Tuesday, February 13, 2007

ஐரோப்பிய ஓன்றியம் மீது மகிந்த கடும் தாக்குதல்.

"ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசையே குற்றம் சட்டுகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளால் மீறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக அது கண்டுகொள்ளாமல் உள்ளது."

மாலைதீவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா தொழிலாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கண்டவாறு கடுமையாக சாடியுள்ளார்.

மாலைதீவில் உள்ள டாறுபறுகே தேசிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகிந்த மேலும் தெரிவித்துள்ளதாவது:

"நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சனையின் தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுமக்கள் முன்னிலையில் கிழித்து எறிந்துள்ளார். ஆனால் விடுதலைப் புலிகள் 8,185 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறிய போதும் அவர் அதை பலப்படுத்த முயலவில்லை.

சிலர் எனக்கு நண்பர்களாக இருக்கலாம், உறவினர்களாக இருக்கலாம். நான் இந்த பதவிக்கு வருவதற்கு உதவியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் நாட்டுக்கு தீங்கு செய்தால் அவர்களுடனான தொடர்பை நான் முறித்து கொள்ளத் தயங்கமாட்டேன்.
விடுதலைப் புலிகளே பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். மாவிலாறு அணைக்கட்டை மூடி ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நீர் வசதியை தடைசெய்தது, ஆயுதங்கள் அற்ற படையினரை படுகொலை செய்தது என்பன விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை. நான் மனித உரிமைகளை பாதுகாப்பதில் ஈடுபாட்டுடன் பணியாற்றுகிறேன்.

நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிற்பாடு அவர்களை அமைச்சரவையில் இணையுமாறு கேட்டிருந்தேன். ஆனால் அன்று ரணில் மறுத்துவிட்டார். எனினும் பின்னர் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்பிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையே நான் உள்வாங்கியுள்ளேன்" என்றார் அவர்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நேற்று செவ்வாய்க்கிழமை மாலைதீவு சென்றுள்ளார். அவர், அங்கு மாலைதீவின் அரச தலைவர் மகுமூன் அப்துல் கையூமுடன் இருதரப்பு கல்வி, கலாச்சாரம் தொடர்பாக கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிறிலங்காவில் மூன்று மூத்த அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ததுடன் தன்மீது கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணைகளுக்கு உத்தரவிட்ட மகிந்த ராஜபக்ச மூன்றாவது நாள் மாலைதீவு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: