Friday, February 09, 2007

சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு.

சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு.

தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வருமாறு:

சிறீலங்காவின் தென்மேற்கு கரையோர வீதியால் நாம் தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தோம். அதன் பிரதான சுற்றுலாத்துறை மையமான ஹிக்கடுவ பகுதியில் எம்மை இடைமறித்த சிறீலங்கா காவல் துறையினர் அருகாமையில் உள்ள ஓர் பாதையால் எம்மை செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
மிகவும் ஒடுங்கிய கரடு முரடான அந்த கிராமத்து வீதியின் இருபுறமும் மாலை நேர சூரியஒளியில் நெல் வயல்கள் பளபளத்தன. நாம் மீண்டும் பிரதான வீதியை அண்மிக்கும் போது தெற்குத் திசையை நோக்கி நோயாளர் காவுவண்டிகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டோம். அது எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

குண்டு வெடிப்பே இந்த பிரச்சனைக்கு காரணம் என்பதை பின்னர் நாம் புரிந்து கொண்டோம். மக்கள் நெரிசலான நெடுந்தூர பேரூந்தில் ஏற்ப்பட்ட குண்டு வெடிப்பில் பதிநொரு பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதல் வெளிநாட்டவரை குறிவைத்து நடத்தப்படவில்லை என்றாலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி அரசின் பலவீனமான சுற்றுலாத்துறையின் பொருளாதாரத்தை மேலும் பாதிப்படையச் செய்யும் என்பதை மறுக்க முடியாது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடற்கோள் பேரனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை இன்றும் பழையநிலைக்கு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறை பகுதிகளில் இதற்கு முன்னர் பேரூந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. சிறீலங்கா மக்களின் போக்குவரத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் முகமாகவும் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.

உலகெங்கும் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளைப் போலவே இதுவும் மனிதாபிமானமற்ற செயல். அரசியலில் தொடர்பற்ற பொதுமக்களை கொலை செய்வது ஒரு போதும் நியாயமாகாது. எனினும் பேரூந்துக் குண்டுவெடிப்பானது எப்போதோ நிகழ்ந்த ஒன்றல்ல, தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளிலும் அதனால் முடங்கிப்போன அமைதிமுயற்சிகளிலும் இது ஒரு முக்கிய திருப்பமாகும்.

தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து தமிழீழவிடுதலைப் புலிகள் பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர். வழமை போலவே இந்த குண்டுவெடிப்புக்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தாலும், சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இராணுவ நடவடிக்கைகளை எடுத்துவரும் பெரும்பாலான கடும் போக்குடைய அரசுகளுக்கு இதுவே அவர்களின் பதிலாகும்.

இனங்களின் பாகுபாட்டை அரசியல் மயப்படுத்தும் சிறீலங்கா அரசின் செயற்பாட்டால் அது தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளாக மாற்றம் பெற்றுள்ளது. எங்கேயும் இது தான் இறுதிவழியாகவும் அமைவதுண்டு. தமிழ் மக்களின் கொள்கைகளை கண்டித்துக்கொண்டு, கோரிக்கைகளை புறக்கணித்துக் கொண்டு செயற்படும் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் அரசியல் தீர்வுக்கு தடைகளை ஏற்படுத்துவதுடன் வன்முறைகளுக்குமே வழிவகுக்கும்.

வடஅயர்லாந்து, பலஸ்த்தீனம் போன்றவற்றை நோக்கினால் வன்முறையாளர்களை தனிமைப்படுத்துவதை விட அவர்களுடன் பேசுவது தான் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. சிறீலங்காவின் கடும் போக்குடைய சிங்கள மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் அரசும் விடுதலைப்புலிகளும் ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் கடந்த வருடம் சேர்த்ததுடன் (இது ஒரு நல்ல நேரமல்ல என்பதுடன் புத்திசாலித்தனமற்ற செயற்பாடுமாகும்) புதிய அரசை பேச்சுக்கு செல்லுமாறும் கேட்டுள்ளது.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை கருதினால். விடுதலைப்புலிகள் முஸ்லீம்கள் அல்ல. அவர்கள் உள்ளுரில் போராடுபவர்கள், உலகத்தில் அல்ல, எனவே புலிகளை மேற்குலகத்தின் ஜிகாத்துக்கு எதிரான போருடன் இணைக்க முயல்வது நகைப்புக்கிடமானது.

அவர்களின் ஆயுதங்களை களைவதற்காக போரை நாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஆனால் அதைத் தான் மகிந்த ராஜபக்சா செய்ய முற்பட்டுள்ளார். இது அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சா, மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிகளுக்கான பழிவாங்கும் படலமாகவும் இருக்கலாம்.

மகிந்தவின் செயற்பாடுகள் முன்னைய அரச தலைவர்களை விட தான் ஒரு சிறந்த பௌத்த மதவாதியாக கட்டிக்கொள்வதையே பிரதிபலிக்கின்றன. நாட்டின் விசேட தினங்களில் மகிந்த புத்தமத விகாரைகளுக்கே விஜயம் செய்வதுண்டு. இது நான்கு மதங்கள் உள்ள நாட்டில் ஒரு மதத்தின் ஆதிக்கத்தை தான் காட்டுகின்றது.
இவை எல்லாவற்றிலும் கொடுமையானது விடுதலைபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியென அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளை மீள ஆக்கிரமித்ததன் மூலம் சமாதான ஒப்பந்தத்தை அரசு முறித்தாகும். கடந்த ஆண்டு மோதல்கள் ஆரம்பித்ததில் இருந்து 4,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரச படைகளின் ஆட்டிலறி மற்றும் விமானத்தாக்குதல்களால் கிழக்கிலங்கையில் பல பத்தாயிரம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அரசு கிழக்கில் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளது தற்போது மாகாணசபை தேர்தல்களை அப்பகுதிகளில் நடத்தி ஒரு பொம்மை ஆட்சியை அமைக்க ஆசைப்படுகிறது. இதற்காக மகிந்தவின் வேட்பாளராக கருணாவே உள்ளார். இவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர். அப்போது அவர் மிகவிரைவாக சிறீலங்கா அரசினால் உள்வாங்கப்பட்டதுடன், இராணுவத்தினர் கருணா குழுவுடன் இணைந்து பணியாற்றியும் வருகின்றனர்.

ஆரம்பத்தில் அரசு இதனை மறுத்திருந்தது, மிகக்கடுமையன ஊடகத்தடைகளினால் கருணா குழு தொடர்பான தகவல்கள் வெளிவருவது இல்லை. ஆனால் மட்டக்களப்புக்கு செல்லும் மக்களின் தகவல்களின் படி அரசினால் கருணா குழுவின் முகாம்களை மறைக்கமுடியவில்லை என தெரிவித்துள்ளனர். கருணாகுழுவின் முகாம்கள் இராணுவ முகாம்களுக்கு அண்மையிலேயே அமைக்கப்பட்டு உள்ளன. அரசபடைகளால் நடத்தப்படும் தாக்குதல்களிலும் கருணாகுழுவின் பங்களிப்புக்களும் முக்கியமானது.

கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர் கடத்தல்களில் அரசின் பங்களிப்பு உள்ளதாக யுனிசெப்ஃ மற்றும் ஐ.நாவின் சிறுவர் அமைப்பு என்பன தெரிவித்துள்ளன. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையின் செயற்குழுவினால் சிறீலங்கா மற்றும் நேபாளம் ஆகியவற்றில் நடைபெறும் சிறார் படைசேர்ப்பு தொடர்பான விடயங்கள் நியுயோர்க்கில் இன்று விவாதிக்கப்படுகின்றன.

ஐ.நாவின் கண்காணிப்பில் இருக்கும் பல நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் ஒன்று, சிறுவர் படைசேர்ப்பை நிறுத்தாது விட்டால் தடைகள் ஏற்படுத்தப்படலாம் என ஐ.நாவின் புதிய செயலாளர் நாயகமான பான் கி மூன் சிறீலங்காவை மறைமுகமாக எச்சரித்தும் இருந்தார். விடுதலைப்புலிகளின் மீது அழுத்தங்களை ஏற்படுத்துவதற்காக துரதிஸ்டமாக சிறீலங்கா அரசு தான் சிறார் படைசேர்ப்பை ஐ.நாவில் முன்னர் முதன்மைப்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதாக அரசு கூறியுள்ள போதும் கடத்தல்கள் தொடர்கின்றன என யுனிசெப்ஃ தெரிவித்துள்ளது. கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் சிறார்கடத்தலை நிறுத்தும் வரையும், அவர்கள் வசமுள்ள சிறார்களை விடுவிக்கும் வரையிலும் ஐ.நா அரசை விடப்போவதில்லை.

விடுதலைப்புலிகளும் அதிகளவில் சிறுவர்களை படையில் சேர்த்தாலும், ஜனநாயக வழிமுறைகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசு இந்த குற்றங்களை செய்யமுடியாது. இது தொடர்பாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்களா சமரவீராவும் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால் மகிந்த அவரது பதவியை பறித்துவிட்டார்.

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனிதஅவலங்கள் மிகவும் ஆபத்தானவை. கடத்தல்களும், காணாமல் போதல்களும் காவல்துறையினராலும் அவர்களுடன் இணைந்த படையினராலும் தற்போது கொழும்பில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் நடைபெறும் உள்நாட்டு போரினால் கடந்த ஆண்டு 200,000 மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

இதில் பல சம்பவங்கள் சூடானின் டேபர் பகுதியில் மனிதஅவலங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் தான் சிறீலங்காவிலும் நடைபெற்றுள்ளன. ஆனால் டேபரில் நடைபெற்ற சம்பவங்கள் சிறீலங்காவில் நடைபெற்றதை விட 10 மடங்குக்கு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சூடானிய அரசைப்போல சிறீலங்கா அரசும் தன்னிடம் உள்ள விமானப்படைப் பலத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றது.
வெளியுலகம் இதில் தலையிட வேண்டும், இந்தியா மிகமுக்கிய பங்காற்றமுடியும். இந்தியாவிற்கு செல்லும் அதிகளவான இடம்பெயர்ந்த மக்களால் இந்தியா தனது முடிவை மாற்றவேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.

மகிந்தவினால் மேற்கொள்ளப்பட்ட வடக்கு கிழக்கு பிரிப்புக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்தது தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை இல்லாது செய்துள்ளதுடன், பல நிபுணர்களால் முன்வைக்கப்படும் சமஷ்டி முறை தீர்வையும் நிராகரித்துள்ளது.

மேற்கூறப்பட்ட காரணங்களால் சிறீலங்காவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை இந்தியா நிறுத்தியுள்ளது. இது ஒரு நல்ல சமிக்கை. தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என மகிந்த நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படலாம்.
நன்றி>புதினம்.

No comments: