Wednesday, February 14, 2007

இலங்கை முஸ்லிம் கட்சிகள் பலஸ்தீனத்திற்கு எதிரானவை?

இஸ்ரேலினால் பெல் கநோன் என்ற இடத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததற்காக பலஸ்தீனத்தின் வெளிவிவகாரத்துறை சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.

பலஸ்தீனத்தின் வெளிவிவகாரத்துறை அதிகாரியான டி.மகமூட் அல் சஹார் என்பவரால் மங்கள சமரவீரவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"பலஸ்தீன மக்கள் மற்றும் எனது சார்பிலும் எமது நன்றியை உங்களுக்கும் உங்கள் அரசிற்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். பேல் கநோன் பகுதியில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட கொடூரமான படுகொலையில் பல அப்பாவி பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த படுகொலைகளின் விளைவாக கடந்த வருடம் நவம்பர் 15 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானத்தில் உங்கள் மேன்மை தங்கிய பதவியின் அடிப்படையில் எங்களுக்கு ஆதரவு வழங்கியதற்கு எங்களின் உளப்பூர்வமான நன்றிகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்ரேலினால் நீண்டகாலமாக மீறப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக சமூகம், இஸ்ரேலுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த தீர்மானத்தின் நோக்கம் என நாம் கருதுகின்றோம்" என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் மங்கள சமரவீர, பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு மகிந்த ராஜபக்சவால் கூறப்பட்ட காரணங்களில் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் மகிந்த ராஜபக்ச, பலஸ்தீனத்திற்கு எதிரான போக்கையே கொண்டுள்ளார் எனவும் ஆனால் சிறிலங்காவில் உள்ள முஸ்லிம் கட்சிகள் மகிந்த ராஜபசவிற்கு தமது ஆதரவை கொடுத்து வருவது ஆச்சரியமாக உள்ளதாகவும் சிறிலங்காவில் உள்ள முஸ்லிம் மக்களின் தலைவர்கள் பலஸ்தீன மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருவது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது எனவும் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: