தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து, அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய அடிப்படையில் எமக்கெனத் தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனைத் தவிர வேறு வழி கிடையாது என்பதனையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியானதையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கையைக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் விடுத்திருக்கிறது.
கூட்டமைப்பின் அறிக்கை விவரம் வரு மாறு:
இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச் சாத்திடப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இக்காலப் பகுதியில் நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது நீண்ட கால அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் சிங்கள அரசு மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல மக்கள் மரண பயமின்றி வாழக்கூட வழி விடவில்லை.
சிங்கள, பௌத்த பேரினவாத அரசின் கடும்போக்குக் காரணமாக, தமிழ் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கும், உடனடி மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பொருட்டு சர்வதேசத்தின் அனுசரணையுடன் அரசுக்கும் புலிகளுக்கு மிடையில் இணக்காப்பாடு காணப்பட்டு உருவாக்கப்பட்ட உபகுழு, சிரான் அமைப்பு, சுனாமிப் பொதுக்கட்டமைப்பு என்பனவும் ஜெனிவா1, ஜெனிவா 2 உடன் படிக்கைகளும் செயலிழந்து போயுள்ளன.
மறுபுறத்தில் சிங்கள அரசானது இராணுவத் தீர்வின்மீது நம்பிக்கை கொண்டு தமிழ்மக்கள் மீது இராணுவ வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன் அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றினைப் பயன்படுத்தி சமாதான உடன்படிக்கை நடைமுறையிலிருந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2,13,000 தமிழ் மக்கள்அகதிகளாக்கப்பட்டுள்ளதுடன், 1,561இற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டும், 635இற்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுமுள்ளனர்.
இறைமையைப் பாதுகாப்பதாக அரச பயங்கரவாதம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசதரப்பு எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது மட்டுமல்ல இராணுவத் தீர்வின் மீது நம்பிக்கை கொண்டு தமிழர் மீது இராணுவ முறைகளை ஏவி தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்தும் உள்ளது.
மேற்படி ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் மீறப்பட்டமையும், படுகொலைகள், ஆள்கடத்தல்கள், சித்திரவதைகள், தமிழர் தாயகப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் பலவந்தமாக அகதிகளாக்கப்பட்டமையும் ஸ்ரீலங்காவின் இறைமையைப் பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகும்.
இவ்வாறான சமாதானத்திற்கான நம்பிக்கைகளைக் கொடூரமாகத் தாக்கிச் சிதறடித்த தொடர்ச்சியானதும் பாரதூரமானதுமான யுத்த நிறுத்த மீறல்களைக் கண்டு கொள்ளாத சர்வதேச சமூகம் இலங்கையின் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நாடு பிளவுபடக் கூடாது என்றும் மட்டுமே பேசி வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் செய்த தவறு
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடைசெய்தமையானது அந்த அமைப்பின் அவசரப்பட்ட தவறான முடிவாக அமைந்துள்ளது மட்டுமன்றி இலங்கைத் தீவில் மிகப் பாரிய யுத்தம் வெடிப்பதற்கான முழுமையான புறச்சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டு சமாதான காலத்தில் தமிழர் தரப்பு எல்லை மீறிய பொறுமையைக் கடைப்பிடித்து வந்துள்ளதுடன் சர்வதேசத்திற்கு மதிப்பளித்து பாரிய விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொண்டுள்ளது. ஆனாலும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பாக சர்வதேசமூகத்தின் அணுகுமுறையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதானது பெரும் ஏமாற்றத்தினைத் தருகின்றது. இந்நிலைப்பாடு சிங்கள அரசை சமாதானப் பாதையில் இருந்து விலகி யுத்தத்தினை நோக்கிச் செல்லத் தூண்டியுள்ளது.
தனது இறைமை பாதிக்கப்படுவதை சர்வதேசம் அனுமதியாது என்ற நம்பிக்கை
ஏனெனில் தாம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை அங்கீகரித்தால் என்ன அங்கீகரிக்காவிட்டால் என்ன இலங்கையின் இறைமை பாதிக்கப்படுவதையோ நாடு பிளவுபடுவதையோ சர்வதேச சமூகம் அனுமதிக்காது என்ற நம்பிக்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உபகுழு, சிரான் அமைப்பு, சுனாமிக் கட்டமைப்பு என்பன செயலற்றுப் போனமைக்கும் இனப்பிரச்சினைக்காண தீர்வு தொடர்பாக விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபை சிங்கள அரசு பரிசீலனைக்காகக் கூட எடுக்காமல் போனமைக்கும், ஜெனிவா1, ஜெனிவா2 பேச்சுகள் தோல்வியடைந்தமைக்கும் சர்வதேச சமூகத்தின் மேற்படியான நிலைப்பாடே காரணமாக அமைந்துள்ளது.
வடக்கு கிழக்கைப் பிரித்தமைக்கு சர்வதேசத்தின் தெளிவற்ற அணுகுமுறையே காரணம்
இது மட்டுமன்றி இந்தியாவுடன் 1987இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் கிழித்தெறியும் வகையில் 19 வருடங்களுக்குப் பின் தமிழ்த் தேசிய இனத்தின் தாயகத்தினை வடக்கு என்றும் கிழக்கு என்றும் இலங்கை அரசு பிரித்தமைக்கும் சர்வதேசத்தின் தெளிவற்ற அணுகுமுறையே காரணமாகும்.
இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையினையே அரசினால் மீறமுடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணயமும் பாதுகாப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை அரசுடன் செய்யப்படும் எந்த ஓர் ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என்பதனை திட்டவட்டமாக நாம் தெரிவித்தே தீரவேண்டியுள்ளது.
கசப்பான யதார்த்தத்தை புரிந்துகொள்ளவேண்டும்
இந்த நிலையில் தமிழ் இனத்தின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு ஏதுவாக எந்தவொரு ஆக்கபூர்வமான அணுகுமுறையையும் கருத்தில் கொள்ளாது முற்றுமுழுதாக இராணுவத் தீர்விலேயே நாட்டம் கொண்டு ஸ்ரீலங்கா அரசு செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்பதனையும் நாம் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
இந்தக் கசப்பான யதார்த்தத்தின் பின் அதன் சகல விதமான பரிமாணங்களிலும் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து எமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எமக்கென ஒரு தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதே சமூகத்தினை நாம் கோரி நிற்கின்றோம்.
இலங்கைத் தீவில் மிக நீண்டதும், தொடர்ச்சியுமான வரலாற்றைக் கொண்டிருக்கும் எமது இனத்திற்கு சகல வழிகளிலும், சகல முனைகளிலும் ஸ்ரீலங்கா அரசினால் நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனைத் தவிர எமக்கு வேறு வழி கிடையாது என்பதனையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறீ.
Saturday, February 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment