சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமைகளில் முன்னேற்றம் தென்படும்வரை உதவிவழங்கும் நாடுகள் உதவித் தொகையை வழங்கப்போவதில்லை என உதவிவழங்கும் நாடுகள் முடிவெடுத்துள்ளன. மேலும் முதலில் அவர்களால் கொடுக்கப்பட் வாக்குறுதிகளையும் மீளப்பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் உதவிவழங்கும் நாடுகள் வந்துள்ளார்கள் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காலியில் நடைபெற்ற உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் அரசை அமைதியற்சிகளில் ஈடுபட வைப்பதற்காகவே கூட்டப்பட்டது. எனவே தான் உதவிவழங்கும் நாடுகள் நிதியை வழங்குவதாக ஒத்துக்கொள்ளவில்லை, அதாவது அரசு விரைவாக பேச்சுக்களின் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதே மாநாட்டின் நோக்கம் என உலகவங்கியின் ஆசியா பிராந்திய உதவித் தலைவர் ராபூல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வாரம் காலியில் நடைபெற்ற மாநாட்டில் உதவித்தொகையை வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் அரசு விடுதலைப்புலிகளுடன் நேரடிப்பேச்சுக்களை நிகழ்த்தி இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.
காலியில் நடைபெற்ற மாநாடு சிறீலங்காவிற்கான உதவித்தொகையை வழங்கும் மாநாடாக இருந்தால், உதவிவழங்கும் நாடுகள் குறிப்பிட்ட தொகையை வழங்க சம்மதித்திருந்தால் மாநாட்டின் முடிவில் சிறீலங்காவும், உதவிவழங்கும் நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கையை வெளியிட்டிருப்பார்கள்.
உதவிவழங்கும் நாடுகள் பயங்கரவாதத்தையும், அபிவிருத்தியையும் வேறாக பார்க்க முயற்சிக்கவில்லை மாறாக சிறீலங்காவில் அமைதியையும் உறுதித்தன்மையையும் ஏற்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள உறுதித்தன்மை அற்றநிலையால் நாட்டின் மொத்த வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு விரையமாகின்றது. அப்படி இல்லாது விட்டால் சிறீலங்கா ஒரு நடுத்தர வருமானமுள்ள நாடாக விளங்கியிருக்கும். அங்கு வறுமை குறைந்திருக்கும்.
சிறீலங்காவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவே சர்வதேச சமூகம் எண்ணுகின்றது. எனவே அமைதிமுயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள்.
பொருளாதார வளர்ச்சி 8 - 9 விகிதமாக இருந்த போதும் நடைபெறும் போரினால் வடபகுதியில் பாரிய செலவீனம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அன்னியர்கள் எனவே கருத்துக்களை தான் கூறமுடியும், அன்னியர்கள் இந்த பிரச்சனையில் என்ன பங்காற்ற முடியும் என்பதற்கு ஒரு எல்லை உள்ளது. சர்வதேச சமூகம் இந்த பிரச்சனையில் தலையிடுவதற்கும் ஒரு எல்லை உண்டு.
இந்த பிரச்சனை சிறீலங்காவின் பிரச்சனை எனவே சிறீலங்கா மக்களால் தான் தீர்வுகாண முடியும். வெளியாட்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான எமது செயற்பாடுகள் ஒரு உதவியாக அமையலாம். அமைதி முயற்சிகளை உறுதிப்படுத்த நாம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் உதாரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யலாம்.
அரசு யாருடன் பேசுகின்றது என்பது முக்கியமல்ல, அரசு என்ன தீர்வை தமிழ் மக்களுக்கு வழங்கப்போகின்றது என்பது தான் முக்கியமானது. அரசு முக்கியமான தரப்புடன் பேசி ஒரு தீர்வை காணவேண்டும்.
உதவிவழங்கும் நாடுகள் அரசிடம் ஒரு தெளிவான தீர்வுத்திட்டத்தை காண்பிக்குமாறு கேட்டிருந்தார்கள் ஆனால் அரசு அதை செய்வதில் அக்கறையுடன் செயற்படவில்லை. இது தான் அரசாங்கத்தின் இயல்பான நிலையாக உள்ளது.
காலியில் நடந்த மாநாட்டில் இருந்து உதவிவழங்கும் நாடுகள் வெளிநடப்பு செய்தார்களா என்று நீங்கள் கேட்டால் எனது பதில் இல்லை என்பதே. ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் நேபாளத்தில் ஒரு தீர்வை எட்ட முடியும் என்றால் ஏன் சிறீலங்காவில் முடியாது? உலகம் வேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது போட்டியாளர்கள் சந்தைகளை கைப்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கு நிலமைகள் முன்னேற்றம் இன்றி கிடக்கின்றன.
எனது கடைசி விஜயத்தின் போது வடக்கில் இருந்த நிலமைகளில் இன்றும் முன்னேற்றம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.
Sunday, February 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment