Monday, February 19, 2007

'மகிந்த, தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்': விமல் வீரவன்ச.

"போர் நிறுத்த ஒப்பந்தம் எதிர்வரும் வியாழக்கிழமையுடன் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னர் அதனை முடிவுக்கு கொண்டுவந்து, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஏன் தனது தவறுகளை திருத்திக் கொள்ளக்கூடாது" என ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை, தேசிய பிக்குகள் முன்னனியினால் நடத்தப்படும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றிய விமல் வீரவன்ச மேலும் தெரிவித்ததாவது:
"தவறுகளை திருத்திக் கொள்ளாதது தான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. போர் நிறுத்த ஒப்பந்தம் தான் நாட்டின் வரலாற்றில் செய்து கொள்ளப்பட்ட மிகப்பெரும் தவறு என மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தற்போதும் போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்கிறார். அது தவறு என தெரிந்தால் அவர் அதனை தூக்கி எறிய வேண்டியது தானே?.

போர் நிறுத்தத்தை எதிர்ப்பவர்களால் தான் அவர் பதவிக்கு வந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் போர் நிறுத்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதால் தான் ரணில் தனது கட்சி உறுப்பினர்களை இழந்ததுடன் அதிகாரத்தையும் இழந்தார்.

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்புபவர்கள் விடுதலைப் புலிகள் அனைத்துலகத்தில், தமது தனிநாட்டுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு உதவுபவர்கள் ஆவார்கள். நாம் இதனால் கடுமையான பின்விளைவுகளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகிறோம். அரச தரப்பினர் போர் நிறுத்தம் இறந்துவிட்டது அது வெறும் கடதாசியில் தான் உள்ளது. எனவே மேலும் அதனை இல்லாது செய்ய தேவையில்லை என கூறியுள்ளனர். அவர்கள் ஒரு தெளிவற்றவர்கள்.

போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை எனில் அப்போது ஏன் போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இங்கே உள்ளது? தாம் தான் அமைதி முயற்சிகளின்
அனுசரனையாளர்கள் என நோர்வே ஏன் தற்போதும் கூறுகிறது? அரச தலைவரும், அரசும் நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக இதயசுத்தியுடன் கூறினால் ஏன் அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை?

விடுதலைப் புலிகளுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இராணுவம், கடற்படை, விமானப்படை கொண்டு அழிக்க முடியாது. அரசியல் ரீதியாக போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே அதனை முறியடிக்கலாம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இல்லாது செய்வது ஒரு உள்நாட்டு விவகாரம். ஆனால் ஆட்சியாளர்கள் அதனை அனைத்துலக மயப்படுத்தியுள்ளனர். எனவே தான் அனைத்துலக நாடுகள் எமது உள்விவகாரங்களில் தலையிடுவதுடன் எமக்கு உத்தரவுகளையும் போடுகின்றன.

எனவே அரச தலைவர் உடனடியாக போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும். அவர் அனைத்துலக சமூகத்திற்கு அஞ்சுபவராக இருந்தால் மக்களின் அழுத்தங்களால் அதில் இருந்து விலகுவதாக அவர் கூறவேண்டும்" என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: