Sunday, February 18, 2007

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை உன்னிப்பாக கவனிக்கும் அமெரிக்கா.

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் கடத்தல்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. எனினும் அங்கு மோதல்களை தணித்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உதவும் பொருட்டு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் முடிவை அமெரிக்கா இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இடம்பெற்று வரும் படுகொலைகள், காணாமல் போதல், கடத்தல்கள் போன்றவற்றை சிறிலங்காவில் உள்ள இராஜதந்திரிகள் மூலம் அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. எனினும் உடனடியாக சிறிலங்காவிற்கு ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை.

அண்மையில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக ஒரு சிறப்பு பிரதிநிதியை நியமிக்கும்படி அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சை கேட்டிருந்தனர்.
நியூஜேர்சியை சேர்ந்த ஜனநாய காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ரூஸ் ஹால்ட் இந்த கோரிக்கையை கொண்டு வந்ததுடன், 38 உறுப்பினர்களின் கையொப்பங்களையும் சேகரித்து புஸ்சிற்கு அனுப்பியிருந்தார்.

சிறிலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள வன்முறைகளால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு படுகொலைகளும், கடத்தல்களும் அதிகரித்துள்ளன.

எனவே அங்கு இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை அவதானிப்பதற்கும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக ஒரு சிறப்பு பிரதிநிதியை புஸ் நியமிக்க வேண்டும் என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்திருந்தனர்.
நன்றி>புதினம்.

No comments: