Tuesday, February 27, 2007

'வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை': சு.ப.தமிழ்ச்செல்வன்.

"நாம், எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையைப் பேணி வருகின்றோம்"

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பேட்டியின் முழுமையான விவரம்:

கேள்வி: அமைதி உடன்பாடு ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமைதி உடன்பாட்டை நீங்கள் தொடர்ந்து மதிக்கப்போகின்றீர்களா அல்லது மீறப் போகின்றீர்களா?

பதில்: இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறியதும் செயலிழக்கச் செய்ததும் சிறிலங்கா அரசாங்கமே. தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பொறுத்த வரையில் இந்த உடன்பாடு என்பது பாரிய எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்குரியதுமான ஆவணமாகவே இருந்தது. ஆனால் சிறிலங்கா அரசு அதில் உள்ள விதிகள் அனைத்தையும் மீறி அதனைச் செயலிழக்கச் செய்திருக்கின்றது. அந்த விதத்தில் இக்கேள்வியை சிறிலங்கா அரசாங்கத்தை நோக்கி கேட்பதே பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

கேள்வி: இருதரப்புமே ஒப்பந்தத்தை மீறியதுதான் வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் என்று நோர்வே கூறியிருக்கின்றது. இருதரப்பும் மீண்டும் அமைதியில் நாட்டம் காட்டினால் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கத் தயார் என்றும் நோர்வே கூறுகின்றது. நோர்வேக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?

பதில்: இரு தரப்பிலும் யுத்த நிறுத்த மீறல்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அந்த மீறல்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சீரானதொரு முறையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதற்காக விடுதலைப் புலிகள் எப்போதுமே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.

ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படை விதிகள் அனைத்தையுமே தகர்த்தெறிந்து விட்டு இன்று சிறிலங்கா அரசாங்கம், எமது மக்கள் மீது படுகொலைகளையும், வன்முறைகளையும், யுத்த நிறுத்த உடன்பாட்டை முற்றாகச் சிதைக்கும் விதத்தில் நேரடி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்குள் சிறிலங்கா அரச படைகள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றும் பல இலட்சக்கணக்கான மக்களை அவர்களின் சொந்த வாழிடங்களில் இருந்து வெளியேற்றியும் பெரும் மனிதப் பேரவலத்தை நடத்தி வருகின்றது. இதுவே இந்த யுத்த நிறுத்த உடன்பாடு முற்றாக செயலிழக்க காரணமாகியது. இந்தப் பின்னணியை நோர்வே புரிந்துகொள்ளும் என்றே நம்புகின்றேன்.

கேள்வி: வாகரையில் அரசாங்கம் தாக்கியபோது இயக்கம் எதிர்ப்பே கொடுக்கவில்லை. இப்போது இராணுவத்தினரின் கை ஓங்கியுள்ளதாக அனைவரும் சொல்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் உடன்பாடு செய்ததே தவறு என்று சொன்னார். இந்த நிலப்பகுதிகள் புலிகளுக்கு என்று அளிக்கப்பட்டது தவறு, புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருக்கவே கூடாது என்கிறார். இதற்கு காரணம் இராணுவ ரீதியில் அரச தலைவர் கை ஓங்கியிருப்பதுதான். இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: சிறிலங்கா அரசானது மூன்று தசாப்தங்களாக இராணுவ ரீதியாக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும், அவர்களை அடிமைப்படுத்துவதற்கும் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கும் முயன்றிருக்கிறது. ஆனால் எதுவுமே அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை. காலத்திற்கு காலம் இராணுவத்தின் வலிமை அதிகரித்திருப்பது போல தோன்றினாலும் ஈற்றில் தமிழ் மக்களின் நீதியான நியாயமான சுதந்திரப் போராட்டமே வெற்றி பெற்றிருக்கின்றது.

அதுபோல ஒவ்வொரு முறையும் அமைதி முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இராணுவ ரீதியான நடவடிக்கைகளைச் செய்திருக்கின்றனர். உதாரணமாக குடாநாட்டை இவர்கள் ஆக்கிரமித்த பின் 'ஜெயசிக்குறு' நடவடிக்கையும் பெரு நிலப்பரப்பில் தொடர் வெற்றிகளினால் இராணுவத்தின் கையோங்கியிருக்கின்றது என்றும் பிரச்சாரம் செய்தனர். ஈற்றில் அந்த இராணுவத்திற்கு நடந்த முடிவை நீங்கள் கடந்த கால வரலாற்றில் பார்க்கலாம். அதுபோல தான் இப்போது ராஜபக்சவும் அதே பாணியில் செயற்படத் தொடங்கியிருக்கின்றார். இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு அதனை விமர்சித்துக்கொண்டு செயலிழக்கச் செய்திருக்கின்றார். இதற்கு தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் எதிர்காலத்தில் சரியான பதிலை வழங்கும் போது உங்களுக்கு உண்மை நிலை புரியவரும்.

கேள்வி: கிழக்கிலும் வடக்கிலும் மட்டுமின்றி தெற்கிலும் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இலங்கையின் தமிழர்களின் வாழ்வு பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் நீங்கள் மெளனமாக இருக்கிறீர்கள். புலிகள் அமைப்பு இருக்கின்றதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது. சிறிலங்காவின் எந்த அரச தலைவரும் இதுவரை சொல்லாத அளவுக்கு, புலிகளுடன் ஒப்பந்தம் செய்ததே தவறு என்று மகிந்த சொல்லும் அளவுக்கு நீங்கள் அமைதி காத்து வருகிறீர்கள். இது என்ன வியூகம்?

பதில்: நாம் எப்போதுமே கதைப்பதனை விட செயலிலேயே நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். செயற்பாடுகளே எந்த விடயத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கு உண்மையான காரணமாக அமையும். அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான நடவடிக்கைகள் முன்னைய சிங்களத் தலைவர்களது செயற்பாடுபோலவே இருக்கின்றது.

இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய இன அழிப்பு நடவடிக்கை சகல மட்டங்களிலுமே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கு வரை அதுதான் நடைபெறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசத்தை சிங்கள இனவாதிகளினுடைய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது ஒன்றே இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்கும் என நாம் நம்புகின்றோம்.

கேள்வி: மனிதாபிமான அடிப்படையில் தமிழ் மக்களுக்காக வலுவான குரல் எழுப்ப அனைத்துலக நாடுகள் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியிலும் பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையிலும் புலிகளினுடைய குரல் அனைத்துலக சமூகத்தில் முடக்கப்பட்டு விடுகின்றது. இந்நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழ் மக்களின் அவலங்களை எடுத்துச் சொல்லவும், தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்துலக சமூகத்தை வலியுறுத்தவும் கூடிய ஒரு நடுநிலையான அனைத்துலக அறிவுசார் குழு ஏன் உருவாக்கப்படவில்லை? இதைப் புலிகளும் செய்யத் தவறியது ஏன்?

பதில்: தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடி வருகின்றனர். இன்று அனைத்துலக ஒழுங்கில் நாடுகளுக்கிருக்கின்ற வாய்ப்புக்களும் வசதிகளும் சுதந்திரத்திற்காக போராடுகின்ற அமைப்புகளுக்கோ மக்களுக்கோ இருப்பதில்லை. ஆனால் இந்த நிலையைக் கொண்டு வருவதானால் மக்கள் வேகமாக தமது சுதந்திரப் போராட்டத்தில் முன்னேறி நாடுகளினுடைய அங்கிகாரத்தையும் ஆதரவையும் பெறலாம். எப்போதும் உலக நாடுகள் தங்களினுடைய நலன்களை கருத்திற்கொண்டு அரசுகளோடு உறவுகளை வைத்திருக்கின்றன.

இத்தகைய போக்குக் காரணமாக எங்களினுடைய நியாயங்களையும் நீதியையும் அனைத்துலகத்திற்கு கொண்டு செல்வது என்பது கடினமாக இருக்கும். இருப்பினும் எமது புலம்பெயர்ந்த மக்கள், புத்திஜீவிகள், அறிவுசார் நிபுணர்கள் எல்லோருமே எமது போராட்டத்தின் நியாயத் தன்மையினை எடுத்துக் கூற முயன்று வருகின்றனர். அது இப்போதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கேள்வி: உங்களது அடுத்த ஆலோசகர் அல்லது அனைத்துலகத் தூதுவராக யாரை நியமிக்கப் போகின்றீர்கள்? இன்றைய நிலையில் அப்படி ஒருவர் அல்லது குரல் இயக்கத்துக்குத் தேவை என அரசியல் கணிப்பாளர்கள் சொல்கின்றார்கள். இதற்கு உங்களது பதில் என்ன?

பதில்: எமது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எமது தாயகத்திலிருந்து தான் தன்னுடைய அரசியல் பணியினை ஆற்றிக்கொண்டிருந்தார். இறுதிக்காலத்தில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதனால் அதற்கான சிகிச்சை பெறும் நோக்கிலேயே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பின் அங்கேயே அனைத்துலக அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற நிலை உருவானது.

எம்மைப் பொறுத்த வரையில் எமது தலைமையகம் எமது தாயகத்திலேயே இருக்கின்றது. இங்கிருந்தே எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வல்லமை எம்மிடம் இருக்கின்றது. அதன் நிமித்தம் ஒவ்வொரு நாடுகளிலும் எமது புலம்பெயர்ந்த மக்களினது அமைப்புக்கள் இருக்கின்றன. அதற்கு பொறுப்பானவர்கள் இருக்கின்றனர். அரசியல் நடவடிக்கைகளுக்கும் எமது பரப்புரை நடவடிக்கைகளுக்கும் கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து நாடுகளிலுமே செயற்பட்டு வருகின்றன. ஆகவே இப்போது அத்தகைய தேவை ஒன்று இல்லை என்றே நாம் நினைக்கின்றோம். அப்படி ஒரு தேவை ஏற்படுமாயின் எமது தலைமை அதற்கான முடிவை எடுக்கும் என்று நம்புகின்றேன்.

கேள்வி: வடக்கில் இராணுவம் படைகளை குவிப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. தென்மராட்சி தாக்கப்பட்டால் உங்களது பதில் தாக்குதல் எப்படி இருக்கும்? வாகரை போன்றா?

பதில்: இராணுவ நடவடிக்கைகள் பற்றியோ அல்லது அதனை முறியடிப்பது பற்றியோ நாம் முற்கூட்டியே எதிர்வு கூறுவது இல்லை. அந்தந்த நடவடிக்கைகளை நாம் அவ்வப்போது எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கூடாகவே அதற்கான திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளோம். ஆகவே இராணுவ தீர்மானங்களையும் நான் இப்போது குறிப்பிடுவது பொருத்தமில்லை என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: புலிகள் நிலையில் மாற்றம் ஏற்பட்டால், அவர்களைப் பற்றிய கொள்கை மாறும் என்று அமெரிக்கா இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: புலிகளினுடைய நிலையில் மாற்றம் என்பது எதன் அடிப்படையில் என்பது எமக்கு விளங்கவில்லை. நாம் எமது மக்களினுடைய கௌரவத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடப் புறப்பட்டவர்கள் என்ற வகையில் எங்களுடைய மக்களின் ஜனநாயகம், கௌரவம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படுகின்ற சூழல் வருகின்ற வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கொள்கையை இலட்சியமாகக் கொண்டு அதில் முன்னேறிச் செல்வதுதான் சரியானதாக இருக்கும். ஆகவே அவர்கள் எந்த அடிப்படையில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கின்றனர் என்பது தெரியாது நான் கருத்துத் தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

கேள்வி: இந்திய அரசாங்கம், சிறிலங்கா அரசு, எதிர்த்தரப்பு, தமிழ்க் கூட்டணி என்று அனைத்துத் தரப்பையும் தனித்தனியாக அழைத்துக் கருத்துக் கேட்கின்றது. இந்தியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையில் நடந்த உடன்பாட்டுக்குப் பதிலாக இந்தியத் தலைமையில் புதிய உடன்பாடு எதாவது செய்யப் போகின்றார்களா? அப்படி ஒரு உடன்பாடு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்? அனைத்துலக நன்கொடை நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்?

பதில்: முன்பொரு தடவை இந்திய அரசும் சிறிலங்கா அரசும் ஏற்படுத்திக் கொண்ட ஒரு ஒப்பந்தம் கூட கடந்த காலத்தில் செயலிழந்து போனது. அதற்கு சிறிலங்காவில் இருக்கின்ற சிங்கள இனவாதிகளும் அரசாங்கங்களும் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்க முன்வரவில்லை. ஒரு தலைப்பட்சமாக அவர்கள் செயற்பட்டு ஒப்பந்தத்தைச் செயலிழக்கச் செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்ட விடயமான வடக்கு - கிழக்கு இணைப்பைக்கூட இல்லாமல் செய்திருக்கின்றனர்.

அந்த விதத்தில் ஒருபோதும் இந்தியாவும் சிறிலங்காவும் உடன்பாடு காண்பதால் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையிலும் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ற வகையிலும் தமிழ் மக்களுடைய அபிலாசைகள், விருப்பங்களை அறிந்து அவர்களுடைய ஆதரவோடும் முழுப் பங்களிப்போடும் ஒரு தீர்வுக்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அந்நிலையை தற்போது இந்தியா உணர்ந்திருக்கின்றது என்றே நாம் நினைக்கின்றோம். இங்குள்ள உண்மை நிலமைகளை அவர்கள் அறிய விரும்பலாம். அறிந்து தீர்க்கமானதும் தமிழர்களுடைய எதிர்காலம் தொடர்பானதுமான முடிவுகளை எடுக்கின்ற பட்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கருத்துக்களை முன்வைக்கக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: இவ்வளவு நாளும் இல்லாமல் இயக்கத்தைப் பற்றி தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. பிடிபடும் படகுகளும் ஆட்களும் உள்ளபடியே புலிகளைச் சேர்ந்தவைதானா? தமிழ்நாட்டில் இருந்து உங்களுக்கு வெடிமருந்துகளும் பொருட்களும் கடத்தப்படுகின்றனவா? இந்த செய்திகளில் உண்மை இருக்கிறதா? இதன் பின்னணி என்ன?

பதில்: இங்கு இப்போது, சிறிலங்கா அரசு பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறது. எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பன தடுக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட நிலையில் அயல் நாடான இந்தியாவிலிருந்து இப்படியான சில பொருட்களைக் கடத்துவதற்கு சில தனிப்பட்டவர்கள் முயலலாம். இதை எமது விடுதலை அமைப்பின் மீது குற்றஞ் சுமத்துவதற்காக பயன்படுத்தி எமது அமைப்பை களங்கப்படுத்தும் முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

நாம், இந்தியாவிலிருந்தோ தமிழ்நாட்டிலிருந்தோ வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கடத்தவேண்டிய தேவையில்லை. நாம் எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையை பேணி வருகின்றோம். அதனால் வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை. இது திட்டமிட்டு தமிழ்நாட்டில் வாழ்கின்ற எமது உறவுகள் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக, மக்களின் அவலங்கள் தொடர்பாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வலைகளை இல்லாது ஒழிப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்ற பொய்ப் பிரச்சார முயற்சியாகவே இதைப் நாம் பார்கின்றோம்.

கேள்வி: 2002 ஆம் ஆண்டு உடன்பாட்டில் திருத்தம் செய்யலாம் என்று அமெரிக்கா சொல்லியிருப்பதற்கு உங்கள் கருத்து என்ன? அப்படி திருத்தம் செய்வதானால் அதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?

பதில்: யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஒரு உக்கிரமான போருக்கு தற்காலிகமான முடிவொன்றைக் கொண்டு வந்து தீர்வுக்கான வழியை ஏற்படுத்துகின்ற முயற்சியினால் வந்ததே. முன்னைய அனைத்து உடன்பாடுகளுமே செயலிழந்து போன நிலையில் அனைத்துலக ஆதரவுடனும் பெரும் வரவேற்புடனும் ஒத்துழைப்புடனும் நோர்வேத் தரப்பால் கொண்டுவரப்பட்ட உடன்பாடே இதுவாகும்.

தமிழ் மக்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இது இருக்கின்றது. இந்த உடன்பாட்டைத் திருத்துவது என்பதையோ மாற்றியமைப்பது என்பதையோ தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது மீண்டும் அமைதியை கொண்டுவர வழிகோலும் என்றும் நம்பவில்லை. இருக்கின்ற உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்துவதே அமைதித் தீர்வுக்கான சரியான வழியைத் திறக்குமென நான் நினைக்கின்றேன்.

கேள்வி: அயர்லாந்து பிரச்சினைக்குத் தீர்வு கண்டது போல் இலங்கை இனப்பிரச்சினைக்கு நாங்கள் தீர்வு காண்கின்றோம். அமைதிப் பேச்சை முன்னெடுத்து, புலிகளுடன் பேச தயாராக உள்ளோம் என்று பிரித்தானிய கூறியிருக்கிறது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இப்போது நோர்வே எடுக்கும் பணியை பிரித்தானிய மேற்கோண்டால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: நோர்வேயும் பல்வேறு இனப்பிணக்குகள் நடைபெறுகின்ற நாடுகள் மத்தியில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு நடுநிலையோடும் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு அனைத்துலக அரங்கில் மதிப்பைப் பெற்ற நாடாக இருக்கின்றது. அத்தகைய நாடொன்றின் முயற்சிகளைக் கூட இன்று தூக்கியெறிந்து செயலிழக்கச் செய்துள்ளது சிறிலங்கா அரசாங்கம். அவர்கள் ஏனைய நாடுகளின் முயற்சிகளை எவ்வளவு தூரம் அனுசரிப்பார்கள் அல்லது ஏற்றுக்கொள்வார்கள் என்பது எமக்குச் சந்தேகமாகவே உள்ளது. அதனடிப்படையில் எல்லோருமே அமைதி சமாதானத்தின் அடிப்படையில் ஊக்குவிக்கும் முகமாக தமது கருத்துக்களை கூறிவருகிறார்கள். ஆனால் அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவரத்தக்க முயற்சிகளை எடுக்காது செய்யும் எந்தவித முயற்சிகளும் பலனளிக்கப்போவதில்லை. அதனையே நாமும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதில் இவர்கள் முன்னேற்றமடைந்த பின்னர் தான் இவர்களுடைய அமைதி முயற்சிகள் தமிழ் மக்களால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதைச் சொல்லக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: இராணுவமும் கருணா குழுவும் எந்தெந்த வழிகளின் மனித உரிமைகளை மீறுகின்றனர்?

பதில்: இராணுவமும் கருணா குழுவும் சகல வழிகளிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டு விதிகள் அனைத்தையுமே முறித்து உடைத்து இன்று பெருமளவு மீறல்களைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், கொள்ளைகள், சிறுவர்களை கடத்தல், பாலியல் வல்லுறவுகள் என சகலவிதமான துன்பங்களையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

கேள்வி: சிறார்களைப் படையில் சேர்ப்பதை புலிகள் இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளதே. இதற்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

பதில்: நாங்கள் ஏற்கனவே சிறார்கள் படையில் சேர்வதற்கான சந்தர்ப்பங்களை இல்லாது ஒழிப்பதற்கு பல முயற்சிகளை இந்த சமாதான காலப்பகுதியில் எடுத்து வந்தோம். ஆனால் யுத்தத்தினை எங்கள் மக்கள் மீது திணித்து சிறார்கள், பெண்கள் என அனைவருமே இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் பல சிறுவர்கள் எம்மிடம் வந்து தஞ்சம் கோருகின்றனர். தங்களது பாதுகாப்பைத் தேடிக்கொள்கின்றனர். ஆகையினால் நாம் இவர்களுக்குரிய புனர்வாழ்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றோமே தவிர சிறார் ஆட்சேர்ப்பில் நாம் ஈடுபடவில்லை. இதனை நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆதாரபூர்வமாக பல புள்ளிவிபரங்களுடன் அனுப்பியுள்ளோம். தொடர்ந்து இந்த ஆண்டில் தமிழீழ தேசிய சட்டத்தில் சிறார் காப்புச் சட்டத்தினையும் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம். சிறுவர்கள் எக்காரணங்களை முன்னிட்டும் எமது ஆயுதப் படையில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்பதனை நாம் ஆணித்தரமாக கூறுகின்றோம்.

கேள்வி: மட்டக்களப்பில் ஐயரை நீங்கள்தான் கொன்றதாகப் பல தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகின்றது. புலிகள் இயக்கம் வெறும் இராணுவ இயக்கமாக மட்டுமின்றி பெரும் அரசியல் அமைப்பாக இப்போது உருவாகி உள்ள நிலையில், இத்தகைய கொலைகளைச் செய்ய வேண்டியது அவசியம்தானா? அப்படி நீங்கள் அந்தக் கொலை செய்யவில்லை என்றால், அதை யார் செய்தார்கள் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

பதில்: மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவம் இந்த மதகுருவை பலவந்தமாக பயமுறுத்தி, மிரட்டிக் கொண்டு சென்றே வாகரையில் மகிந்த ராஜபக்சவுக்கு மாலை அணிவிக்க செய்ததும் நிகழ்வில் பங்குபெறச் செய்ததும் நிகழ்ந்தது. இதன் பொருட்டு சிறிலங்கா இராணுவத்துடன் பல தடவை இவர் முரண்பட்டதாக எமது விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

ஆகவே, கருணா குழுவோ இராணுவமோ தான் இந்தப் படுகொலையை செய்திருக்கின்றது. பழிவாங்கும் நோக்கத்துடன் இதனைச் செய்துவிட்டு புலிகள் மீது இப்படியானதொரு குற்றச்சாட்டை திணித்து அனைத்துலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் தான் இப்படிச் செய்திருக்கின்றனர். உண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய கௌரவம், அதனுடைய வளர்ச்சி, அங்கீகாரத்தைக் குலைக்கும் நோக்குடன் திட்டமிட்டே அரசும், கருணா குழுவும் இதனைச் செய்திருக்கின்றது என்பதனை நாங்கள் இப்போது இரகசியத் தகவல்கள் மூலம் அறிந்திருக்கின்றோம்.

கேள்வி: தலைவர் வேறு நாட்டுக்குச் செல்லப் போகின்றார் என்று சொல்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

பதில்: தமிழீழ தேசியத் தலைவரைப் பொறுத்த வரையில் அவர் தன்னுடைய தாயகத்தையும் தனது மக்களையும் நம்பியே இந்த விடுதலை அமைப்பை ஆரம்பத்திலிருந்து கட்டி வளர்த்து வந்திருக்கின்றார். எந்த நாடுகளினதோ அனைத்துலக உதவிகளையோ நம்பி இதனை அவர் ஆரம்பிக்கவுமில்லை வளர்த்தெடுக்கவும் இமில்லை.

முழுக்க, முழுக்க தன்னிலும் தனது மக்களிலும் தன் தேசத்தின் மீதும் முழு நம்பிக்கையோடுதான் இந்த விடுதலை அமைப்பை பிரமாண்டமான பலமிக்கதாக கட்டியெழுப்பியிருக்கின்றார். எப்போதும் எமது தேசியத் தலைவரோ எமது தளபதிகளோ போராளிகளோ எவருமே எமது தாயகத்தையும் எங்களுடைய மக்களையும் விட்டு அகலப்போவதில்லை. மீன்களுக்கு கடலிலே இருப்பது பலமானது போல காட்டு விலங்குகளுக்கு காடே பலமிக்கதாக இருப்பது போல எமக்கும் எமது சொந்த மக்களுக்குள்ளேயே சொந்த மண்ணிலேயே இருப்பதுதான் பலமாகும். இந்த வலிமையை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. அந்த விதத்தில் இது ஒரு தவறான கேள்வியென்றே நான் நினைக்கின்றேன்.
நன்றி>புதினம்.

No comments: