Sunday, February 11, 2007

மிகவிரைவில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.

சிறீலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும், அரசில் உள்ள சிலகுழுவினரும் இணைந்து அரசின் மீதும் அதன் பிரதம மந்திரியின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் இரகசியமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் தொடர்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்களின் அத்துமீறிய தலையீடுகள் என்பன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்களாகவும் முன்வைக்கப்பட உள்ளன.

இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவை. ஐ.தே.கவின் 43 உறுப்பினர்களும், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் 22 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் 37 உறுப்பினர்களுமாக மொத்தம் 102 உறுப்பினர்களின் ஆதரவு தற்போது உள்ளதாகவும். மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவுகள் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மேலதிகமாக தேவைப்படும் 11 வாக்குகளும் அரசதரப்பில் இருந்து அரசின் அண்மைய நடவடிக்கைகளால் விசனமடைந்தவர்களால் வழங்கப்படலாம் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத அரச தரப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். என்ன நடைபெறும் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், என்னால் ஒன்றை மட்டும் கூறமுடியும் இங்கு ஒரு மிகப்பெரும் ஆச்சரியம் நிகழப்போகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்தவாரம் மூத்த மூன்று அமைச்சர்களின் மீது மகிந்தவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும். இந்த நிகழ்வு நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவாக்கியுள்ளதுடன் அரசில் பல பிளவுகளையும் ஏற்படுத்தும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: