Friday, February 09, 2007

உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தில்: மூன்று அமைச்சர்கள் பதவிநீக்கம்!

சிறிலங்காவில் கடந்த வாரம் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களைத் தொடர்ந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகிய உட்பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலைமையில் மூன்று மூத்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்துள்ள அரசுத் தலைவர் மகிநத ராஜபக்ஷ, குறிப்பிட்ட அமைச்சுப் பொறுப்புக்களைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார். அமைச்சர்களான அநுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராட்சி ஆகியோரே இன்றிரவு அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த திடீர்ப் பதவி நீக்கத்துக்கான காரணம் என்ன என்பது உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இருந்த போதிலும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்ததால் பெரும் அதிருப்தியடைந்திருந்த இம்மூவரும் அரசுத் தலைவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். ஐ.தே.க. உறுப்பினர்களை அரசுடன் இணைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கியதையும் இவர்கள் கண்டித்தார்கள்.

இந்த நிலையில் தொலைபேசி மூலமாக தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அநுரா பண்டாரநாயக்க, அரசுத்தலைவருக்கு நெருக்கமானவர்களே இக்கொலை அச்சுறுத்தலை விடுத்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் நேற்று அநுரா பண்டாரநாயக்க கடுமையான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் ஆளுங்கட்சியிலிருந்தே வெளிவரத் தொடங்கியதைத் தொடர்ந்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அரசுத் தலைவர் இன்று மாலை இம்மூன்று அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்வதற்ன உத்தரவை வெளியிட்டார்.
நன்றி>புதினம்.

No comments: