Sunday, February 18, 2007

சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தப்போவதாக பிரித்தானியா எச்சரிக்கை.

"அனைத்துலக விதிமுறைகளை மீறும் செயல்களிலும், தேவையற்ற இராணுவச் செலவீனங்களையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமாக இருந்தால் சிறிலங்காவிற்கான 41 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் உதவித்தொகையை நிறுத்தப்போவதாக" பிரித்தானியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவிற்குச் சென்ற பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிம் ஹாவல், அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேசத் தயார் என அறிவித்திருந்த சில நாட்களில் பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் இரட்டை வேட அரசியல் கொள்கையில் இதுவும் ஒரு பட்டும் படாததுமான அணுகுமுறை. தற்போதைய அரசின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து விடுதலைப் புலிகளை காப்பாற்றும் ஐரோப்பாவின் நடவடிக்கையில் அது இணைந்துள்ளது. இதே போன்றதொரு செயற்பாட்டை 20 வருடங்களுக்கு முன்னர் வடமராட்சியில் 'ஒபரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போது இந்திய மேற்கொண்டிருந்தது என தென்னிலங்கை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கிலாரி பென், சிறிலங்காவின் திறைசேரியின் செயலாளரான பி.ஜெயசுந்தரவுக்கு எழுதிய கடிதத்தில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற ஆழிப்பேரலை பேரனர்த்தத்தின் போது, அதன் அனைத்துலக கடன் சுமையை குறைக்கும் நோக்குடன் 41 மில்லியன் பவுண்ட்ஸ்களை உதவித்தொகையாக வழங்குவதற்கு பிரித்தானியா உறுதியளித்திருந்தது. ஆனால் இந்த தொகையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பங்களை இடுவதற்கு முன்னர் சிறிலங்கா அரசிடமிருந்து சில உறுதிமொழிகளை தற்போது பிரித்தானியா கோரியுள்ளது. தற்போது கிலாரி பென், எழுதிய கடிதத்தில் இந்த உறுதிமொழிகள் தொடர்பான குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவினால் 10 வருடங்களில் வழங்கப்படும் இந்த உதவித்தொகை மூலம், சிறிலங்கா உலக வங்கியின் அனைத்துலக அபிவிருத்தி அமைப்பிடம் இருந்து முன்னர் பெற்றுக்கொண்ட கடன்களின் சுமையை குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் தற்போது மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்துள்ளன. அனைத்துலக மனிதாபிமான விதிமுறைகள் அங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இராணுவ நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன் இராணுவ செலவீனங்களும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

எனவே இந்த நிலைமைகளில் வழங்கப்படும் உதவித்தொகை வறுமை ஒழிப்பு மற்றும் ஆழிப்பேரலை புனர்நிர்மானம் போன்றவற்றிற்கு செலவிடப்படாது இராணுவ நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பொருளாதார அழுத்தங்களை அமைதிப்பேச்சுக்களை முன்னெடுக்கும் காரணிகளாக பயன்படுத்தும் பிரித்தானியாவின் முறையானது அண்மையில் ஜேர்மனி எடுத்த முடிவை ஒத்துப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்காவில் வன்செயல்கள் குறைந்து அமைதி உருவாகும் வரை அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்தியுள்ளதாகவும் அதனை எல்லா ஐரோப்பிய நாடுகளும் பின்பற்ற வேண்டும் எனவும் ஜேர்மன் அண்மையில் அறிவித்திருந்தது.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களுடன் பேசுவதில்லை என்பது பிரித்தானியாவின் கொள்கை. ஆனால் தற்போது சிறிலங்கா அரசை விடுதலைப் புலிகளுடன் பேசும்படி பிரித்தானியா கூறிவருவதும், பிரித்தானியா, விடுதலைப் புலிகளுடன் நேரடியாக பேச விருப்பம் கொண்டுள்ளதும் அது விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான அறிகுறியே என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: