Wednesday, February 07, 2007

புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு!--ஒட்டுக்குழுவின் கருத்து.

புலிகளின் பிரச்சினை வேறு; தமிழர்களின் விருப்பம் வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு தமிழக முதல்வர் கருமம் ஆற்றவேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழக மண் தமிழர்களின் வேரடி மண்! தமிழுக்கு முதல்வரான நீங்கள் தமிழகத்திற்கு முதல்வராயிருப்பதே தமிழகம் பெற்றிருக்கும் மரியாதை மகுடம்! இந்த பொய்யாப் புகழ்ச்சியின் மகிழ்ச்சியில் நாங்களும் நனைகின்றோம்.
கடல் இடைநின்று தடுத்தாலும்... உடல் வேறு ஆனாலும்... எங்கள் உயிர் மூச்சு ஒன்றல்லவா!... உங்கள் உணர்வுகளின் கொதிப்பும், உயிர்த்துடிப்பும் தமிழகத்திற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் உறுதிமிக்க உறவுப்பாலத்தை அமைத்திருக்கின்றன. இதனால் எம்மிடையே உற்சாகம் ஊற்றெடுத்து பாய்கின்றது.

ஈழத்தமிழர்கள் எழுந்தால் எழுவதற்கும், அழுதால் அழுவதற்கும், உயிர் பிரிந்தால் உயிர் துடிப்பதற்கும் என்று தளம் கொடுத்த தலைமகன் நீங்கள். ஈழத்தமிழர்கள் விரும்பும் வாழ்வியல் உரிமையும், கொண்டிருக்கும் அரசியல் உணர்வும் நீங்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனாலும், எமது மக்களின் குரலாக உங்கள் கவனத்திற்கு என்று கருதி இம்மடலை எழுதுகின்றேன்.

வெறும் உணர்ச்சிகளின் வேகமும் துப்பாக்கிகளின் மோகமும் யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்த வேகமும் மோகமும் மக்கள் மீதான நேசம் என்று கருதி விடமுடியாது. இது தனியொரு குழுவின் இருப்புக்கான யுத்தமே ஒழிய மக்களின் விருப்புக்கான விடயமல்ல. வெல்லப்படமுடியாத ஒரு யுத்தத்தில் நாம் கொல்லப்பட வேண்டும் என்று எந்த இனமும் விரும்பாது.

அப்பாவி உயிர்களின் அழிவுகளில் அரசியல் ஆதாயம் தேடும் சுயநலன்கள் எமது மண்ணையும் மக்களையும் சுடுகாடு நோக்கி வழிகாட்டுகின்றன. இழந்த சுதந்திரத்திற்காக எழுந்த எமது தேசம் இருந்த சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றது. சோறு இல்லை என்று அழுகின்ற வேதனை வெண்பாக்களும் இங்கு தேசிய கீதமாக ஒலிக்கின்றன.

பகுத்தறிவுப் பாசறையும் பட்டறிந்த அனுபவங்களும் கொண்டவர் கலைஞர் என்று ஈழத்தமிழர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் தரும் வாழ்விற்கும் அச்சம் தரும் போருக்கும் யார் காரணம் என்பதை புரிந்திருப்பீர்கள்.
அமைதித் தீர்விற்கான வழிகளை அடைத்து மூடிவிட்டு யுத்தப் பிரகடனம் செய்துகொண்டிருக்கும் புலித்தலைமையே காரணம் என்பது ஈழத்தமிழர்களின் கருத்து. எமது மக்கள் தமிழீழம் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட தங்க விலங்கு அணிந்த கைதிகள். எமது மக்கள் உண்மைகள் மறுக்கப்பட்ட பூமியில் உதடுகள் பூட்டப்பட்ட பேசா மடந்தைகளாகி இருக்கின்றனர். ஆகவேதான் எமது மக்களின் குரலாக நான் உங்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றேன்!

மக்களது பிரச்சினை வேறு புலித் தலைமையின் பிரச்சினை வேறு! எமது மக்கள் அமைதிப் பூங்காவில் அரசியலுரிமை பெற்றவர்களாக அகமகிழ்ந்து வாழ விரும்புகிறார்கள். சம உரிமையோடு சமாதான சகவாழ்வு காண விரும்புகிறார்கள். ஆனால் புலித் தலைமையோ வெல்லப்பட முடியாத யுத்தத்தை விரும்பி நிற்கிறது. அப்பாவி இளைஞர், யுவதிகளை கட்டாயப்படுத்தி அவர்களைப் போருக்குப் பலி கொடுத்து வருகின்றது.

இருதரப்பும் கொண்டிருக்கும் இரு வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு காரியமாற்ற கலைஞர் முன்வரவேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம் ஆகும். யுத்தத்தால் யாரும் வெல்லமுடியாது. யுத்தம் தரும் அழிவுகளுக்கு யாரும் அர்த்தம் சொல்லமுடியாது. ஆகவே, அமைதித்தீர்வு அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்வு மட்டும்தான். அதற்காக நீங்கள் இனிவரும் காலங்களில் இன்னும் பல மடங்கு பங்காற்றுவீர்கள் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
ஈழத்தமிழர்கள் மீது கருணைகொண்ட கலைஞர், காரியம் முடிப்பார் என்பது எமது மக்களின் அசையாத நம்பிக்கை.

முதுமையிலும் தளராத உங்கள் இளமையான உணர்வுகள் உங்களுக்கு தொடர்ந்தும் உற்சாகம் கொடுக்கவேண்டும் என்று நலமாக வாழ நாம் வாழ்த்துகின்றோம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>Sudaroli.

2 comments:

Anonymous said...

தன் வயிறு வளர்க்க சிங்களத்துடன் ஒட்டி இருக்கும் இவ் இழிபிறப்பு தமிழினத்தின் குரலா?

Anonymous said...

அனானி நண்பா.உங்களுக்கு செயலலிதாவின் மீது ஏன் இவ்வளவு
வெறுப்பு?

என்ன இருந்தாலும் முன்னாள் முதல்வரை இழிபிறவி என்றெல்லாம்
கூறக்கூடாது.