Tuesday, February 06, 2007

இலங்கைக்கு விசேட சமாதான அனுசரணையாளரை நியமிக்கும்படி அமெரிக்க சட்டசபை அழுத்தம்.

‘ஹவுஸ் ஒஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ்’ என்றழைக்கப்படும் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டசபையின் 38 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ. புஷ்ஷிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கையில், சிறீலங்கா இனப்பிரச்சனைக்கு சமாதானத் தீர்வை எட்டுவதற்கு ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை அமெரிக்க அரசு நியமிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அவர்களது கடிதத்தில்:

சிறீலங்காவில் மீண்டும் அதிகரித்து வரும் வன்முறைகள், கொலைகள் தொடர்பாகவும், குறிப்பாக அங்கு தீர்க்கமுடியாத அளவுக்கு அதிகரித்துள்ள கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலும் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.

சர்வதேச பிரச்சனைகளில் தலைமைத்துவப் பண்பை நிலைநிறுத்திவரும் அமெரிக்காவுக்கு, சிறீலங்காவில் துன்புறும் மக்களின் இன்னல்களைத் தீர்ப்பதற்கும் நேரம் வந்துவிட்டது.

அங்கிருந்து கிடைக்கும் களநிலைத் தகவல்கள், அப்பகுதியில் மிகவும் மோசமான சூழ்நிலை உருவாகியிருப்பதை எமக்கு எடுத்துக் காட்டுகிறது. இதனால் நாம் மிகவும் குழப்பமடைந்துள்ளோம், கவலையடைந்திருக்கிறோம்.

தொடரும் வன்முறைகளும் கொலைகளும் பலமடங்கு அதிகரித்திருப்பதனால், தற்போதுள்ள யுத்தநிறுத்த ஒப்பந்தமும் சமாதான முயற்சிகளும் செயலற்றுப் போய்விடுமென்றும், முழுமையான போர் மீண்டும் உருவாகிவிடுமென்றும் அச்சம் எழுந்துள்ளது.

2002ல் நோர்வே அனுசரணையாளர்களால் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் எழுத்தில் இன்னும் நடைமுறையில் உள்ள போதிலும், சிறீலங்கா அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தாக்குதல்களைத் தொடர்கிறார்கள். 4000 ற்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஒக்ரோபர் 2006ல் இறுதியாக நடைபெற்ற சமாதானப் பேச்சுக்களும் தோல்வியடைந்துவிட்டன. யப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற நாடுகள், இரு தரப்பையும் சமாதானப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பும்படி தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்ற போதிலும், அதை இரு தரப்பினரும் மதித்து நடப்பதாகத் தெரியவில்லை.

பேச்சுவார்த்தை மூலமே தீர்வு எட்டப்பட வேண்டுமென அமெரிக்கா ஏற்கனவே சிறீலங்கா அரசுக்கு தெளிவாகக் கூறியிருக்கிறது. இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்பதை அமெரிக்கா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவுமென்று உறுதி வழங்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகளுடன் சிறீலங்கா அரசு பேச்சுக்களைத் தொடர்ந்து, தீர்வொன்றை எட்டவேண்டுமென்று ஏற்கனவே அமெரிக்கா பகிரங்கமாகக் கூறியுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிடும் தருணம் அமெரிக்க அரசுக்கு வந்துவிட்டதாகவே நாம் உணர்கிறோம்.

இந்த வகையில், மிக உயர்மட்ட அதிகாரத்திலுள்ள சமாதான அனுசரணைப் பணியாளர் ஒருவரை, அமெரிக்க அரசின் பிரதிநிதியாக, இலங்கைப் பிரச்சனைத் தீர்வு தொடர்பாக நியமிக்க வேண்டும். இந்தப் பிரதிநிதி, நேரடியாக அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் அல்லது இராஜாங்க செயலாளர் கொன்டலீசா ரைஸ் ஆகிய இருவரில் ஒருவருக்கு பதில்கூறும் வகையில், உச்ச அதிகாரங்களுடனான பிரதிநிதியாக நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டுள்ள 38 உறுப்பினர்களில் கணிசமான ஆளும் பழமைவாதக் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூ ஜேர்சி ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதியான றஷ் ஹோல்ட் முன்னெடுத்த இந்தக் கடித மூலமான வேண்டுகோளுக்கு, சட்டசபையில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
நன்றி>லங்காசிறீ.

No comments: