். இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் போராளிகள் ஈழ விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்தபடி ஆயுதங்க ளோடு நிற்கிறார்கள், களத்தில்! விடுதலைப் புலிகள் அமைப்பு துவங்கப்பட்ட இந்த முப்பதாண்டுகளில் கடந்துவந்த பாதைகளையும் சோதனையான காலங்களையும் தியாகங்களால் நீந்திக் கடந்திருக்கிறோம். எமது தாயகத்தின் பெரும்பங்கு இடங்களை மீட்டு அங்கு ஆட்சி நடத்துகிறோம். ஆனாலும், எமது உரிமைப் போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு மற்றும் போராட்ட குணம் குறித்தெல்லாம் தீர்க்கமாகப் பேசுகிறார், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன். இலங்கையிலிருந்து சமீபத்தில் வந்து கொண்டிருக்கும் தகவல்களெல்லாம், ‘இலங்கை ராணுவத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில், புலிகள் தரப்புக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது...' என்பதோடு, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மக்கள் வாழவே முடியாத அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதுதான்.
இந்நிலையில் இலங்கையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிவதற்காக சுப.தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டோம். "ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு உண்மை நிலவரம் புலப்பட வேண்டும்..." என்று சொல்லி, நம் கேள்விகளை எதிர்கொண்டார்.
"வெகுகாலமாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையின் வாகரை நகரை இலங்கை ராணுவம் கைப்பற்றி இருக்கிறதே?"
"தென் தமிழீழத்தில் திருகோணமலை, சம்பூர், வாகரை போன்ற இடங்களை முழு அளவில் ஆக்கிரமிக்கும் நோக் கோடு ஒரு கொடூரத் தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது சிங்கள ராணுவம். சொந்த இடங்களிலிருந்து தமிழ் மக்களை வெளியேற்ற, விமான குண்டு வீச்சுக்களைத் தொடர்ந்து நடத்தி மக்களைத் துரத்துகிறார்கள். காலியாகும் அந்த இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதுதான் அவர்களின் திட்டம். இலங்கை அரசின் இந்த நீண்டகால உள்நோக்கத்தை முறியடித்து, எமது தாயகப் பகுதி களை வென்றெடுக்கும் எதிர்காலத் திட்டங்களை விடுதலைப்புலிகள் தரப்பிலும் வகுப்போம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரியத் தாக்குதலை நடத்தி, இலங்கை அரசின் ராணுவப் படைத்தளத்தைக் கைப்பற்றி, ஏராளமான ராணுவச் சேதங்களை இலங்கை அரசு அடைந்த பிறகு பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். புலிகள் நல்லெண்ணத்தோடு போர்நிறுத்தம் அறிவித்துவிட்டுப் பேச்சுவார்த்தைக்குப் போனார்கள். ஆனால், இதனை எங்களின் பலவீனம் என்றுதான் நினைத்தது இலங்கை அரசு. விளைவு, யுத்த நிறுத்த உடன்படிக்கையை இல்லாதொழித்து, தொடர்ந்து எமது மக்களைக் கொன்றும் குழந்தைகளையும் அப்பாவிப் பெண்களையும்கூட கொன்று குவித்தார்கள். அவர்களின் வாழ்விடப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது எமது மக்கள் மிகப்பெரிய மனித அவலத்துக்குள் தள்ளப்பட்டி ருக்கிறார்கள். எமது பொறுமை சோதிக்கப்படுகிறது. எமது மக்களின் சமாதானக்கனவுகளில் சிங்களர்கள் ரத்தத்தைத் தெளிக்கிறார்கள். இனி, எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற நாமும் எமது மக்களும் எழுச்சியோடு புறப்பட்டு வருவோம். ஏனென்றால் புலிகள், காட்டுக்குள் சிறு விலங்குகளுக்கு அஞ்சுவதில்லை..."
"சரி, விடுதலைப்புலிகள் அமைப்புரீதியாகப் பலவீனப் பட்டுப் போனதுதான், இப்படி இலங்கை ராணுவம் களத்தில் முன்னெடுத்துச் செல்வதற்குக் காரணமா?"
"எமது அமைப்பின் பலம்&பலவீனம் என்பது எமது மக்களுடைய கைகளிலேதான் இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஒரு முடிவெடுத்தால், அதில் முழுமனதாக ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஐந்தாண்டுகால சமாதான முயற்சிகளை முடக்கி, இன்று எங்களின் அன்னை நிலம் அபகரிக்கப்படும் ஒரு சூழலில், இனப்படுகொலையும் இனச்சுத்திகரிப்பையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஒரு சூழலில், எமது விடுதலைப் போர் மிகத்துரிதமாக வலுப்பெற்று வீறுகொண்டெழும். எண்பதுகளில் எமது இளைஞர்களின் கோபத்தைக் கண்ட அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனா இப்படிச் சொன்னார்& ‘போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்.' அதையே அவர்களுக்குத் திருப்பிச் சொல்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் போர் என்றால் போர்... இல்லை சமாதானம். இரண்டுக்கும் இன்றும் நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்..."
"இலங்கையில் தமிழ்ஈழம் பகுதி முழுவதும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் சாப்பாட்டுக்கு அல்லாடுவதாக வரும் தகவல் குறித்துச் சொல்லுங்கள்..."
"அப்படி வரும் தகவல் உண்மைதான். செயற்கையாக உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சாப்பாட்டுக்கு வழியிலாமல் செத்து மடிய வேண்டும் என்கிற கொடூர சிந்தனையோடுதான் இதனையெல்லாம் செய்கிறது சிங்கள இனவாத அரசு. திட்டமிட்டு இதனைச் செய்கிறார்கள். இதற்கு ஈடுகொடுக்க முடியாமல், மக்கள் தங்களிடம் சரணாகதி அடைவார்கள் என்கிற குறுகிய சிந்தனையும் இதன் பின்னால் ஒளிந்து கிடக்கிறது. ஒவ்வொரு முறையும் தங்கள் மீது திணிக்கப்படும் இத்தைகைய பேரவலத்திலிருந்து தமிழ் மக்கள் மீண்டுதான் வந்திருக்கிறார்களே தவிர, மாண்டு போகவில்லை. அதுபோலத்தான் இப்போதும் மீண்டு வருவார்கள். ஆனால், இந்தப் பேரவலத்தை உருவாக்குகிற சிங்கள அரசை சர்வதேச நாடுகளும் இந்தியாவும் தமிழக உறவுகளும் கண்டிக்க முன்வர வேண்டும். ஈழத்தமிழருக்குத் தங்களின் பூரண ஆதரவைத் தர வேண்டும்!"
"தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இந்தியப் பிரதமரையும் கலைஞரையும் சந்தித்தார்கள். இந்த சந்திப்பால் விளைந்தது என்ன?"
"நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழீழ பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளை இந்தியப் பிரதமர் சந்தித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அது, நிச்சயமாக இந்தியாவினுடைய நிலைப்பாட்டிலும் கொள்கை வகுப்பிலும் மாற்றங்களும் திருப்பங்களும் ஏற்பட்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. இந்த சந்திப்பெல்லாம் நல்ல சமிக்ஞையாக இருக்கிறது. தொடர்ந்து எமது உரிமைப்போரை புரிந்துகொண்டு இந்திய அரசு, தமிழக மக்களுடைய விருப்பத்தையும் முழு அளவில் அங்கீகரித்து, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாக நிற்கும் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதனை நாங்கள் நம்புகிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தமிழக முதல்வர், கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக மக்களும் ஒன்றுதிரண்டு தமிழீழ மக்களுடைய விடுதலைக்கும் அவர்களின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் குரல்கொடுக்க வேண்டிய வலுவான நிலை உருவாகி இருக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்திய அரசு மட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால், இலங்கை அரசு பல்வேறு நாடுகளிடமும் ராணுவ உதவியைப் பெற்று, அதனை வைத்து இலங்கையில் தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் ஒரு பேராபத்தைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. இதனை எல்லா நாடுகளும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் சொல்கிறோம்& உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்கள், இனவாத சிங்கள அரசின் தமிழ்விரோத செயல்பாட்டுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும்!"
"கிட்டத்தட்ட நார்வேயின் சமதான முயற்சிகள் அனைத்தும் முடங்கிப்போன நிலையில், சமாதான நடவடிக்கைகள் எந்த அளவுக்குப் பலன் தரும்?"
"நார்வேயின் சர்வதேச அளவிலான அத்தனை முயற்சிகளையும் தூக்கியெறிந்துவிட்டு, போர் வெறியோடு தமிழ் மக்களைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. ஆக்கிரமிப்பு போருக்காக நாள்தோறும் தமிழர்கள் கொல்லப்படும் சூழலில் நார்வேயின் அனைத்து முயற்சிகளும் முடங்கிப் போய்விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். எமது மக்கள் வெளியேற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அவர்கள் குடியமர்த்தப்படாத வரையில் அமைதி முயற்சி என்பது சிங்களர் நடத்தும் நாடகமாகவே இருக்கும்."
"விடுதலைப் புலிகளின் தத்துவ பேராசான் ஆன்டன் பாலசிங்கத்தின் மறைவு, உங்களின் தத்துவ தளத்தில் ஏற்பட்ட இழப்பு. அந்த இடத்துக்கு யாரை நியமிக்கப்போகிறீர்கள்?"
"உண்மையில் பாலா அண்ணாவின் இழப்பு, எமது தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்னது மாதிரி ‘இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பு’! எமது போராட்டத்தின் துவக்கக் காலத்திலிருந்து இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் தேசியத் தலைவரோடு தோளோடு தோள்நின்றவர். பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் மனங்களில் விடுதலைக் கனவை விதைத்தவர். அரசியல் ராஜதந்திர அரங்கிலே தனது ஆற்றலை, அறிவை மற்றும் அனுபவத்தை சிறப்பாகப் பகிர்ந்து கொண்டவர். அவரது இழப்பு எமக்கு பேரிழப்புதான். ஆயினும் எமது விடுதலை அமைப்பைப் பொறுத்தவரையில், இவ்வாறான இழப்புகளை முன்னரும் சந்தித்திருக்கிறோம். ஆனாலும் எமது அமைப்பு ஆடிப்போயோ பலவீனப்பட்டோ போய்விடவில்லை. புதியபுதிய தலைமுறைகள் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உருவாகிக்கொண்டிருக்கின்றன. பாலா அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள், எமது அமைப்பில் இருக்கிறார்கள். அவர்கள் அதனை முன்னெடுத்துச் செல்வார்கள்."
"ஆன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேலை புலிகளின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்போவதாகத் தெரிகிறதே?"
"அடேல் அண்ணியைப் பொறுத்தவரையில், அவர் எமது விடுதலை அமைப்பில் மகளிர் அணிக்கு ஒரு ஆலோசகராகவும் அது தொடர்பான வேலைத்திட்டங்களில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். பாலா அண்ணன் இருந்த காலத்தில்கூட அவர் இத்துறைகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் தாயகம் திரும்பி, அவருடைய பணிகளைத் தொடரும் வரை அவருடைய கருத்தை அறியாது நாம் கருத்துக்கள் கூறுவது பொருத்தமாக இருக்காது."
டி.அருள்எழிலன்
நன்றி>- ஜூனியர் விகடன்-
Thursday, February 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
test
Post a Comment