Saturday, February 17, 2007

சிறீலங்கா அரசை சூழும் மேற்குலக அழுத்தம்.

அமெரிக்காவின் ஐனநாயகக்கட்சியை சேர்ந்த (எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலுக்கான) ஐனாதிபதி வேட்பாளர் உட்பட்ட மிகபிரபலமான செனற்ரர்கள் இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரிய மனிதஉரிமை மீறல்களால் ஆழ்ந்த விசனமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அமெரிக்காவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐனநாயகக்கட்சியின் செனற்றர்களான எட்வேட் கென்னடி. றிச்சேட் டேபின், ஜோன் கெரி, கிறிஸ்ரோபர் டொட் ஆகியோர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் நாளுக்குநாள் கேவலமடைந்துவரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 14 ம்திகதி அமெரிக்காவிற்கான சிறீலங்கா தூதுவர் பேனாட் குணதிலகவிற்கு எழுதிய கடிதத்தில் இலங்கையில் மனிதாபிமான அவலம் தொடர்பில் விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சரியான பதிலை தூதுவர் வழங்கத் தவறியிருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ல் சிறீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இதேபோன்ற அதிருப்திக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

போரினால் அவலச்சாவடைந்துவரும் பொதுமக்கள் பற்றி ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்ததோடு பேச்சுவார்த்தை மூலமே நெருக்கடிக்கு தீர்வு காணமுடியும் என்றும் போரினால் அல்லவென்று அழுத்தித் தெரிவித்திருந்தனர்.

அண்மையில் 38 மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் எழுதிய இன்னோர் கடித்தில் சிறீலங்காவிற்கான விசேட பிரதிநிதியொருவரை நியமிக்கும்படியும் இலங்கை நெருக்கடி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அமெரிக்க அரசை வேண்டியிருந்தமை தெரிந்ததே.

அமெரிக்க அழுத்தம் ஒருபுறம் அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளின் அழுத்தமும் மறுபுறம் அதிகரித்து வருகின்றது. ஜேர்மனியின் அபிவிருத்தியமைச்சர் இருமாதங்களுக்கு முன்னர் சிறீலங்காவிற்கான நிதியுதவிகளை நிறுத்தியதும் அதேபோல மற்றய ஐரோப்பிய நாடுகளும் சிறீலங்கா அரசுக்கான உதவிகளை நிறுத்தும்படி கேட்டிருந்தார்.
மிக அண்மைய திருப்பமாக பிரித்தானிய அரசின் தலையீடு குறிப்பிடத்தக்கது. பிரித்தானியா சிறீலங்காவிற்கென வழங்க உறுதியளித்திருந்த 41 மில்லியன் பவுன்ஸ் உதவியை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவின் அனைத்துலக அபிவிருத்தியமைச்சர் ஹிலரி பென் சிறீலங்கா திறைசேரி செயலர் பி.ஜெயசுந்தரவிற்கு எழுதிய கடிதத்தில் தமது நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மட்டுமே (சுனாமியை அடுத்து உறுதியளித்திருந்த) தமது நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்திரந்தார். இது பிரித்தானியாவின் வெளியுறவு பணியக அமைச்சர் திரு.கிம் ஓவலின் இலங்கைக்கான விஐயத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

சிறீலங்கா அரசு அனைத்துலக விதிகளை மீறியுள்ளதாகவும் தேவையற்ற வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள அதேநேரம் சிறீலங்கா பலவீனமான நிதி நிலைமையிலுள்ள சமயத்தில் பாரிய பாதுகாப்பு செலவினத்துக்கான( ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட ) அறிவிப்பை வெளியிட்டிருந்தமை பிரித்தானியாவை கடும் விசனத்துக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

No comments: