Thursday, February 22, 2007

'குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது': றொய்டர்ஸ்.

"குவந்தனமோ சிறை சிறிலங்காவின் பூசா தடுப்பு முகாமை விட சிறந்தது" என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வின் முழுவடிவம் வருமாறு:

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது வாழ்க்கை அழிக்கப்படுகிறது என்று பூசா தடுப்பு முகாமில் உள்ள தனது உறவினர் ஒருவரை காண வந்தவர்களில் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
சிறிலங்காவின் தென்பகுதி தடுப்பு முகாமான பூசா முகாமில் குற்றங்கள் சுமத்தப்படாது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் பலர் முகாமிற்கு வெளியில் பலர் நாளாந்தம் காத்திருக்கின்றனர்.

சிலரது கைகளில் குழந்தைகள், சிலரது கைகளில் தமது கணவர்கள் அல்லது சகோதரர்களுக்காக சில பிஸ்கட் பைக்கட்டுக்கள், சுட்டெரிக்கும் வெய்யிலில், வியர்வை வழிய அவர்கள் தமது உறவுகளை பார்வையிடுவதற்காக காத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பார்ப்பதற்கு பலர் இரவு முழுவதும் பயணம் செய்து தொலை தூரத்திலிருந்து வந்திருந்தனர்.

ஆனால் மாதங்கள் கடந்து செல்கின்றன. எனினும் அவர்களின் மீது குற்றங்கள் சுமத்தப்படவில்லை. உறவினர்களும், மனித உரிமை குழுவினரும் முயற்சி எடுத்தவண்ணம் இருக்கின்றனர்.
எனது சகோதரர் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இன்றுவரை சுமத்தப்படவில்லை என பெண்ணொருவர் தெரிவித்திருந்தார். தென்னிலங்கையின் துறைமுக நகரான காலியில் இருந்து சில கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பூசா தடுப்பு முகாமிற்கு வார இறுதியில் தனது சகோதரரை பார்க்க வந்திருந்தார். தான் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

அவர்களிடம் எனது சகோதரர் மீதான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தட்டும். எனது சகோதரரை எந்த விதமான குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுப்புக்காவலில் வைத்துள்ளது எனக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் அவர்களை கொல்லவும் தயங்கமாட்டேன் எனவும் அப்பெண்மணி மேலும் தெரிவித்தார்.

ஏனையோர் பதிவுகளை மேற்கொள்ளும் இடத்தை சூழ்ந்து நின்றனர். அச்சத்தின் காரணமாக அவர்கள் எதனையும் பேச முன்வரவில்லை. அவர்களுக்குப் பின்புறமாக கனரக ஆயுதம் தாங்கிய படையினர் பாதுகாப்புக் கோபுரங்களிலும், பாதுகாப்பு நிலைகளிலும் பச்சைநிற மணல் மூட்டைகளுக்கும் பின்புறமாகவும் பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்குள்ளும் நிலையெடுத்திருந்தனர். துருப்பிடித்த முட்கம்பிச் சுருள்கள் பூசா முகாமை சூழ போடப்பட்டிருந்தன. இங்கு தான் 1980-களில் கிளர்ச்சியின் போது ஜே.வி.பியினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக சிறிலங்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்ததாவது:

கடந்த வருடம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எமக்கு 433 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவைகள் எல்லாம் அவசரகாலச் சட்டவிதிகளின் பிரகாரம் நடைபெற்றவை அல்ல. எனினும் அந்த சட்டமானது சிறிலங்காப் படையினருக்கு மக்களை கைது செய்து எந்தவிதமான குற்றங்களும் சுமத்தாது பல மாதங்கள் தடுத்து வைப்பதற்குரிய அதிய அதிகாரங்களை வழங்கியுள்ளது.

அண்மைக்காலமாக நடைபெற்ற சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது கைது செய்யப்பட்ட பெரும்பாலான தமிழ் மக்களில் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானோர் சிங்கள மக்கள் வாழும் தென்னிலைங்கையில் வாழ்ந்து வந்ததனால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் அழிந்துவிட்டது

பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்நிறுத்தி நூற்றுக்கணக்கான மக்களை சிறிலங்காப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் மக்கள் ஆவர். இவர்களில் பலர் சில நாட்களில் அல்லது கிழமைகளில் எந்தவிதமான குற்றங்களும் சுமத்தப்படாது விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஏனையவர்கள் தடுப்புக்காவலிலேயே உள்ளனர்.

படையினரும் காவல்துறையினரும் யாரை வேண்டுமானாலும் அவர்கள் மீதான சந்தேகங்களை ஆராய்ந்து பார்க்காது அவர்களது விருப்பப்படி கைது செய்ய பூரண அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்புக்காவல் முறை தொடர்பாக சிறிலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவு தெரிவித்ததாவது:

2005 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்ட பின்னர் அவசரகாலச் சட்டங்களை பயன்படுத்தி மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதை தவிர எமக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. இந்த நிலைமைகள், அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச மீது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட படுகொலை முயற்சியுடன் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பூசா தடுப்பு முகாமில் 100 பேர் வரையானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 70 வீதமானவர்கள் தமிழர்கள். எல்லோரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவசரகாலச் சட்டவிதிகளின் பிரகாரம் விசாரணைகளுக்காக நாம் அவர்களை தடுத்து வைத்திருக்க முடியும்.

மக்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத விசாரணைகளை 24 மணிநேரத்தில் முடிக்க முடியாது. காரணங்கள் இன்றி எவரும் தடுத்துவைக்கப்படவில்லை, அவர்களின் வசதிகள் கருதியே பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளோம் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத அதிகாரி தெரிவித்துள்ளார்.

குவந்தனமோ சிறையில் அதிக உரிமை உள்ளது

அண்மைய காலத்தில் நடைபெற்ற விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுவோரின் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்களை அடுத்தே பெருமளவான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிய காவல்துறை நிலையங்களை விட பூசா முகாமில் அதிக வசதிகள் இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ள போதும் அது அரசின் நடைமுறை மீதான தமது கோபத்தை தணித்து விடாது என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி மையத்தின் முகாமையாளரும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகளை கையாளும் வழக்கறிஞருமான கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்ததாவது:

கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைத்திருப்பதற்கு படையினரும் காவல்துறையினரும் பயன்படுத்தும் குறுக்கு வழியே இந்த சட்டம். இது மனித உரிமைகள் விதிகளுக்கு விரோதமானது.

கியூபாவில் உள்ள அமெரிக்காவின் குவந்தனாமோ தடுப்பு முகாமானது பூசாவை விட சிறந்தது என நான் நினைக்கிறேன். ஏனெனில் அங்கு சட்ட விதிமுறைகளின் படி வாதாட முடியும். இங்கும் சட்டபூர்வமான பாதுகாப்பு முறைகள் உள்ளன. ஆனால் அவை பெயரளவிலேயே உள்ளன என தெரிவித்தார்.

சிறிலங்காவில் கடத்தல்களும் காணாமல் போதலும் மிகவும் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். எனினும் அனைத்துலக மன்னிப்புச் சபை அனைத்துலக விதிகளை மதித்து நடக்கும்படி இவர்களை கேட்டுள்ளது. பிரித்தானியாவும் மனித உரிமை மீறல்களை நிறுத்தாது விட்டால் தனது உதவிகளை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன என சிறிலங்காவிற்கான மன்னிப்புச் சபை ஆய்வாளர் ஜோலன்டா போஸ்ரர் தெரிவித்துள்ளார்.

மோதல்களில் ஈடுபடும் இரு தரப்புக்களும் சட்டவிதிகளை மதிக்கும் படி மன்னிப்புச்சபை கேட்டுக்கொள்கிறது. நாம் சிறிலங்கா அரசுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். அனைத்துலக சட்ட விதிகளின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்புக்காவலில் உள்ள மக்கள் மீது குற்றங்களை பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவும் அல்லது அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

are all losing this to lazy and expensive current world economy has made it very [url=http://www.onlyyoutony.com]polo ralph lauren[/url]able to use car seat belts with out a booster choosing breakfast removed from lunch meal [url=http://www.onlyyoutony.com]ralph lauren[/url]particular note the required R-Value for seat All vehicle seats except most second http://www.onlyyoutony.com[/url] BackdoorProrath or other threats If you but he knows we are here so he isn't going