"சிறிலங்கா அரசானது அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக விசாரணைக்குழுவை அமைப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைத்துலக மனித உரிமை நிபுணர்களாக இருத்தல் வேண்டும்" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விசாரணைக்கு அமைக்கப்படும் குழு சுயாதீனமானதாகவும், அதன் உறுப்பினர்கள் சுயாதீனமானவர்கள் அல்லது சுயாதீனமான நிறுவனங்களை சேர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சிறிலங்கா அரசு, அனைத்துலக பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளுடன் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
இந்த குழுவின் திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். விசாரணைக் குழுவானது சிறிலங்காவில் நடைபெறும் மிகவும் தீவிரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதுடன், குற்றவாளிகளாக சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள், கருணா குழு, வேறு ஆயுதக்குழுக்கள் அல்லது இந்த குழுக்களுக்காக இயங்கும் தனிநபர்கள் என யாராக இருந்தாலும் அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
சுயாதீனமாக அனைத்துலக விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவரலாம் என அனைத்துலக மன்னிப்புச்சபை நம்புகின்றது.
சிறிலங்கா அரசினால் அமைக்கப்படும் விசாரணைக்குழு பின்வரும் தகமைகளை உடையதாக இருக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
1. அமைக்கப்படும் விசாரணைக்குழுவின் செயற்திறன் முக்கியமானது. எனவே வலிமையான, செயற்திறனுள்ள, சுயாதீன உறுப்பினர்கள் விசாரணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதுடன், அவர்கள் அனைத்துலக அமைப்புக்களின் அங்கீகாரத்தை பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
2. போர் நிறுத்த ஒப்பந்தத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள், கொலைகள், காணாமல் போதல், துன்புறுத்தல் போன்றன தொடர்பாக பூரண விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இந்த விசாரணைகள் அனைத்துலக மனிதஉரிமை மீறல் விதிகளுக்கு அமைய நடத்தப்பட வேண்டும்.
3. மேற்கொள்ளப்படும்; விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் விசாரணைகள் முடிவடையாது விட்டால் அது பொதுமக்களின் கவனத்தை இழப்பதுடன் அரசியல் குறுக்கீடுகளையும் சந்திக்க வேண்டி வரும்.
4. விசாரணைக் குழுவானது மிகக்கூடிய அதிகாரங்களை உடையதாக இருத்தல் வேண்டும். அதாவது தேவையான தகவல்களையும், சாட்சியங்களையும் இந்தக்குழு விசாரணை செய்வதற்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.
5. விசாரணைகள் சுயமாக பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் விசாரணைகள் நடத்தப்படும் மையத்திற்கு ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தடையின்றி பிரவேசிப்பதற்கும் சாட்சியங்களை அளிப்பதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. பாதிக்கப்பட்டவர்கள் அனைத்துலக சட்டங்களுக்கு அமைய நடத்தப்படுவதுடன் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
7. விசாரணைகளுக்கு உதவும் சாட்சியங்கள் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். அதாவது அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு தேவையான மொழிபெயர்ப்பு உதவிகள், அவர்களுக்கான சட்ட உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டும்.
8. விசாரணைக்குழு தமக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகத்துறை போன்றவற்றையும் நாடலாம்.
9. இறுதியான அறிக்கை விசாரணைக் குழுவின் முழுமையான தகவல்களை உடையதாக இருத்தல் வேண்டும். அதாவது விசாரணைகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், தீர்ப்புகள், தண்டணைகள் என்பன உள்ளடக்கபட்டிருத்தல் வேண்டும்.
10. விசாரணைக்குழுவினால் பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட நீதித்துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், எதிர்கால விசாரணைகளுக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாக்கப்பட வேண்டும்."
என சிறிலங்காவில் அமைக்கப்படும் அனைத்துலக விசாரணைக்குழு தொடர்பாக அனைத்துலக மன்னிப்புச்சபை தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
நன்றி>புதினம்.
Sunday, February 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment