Tuesday, February 13, 2007

'சிறிலங்காவின் காவல்துறை செயலிழந்து விட்டது': ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடல்.

"சிறிலங்கா அரசின் காவல்துறை தனது மக்களை பாதுகாக்கும் திறமையற்றது. மேலும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களும் காவல்துறையினரின் பங்களிப்புடனேயே விடுக்கப்படுகின்றன" என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் சிறிலங்கா அரசை சாடியுள்ளது.

ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
"பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் முன்னணி அரசியல்வாதியும், அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் தனக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை அச்சுறுத்தல் அரச தலைவரால் விடுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களால் விடுக்கப்பட்டுள்ளது. அரச தலைவரால் வழங்கப்பட்ட அதிகாரங்களை அவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். (நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை) என தெரிவித்ததுடன் சிறிலங்கா காவல்துறையினரிடமும் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.
இதனிடையே சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியதுடன் உயர்மட்ட விசாரணைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிறைவேற்று அதிகாரம் உடைய அரச தலைவர் மூன்று அமைச்சர்களை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கியதுடன், அவர்களின் பாதுகாப்பையும் மீளப்பெற்றுள்ளார்.

இப்படிப் பாதுகாப்புக்கள் மீளப்பெறப்பட்டவர்களில் அனுராவும் அடங்குவார். இவர் முன்னர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக முறைப்பாடு செய்திருந்தவர். பெப்ரவரி 11 ஆம் நாள் தொலைக்காட்சியில் உரையாற்றிய அரச தலைவர், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், இது விடுதலைப் புலிகளுக்கு ஊக்கத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனுராவின் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த மற்றுமொரு அமைச்சர் கூறுகையில், அரசியலில் எல்லா நேரமும் எமக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது. மரணத்துடன் வாழ்வதே அரசியல் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் படி சிறிலங்காவில் கொலை அச்சுறுத்தல்களை விடுப்பது சாதாரண வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதாவது சிறிலங்காவில் வாழ்க்கை நடத்துவது மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.

இந்த கொலை அச்சுறுத்தல்கள் அரசியல்வாதிகள், வேறுபட்ட எதிர்க்கட்சிகள், ஆயுதம் தாங்கிய அரசியல் குழுக்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர்களுக்கு விடுக்கப்படுகின்றன. இவை தவிர சாதாரண மக்களும் எதிர்த்தரப்புக்களின் பிரதேசங்களில் வாழும் போதும், வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள், மனித உரிமை மையங்களில் முறைப்பாடுகள் செய்பவர்கள், உயர் பதவிகள் வகிப்போர் ஆகியோரும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

கொலை அச்சுறுத்தலானது விடுக்கப்படுபவர்களுக்கும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கும் கடும் அச்சத்தையும் மன அழுத்தத்தையும் தோற்றுவிக்கின்றது. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவது மனிதர்களின் சுதந்திரம், பாதுகாப்பு என்பவற்றை கடுமையாக மீறும் செயலாகவே எடுக்கப்பட வேண்டும். எனவே சட்டப்படி நேர்மையான விசாரணைகளை நடத்தி அவர்களை தண்டிக்க வேண்டும்.
சிறிலங்காவில் கொலை அச்சுறுத்தல் ஒரு பொதுவான கலாச்சாரமாக மாறியுள்ளது. குறிப்பாக 1971 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஜே.வி.பி புரட்சியின் போது இது தோற்றம் பெற்றிருந்தது. இந்த புரட்சியின் போது எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது உத்தியோகபூர்வமாக இன்றும் தெரியவில்லை. எனினும் 10,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் 1987, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 30,000 மக்கள் தென்னிலங்கையில் காணாமல் போயுள்ளனர். இதே போலவே வடக்கு - கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தும் வாழ்கின்றனர். இந்த மோதல்களில் கொலை அச்சுறுத்தல் போராளிகளாலும், அரசினாலும் விடுக்கப்படுகின்றன.

சிறிலங்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, குறிப்பாக காவல்துறை மக்களை பாதுகாக்கும் திறனை இழந்துவிட்டது. வழமையாக கொலை அச்சுறுத்தல்கள் காவல்துறையினரின் பங்களிப்புடனே விடுக்கப்படுவதாகவும் நம்பப்படுகின்றது. இருந்த போதும் மக்கள் கொலை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் போது சிறிலங்கா காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதுடன் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்களுக்கு பாதுகாப்பும் வழங்குவதில்லை.

சாட்சியங்களை பாதுகாக்கும் சட்டங்கள் இல்லாததால் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என காவல்துறையினருக்கு எதுவும் தெரிவதில்லை. இது தொடர்பாக காவல்துறையினருக்கு எந்த வழிகாட்டல்களும் இல்லை.

ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பார்வையில் சிறிலங்காவில் மலிந்து போயுள்ள கொலை அச்சுறுத்தல்கள் நாட்டின் பாதுகாப்பு அற்ற தன்மையை காட்டுகின்றது. எனவே அரசு இதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொலை அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்கு சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும் மனித உரிமை சபை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள், அனைத்துலக சமூகம் என்பன இது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் கலந்துரையாடி இந்த கொலை அச்சுறுத்தல்களை ஒரு முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் கேட்டுக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி>புதினம்.

No comments: