Friday, February 02, 2007

அதிக அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப்பகிர்வே சாத்தியமானது - இந்தியா.

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிக அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப்பகிர்வுள்ள தீர்வுத்திட்டமே இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு சிறீலங்காவிற்கு தேவையானது. அதை அமூல்ப்படுத்த வேண்டிய தருணமும் இது தான் என இந்தியா அண்மையில் விஜயம் செய்த சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லகமவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது


அது மேலும் தெரிவித்ததாவது:

சில வருட அமைதிக்குப் பின்னர் 2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மோதால்கள் உக்கிரமடைந்துள்ளன. ஆனால் சிறீலங்காவில் உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என்பதை சிறீலங்கா நினைவில் கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுச் செயலாளர் பிரணாப் முகர்ஜி போகோலகமாவிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது:

சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் தாக்குதல்கள் எதிர்த்தாக்குதல்கள் தொடர்பாக இந்திய கவனித்து வருகின்றது. இந்த மோதல்களில் அதிகளவில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரப்பகிர்வு தொடர்பான தீர்வுக்கு சிறீலங்காவில் தோன்றியுள்ள எதிர்ப்பு தொடர்பாக இந்தியா கவலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வெளிநாட்டு அமைச்சர் போகல்லகம, இந்தியத் தலைவர்களுக்கு அமைதி முயற்சியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், தமது அரசு அதிகாரப்பகிர்வு திட்டத்தை முன்வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ஜேர்மன் பயணத்தின் முன்னர் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போகோலகமாவிடம் சிறீலங்காவில் நடைபெறும் மனிதஉரிமை மீறல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்ததுடன் மீண்டும் மீண்டும் பயங்கரவாதத்தை அழிப்பதாகவே கூறிக்கொண்டிருந்தார். அதே சமயம் விடுதலைப்புலிகள் சமாதான நடவடிக்கையில் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

அதிகளவிலான ஐ.தே.கா உறுப்பினர்களை அரசு உள்வாங்கியதானால் ஐ.தே.கா மற்றும் சுதந்திரக்கட்சி ஆகியன 2006 இல் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்துவிடாது. புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

பேச்சுக்களின் மூலம் தீர்வு எட்டப்படுவதை நாம் ஊக்கிவிக்கிறோம். எமது அரசு அமைதி முயற்சியில் உறுதியாக உள்ளது. விடுதலைப்புலிகள் தமது போக்கை மாற்றி பேச்சுக்களுக்கு திரும்ப வேண்டும். விடுதலைப்புலிகளிடம் இருந்து அதிகளவான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.

அதேசமயம் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பானால் நீங்கள் அதை ஊக்கிவிக்க கூடாது, அவர்கள் முறியடிக்கப்பட வேண்டியவர்கள். எமது அரசு பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியாக உள்ளது.

விடுதலைப்புலிகள் அண்மையில் கிழக்கில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர், அவர்கள் வலிமையானவர்கள் என்றால் நாம் அவர்களின் வலிமை எவ்வளவு என்பதை பார்க்கலாம். கிழக்கில் அவர்களின் வலிமை என்னவாக இருந்தது? ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது எனவும் தெரிவித்தார்.

சிறீலங்காவின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இந்தியா ஆதரவளிப்பதாக கூறிய போகோலாமகா பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தும்படியும், இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாது எனவும் இந்தியா தொடர்ந்து கூறிவருவது தொடர்பாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டில் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில். அங்குள்ள உண்மையான நிலைமைகள் இங்கு மிகைப்படுத்தி வெளியிடப்படுகின்றன என தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: