Tuesday, February 20, 2007

ஈழத்திற்கு நீளும் தமிழர் உதவிக்கரங்கள், பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வாரி வழங்கும் தமிழக மக்கள்.

சிங்கள அரசின் வஞ்சனையின் விளைவாக பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உணவு-மருந்துப் பொருட்களை வாரி வாரி வழங்கி வருகின்றனர். தமிழகமெங்கும் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிக்கும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம், ஈரோடு, வேலூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். மேலும் திருச்சி, புதுச்சேரி, திருப்பூர், கரூர் மற்றும் பல நகரங்களில் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இவை குறித்த செய்திகள் வருமாறு :

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் 28-01-07 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் விழுப்புரம் மந்தைக்கரைத் திடலில் ஈழத்தமிழர் துயர்துடைக்க தமிழ் மக்கள் இனவுணர்வுடன் அளித்த உணவு- மருந்துப் பொருட்கள் கையளிக்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் எழில். இளங்கோ தலைமையேற்றார். சா. வெற்றியழகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மு. கந்தசாமி, செஞ்சி நா. இராசநாயகம், கள்ளக்குறிச்சி இரா.மா. பிரபு, பா. சோதிநரசிம்மன், புதுவை ந.மு. தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கா. பரந்தாமன், இராசேந்திரசோழன் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
இலங்கை நாடாளுமன்றத் தமிழ் உறுப்பினர் சிவாசிலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஈழத்தமிழினத்தின் துயரநிலையையும் தளராத தன்னம்பிக்கையோடு வெற்றியை நோக்கி வீறுநடைபோடும் வீரஞ்செறிந்த ஈழப்போராட்டத்தையும் விளக்கி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

நிறைவாக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் கையளிக்கப்பட்ட தொகை உருவா 1,09,460/-, அரிசி 175 மூட்டைகள் மற்றும் உருவா 50,000 மதிப்பிலான மருந்துப் பொருட்கள் இவற்றோடு புதுவை மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் திரட்டப்பட்ட உணவு-மருந்துப்பொரு:டகளையும் பெற்றுக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள் விழாநிறைவுப்பேருரை நிகழ்த்தினார். ஈழத்தமிழர் சிக்கலுக்குத் தீர்வுகாண தமிழக முதல்வர் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து அறிவுசான்ற பயனுரை நல்கினார்.

இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைமையகச் செயலாளர் பத்மநாபன், பேராசிரியர் பா. கல்யாணி, தே. ஏழுமலை, கோ.பாபு, இல. சுந்தரராசன், கொ.ப. சிவராமன், மருது, சந்திரசேகர், க. கவுதமன், களமருதூர் தொ. எழில்நிலவன், ஓவியர் அந்தோணி, இரா. கருணாநிதி, துரை. திருநாவுக்கரசு, கோ. கணேசன், இரா. அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

முன்னதாக காலை 10.30 மணியளவில் ஈழத்தமிழர் துயரநிலை விளக்கக் கண்காட்சியை தமிழினத் தொண்டியக்கத்தைச் சேர்ந்த விழுப்பரையனார் திறந்துவைத்தார். கண்காட்சியைக் கண்ட நூற்றுக்கணக்கான மக்கள், கனத்த நெஞ்சோடும் கசிந்த கண்ணோடும் சென்றனர். நிறைவாக கா. தமிழ்வேங்கை நன்றிகூற இனவுணர்வு ததும்பும் எழுச்சியோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

இதே கண்காட்சி 19-01-07 தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவிலும் திறக்கப்பட்டு ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கண்டதோடு ஏராளமாக நன்கொடையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு

ஈரோடு நகராட்சித் திருமண மண்டபத்தில் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிப்பு மாநாடு 30-01-07 அன்று சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு நிலவன் தலைமை தாங்கினார். குழல் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசியக் கட்சிப் பொதுச்செயலாளர் இளமுருகன், தமிழ்ப்பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அரங்க செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவில் ஈரோடு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் அ. கணேசமூர்த்தி, தமிழர் தன்மானப் பேரவை தலைவர் ஆ.பொ. கஸ்தூரி ரங்கன், தமிழக மனித உரிமைக் கழகத்தைச் சேர்ந்த அரங்க குணசேகரன், தமிழ் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பரிதி, ந.ப. இராமசாமி, முத்து லட்சுமி, பொடாரன், க.இர. தமிழரசன், கி.வே. பொன்னையன், சக்திவேல், தமிழ்நேயன், சண்முகநாதன் உட்பட பலர் கருத்துரை வழங்கினார்கள்.

15 இலட்சம் ரூபாய் பெறுமான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை பாவேந்தன் பழ. நெடுமாறனிடம் அளித்தார். இறுதியாக பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.

கலை நன்றி கூறினார்.

வேலூர்

31-01-07 அன்று வேலூர் இராசு மகால் திருமண மண்டபத்தில் ஈழத்தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழக ஒடுக்கப்பட்டோ விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன் தலைமை தாங்கினார். அற்புதம் குயில்தாசன் சா. குப்பன், அரச மாணிக்கம், இரா. சந்திரசேகரன், சமரசம், முல்லை சி. சுந்தரேசன், க. முகிலன், ருத்ரன், கசேந்திரன், குமாரத் தன்னொளியன், வி. சடகோபன், பெ. முருகேசன், தமிழரசன், தமிழ் முகிலன், தமிழேந்தி, ச.நா.ச. மார்த்தாண்டன், துரை. மூர்த்தி, ஞானசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பல்வேறு அமைப்புகளின் சார்பில் ரூ.10 இலட்சம் பெறுமான உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும் அளிக்கப்பட்டன. அவற்றை ஏற்றுக்கொண்டு பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக நல்லறிவன் நன்றி கூறினார்.

நெல்லை

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சார்பாக 8-2-07 அன்று நெல்லை சந்திப்பில் ஈழத்தமிழர்களுக்கு உணவு-மருந்துப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டத் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு ஈ. தமிழீழன் தலைமை தாங்கினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் செம்மணி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் கள் தி. அழகிரிசாமி, கா. பரந்தாமன், தூத்துக்குடி மாவட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் புலவர் வே. தமிழ்மாறன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலாளர் பொழிலன், தமிழர் தேசிய தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு.க. மகாதேவன், துரை அரிமா, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த பரமசிவன், தென்மொழி அவையத்தைச் சேர்ந்த ப. பொற்செழியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செ. பசும்பொன், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த உத்திரம் மற்றும் தமிழ்நேயன், ம.சு. சுதர்சன் உட்பட பலர் கருத்துரையாற்றினார்கள்.
ஐந்து லட்ச ரூபாய் பெறுமான உணவு பொருட்களும், மருந்துப் பொருட்களும் விழாக்குழுவினரின் சார்பில் அளிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். திரளான பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் திரட்டிய 9 ஆயிரம் ரூபாய்களை அளித்தபோது அனைவரும் கைதட்டி பாராட்டினர். இறுதியாக பா. தமிழ்தனையன் நன்றியுரையாற்றினார்.

மதுரை

பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் வழங்கும் விழா 9-02-07 அன்று மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எம்.ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார். சா. பிச்சைக்கணபதி முன்னிலை வகித்தார்.

தி. அழகிரிசாமி, கா. பரந்தாமன், பத்மநாபன், இளங்கோ, மெய்யப்பன், பரிதி, கரிகாலன், கண்ணன், கெ. இராமசுப்பு, பு.ரெ. துவாரகநாத், எஸ். ஆரோக்கியசாமி, பாலசுப்பிரமணி, சு. வாசுதேவன், அன்சாரி, முருகன், மு. அழகர்சாமி, இரத்தினவேல், சி. வீராச்சாமி, தமிழ்மறவன், பிரபாகரன், முத்துவீரன், அப்பளப்பாண்டி, சு.ப. தேசியமணி, தமிழன்பன், சிவாஜி உட்பட பலர் கருத்துரையாற்றினர்.

ரூபாய் 10 லட்சம் பெறுமான பொருட்களை பெற்றுக்கொண்டு பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். இறுதியாக வெ.ந. கணேசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நன்றி>தென்செய்தி.

No comments: