Tuesday, February 20, 2007

அலன் றொக்கின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்: சிறிலங்கா அரசு.

சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் சிறார் கடத்தப்படும் சம்பவங்களில் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும்.

மேற்கண்டவாறு சிறிலங்கா அரசு தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மேற்கோள் காட்டி சர்வதேச வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு சென்றிருந்த அலன் றொக், சிறார் கடத்தல்களில் கருணா குழுவினர் அரச படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

ராதிகா குமாரசுவாமி தனது நேர்காணலில் தெரிவித்ததாவது:

இவை தொடர்பாக விசாரணைகளை நடத்தப்போவதாகவும், அடிக்கடி இவை நிகழ்பவை அல்ல. ஆனாலும் அலன் லொக்கின் அறிக்கை தொடர்பாக நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே நாம் சில கலந்துரையாடல்களை அவர்களுடன் நடத்த வேண்டும் எனவும் அரசு எங்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளும் சிறார் படைசேர்ப்பு தொடர்பாக கறுப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக அழுத்தங்கள் கொண்டுவரப்படலாம். கருணா குழுவுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அவர்கள் மீதும் அழுத்தங்கள் போடப்படலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும் விடுதலைப் புலிகள் மீது றொக்கினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். மேலும் தம்மிடம் இருந்த 17 வயதிற்கு குறைந்தவர்களை தாம் அவர்களின் பெற்றோரிடம் அல்லது சிறார் பராமரிப்பு மையங்களில் கையளித்து விட்டதாக விடுதலைப் புலிகளின் புதிதாக நியமனம் பெற்ற மனித உரிமைகள் தொடர்பக பேச்சாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

அலன் றொக்கின் அறிக்கையில் குறிப்பிட்டது போல படைச் சேர்ப்புக்கான வயது எல்லை 18 அல்ல. அது 17 ஆகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1612 இன் பிரகாரம் போரில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான மனிதாபிமான உதவிப்பொருட்களை தடுப்பது குற்றமாகும்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மருத்துவமனைகளுக்கு பல மாதங்களாக அனுப்பப்படவில்லை. சிறு பிள்ளைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மிகக்குறைவாகவே உள்ளன. கடுமையாக சுகவீனமுற்ற குழந்தைகளுக்கே மருந்துகள் வழங்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சுடன் கிளிநொச்சி மருத்துவமனை கொண்ட போது மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டு விட்டதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு அமைச்சே மருந்துப் பொருட்கள் விடுதலைப் புலிகளின் பகுதிக்கு சென்றடைவதை தடுத்து வருவதாக செல்வி மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: