"சிறிலங்கா அரச படைகள் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருடன் இணைந்து நடத்தும் சிறார் கடத்தல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு இதய சுத்தியுடன் முழு அளவிலான விசாரணைகளை நடத்த வேண்டும்"
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் சிறார்களும் ஆயுத மோதலுக்குமான சிறப்பு பிரதிநிதி அலன் றொக்கினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு சில பரிந்துரைகளை பரிந்துரை செய்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா குழுவினர் மீதும் சிறார் படைச்சேர்ப்பை நிறுத்துவதற்கு ஏதுவாக சில அழுத்தங்களை ஏற்படுத்துமாறும் பரிந்துரை செய்துள்ளது.
அலன் றொக்கின் அறிக்கையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், விடுதலைப் புலிகள் மற்றும் கருணா குழுவினர் மேற்கொள்ள வேண்டியவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டியவை:
கருணா குழுவினரின் சிறார் படைச்சேர்ப்பில் அரச படையினரின் பங்களிப்பு தொடர்பாக முழுமையான, நம்பகத்தன்மையான விசாரணைகளை அரசு நடத்த வேண்டும். எந்தப் பிரிவினரின் பழிவாங்கும் தாக்குதல்களில் இருந்தும் முறைப்பாடு செய்பவர்கள், சாட்சிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விசாரணைகளை வெளிப்படையாக நடத்துதல், அரசினால் நடத்தப்படும் விசாரணைகளின் உண்மைத்தன்மை, நேர்மை ஆகியவற்றில் அனைத்துலக சமூகம் திருப்தியடைய வேண்டியது இதில் அடங்கும்.
சிறார் கடத்தல்களில் ஈடுபடும் எல்லாத்தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கருணா குழுவினரால் கடத்தப்பட்ட சிறார்களை பாதுகாப்பாக விடுவித்து அவர்களின் பெற்றோருடன் சேர்ப்பிக்க வேண்டும்.
சிறிலங்கா காவல்துறையினரும், படையினரும் அவர்களிடம் முறையிடப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக பூரண விசாரணைகளை நடத்துவதுடன், கடத்தலில் ஈடுபடும் எந்த தரப்பு ஆனாலும் தக்க நடவடிக்கை எடுப்பதுடன் கடத்தப்பட்ட சிறார்களும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
சிறார் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்களை சிறிலங்கா அரசு கொண்டுவர வேண்டும்.
மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு உதவிகளை வழங்க வேண்டும்.
சிறிலங்காவில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நலன்களும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பு முக்கியமானது.
விடுதலைப் புலிகள் மற்றும் கருணா குழுவினர் மேற்கொள்ள வேண்டியவை:
18 வயதிற்கு குறைந்தோரை படையில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
சிறார்களை தமது படைகளில் இருந்து விடுவிப்பதுடன், யுனிசெஃப்புடன் இணைந்து அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமது தளபதிகளுக்கு சிறார் படைச்சேர்ப்பு தொடர்பான பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
சிறார்கள் படையில் உள்ளனரா என சோதனையிடுவதற்கு முகாம்களுக்கு யுனிசெஃப் மற்றும் அனைத்துலக சிறார் பாதுகாப்பு அமைப்புக்களை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நியூயோர்க் சென்றிருந்த சிறிலங்கா அரசின் பிரதிநிதியான பெரேரா றொக்கின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசின் விளக்கங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.
நன்றி>புதினம்.
Monday, February 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment