அண்மையில் வாகரைப் பிரதேசத்தை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்பு இங்கே புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுடைய பலம் மற்றும் பலவீனங்கள்பற்றி அதிகளவுக்கு பேசப்படுகிறது.
ஆய்வாளர்கள், விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள், இணைத்தளங்களின் கருத்தாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்தியல் தளத்தில் நின்று தங்களது அரசியல் சார்புத் தன்மைக்கு எற்றவாறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
சிறீலங்கா அரசதரப்பினதும் அதன் ஒட்டுக் குழுக்களினதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விடுதலைப்புலிகளின் கதை முடிந்துவிட்டது.அவர்களின் போரிடும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசபடையினரில் படை வலிமைக்கும் நவீனரக ஆயுதங்களுக்கும் முன்னால் விடுதலைப்புலிகளின் படையணிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று தாங்களே ஒரு தீர்ப்பை சொல்லி-அதை பிரகடனப்படுத்தி அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டிருக்கின்றன.
மறு புறத்திலே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்களும் அவற்றிலே உலாவரும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் பத்தி எழுத்தாளர்களும் 'விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாகவே பின்வாங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் இது தான் நடந்தது.முல்லைத்தீவில் அடி விழவில்லையா? மாங்குளம் வரை முன்னேறி வந்த படையினரை ஜெய்சிக்குறு சமரில் ஓட ஓட அடித்த விரட்டவில்லையா? புலி பதுங்குவது பாய்வதற்கே! வான் படையை அவர்கள் இன்னமும் களம் இறக்கவில்லை.அது களம் இறங்கும் போது சிங்களப்படை சிதறி ஓடும்' என்று கைதேர்ந்த சோதிடர்கள் போல ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே சாதாரண புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பலருக்கு ஒன்றும் புரிவில்லை.'நாட்டில் என்ன நடக்கிறது. சிறீலங்கா அரசபடைகளும் ஒட்டுக் குழுக்களும் இவ்வளவு கொடூரங்களை இழைத்த பின்பும் விடுதலைப்புலிகள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள். சம்பூரை மாவிலாற்றை வாகரையை ஏன் அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள்?” என்ற ஆதங்கங்கத்துடன் கூடிய கேள்விகள் புலம்பெயர்ந்த ஏராளமான தமிழ் மக்களிடம் இருக்கின்றன.
சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை என்பதையும் இவ்வாறன சந்ததேகங்களை கேள்விகளை திட்டமிட்டு உருவாக்குவதும் எதிரியினுடைய போர் தந்திரோபாயங்களில் ஒன்று என்பதையும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆனால் எந்த ஊடகமும் இதுவரை அந்த வேலையை சரிவர செய்யவில்லை. சினிமாவும் சின்னத்திரை தொடர்களும், சமூகப் பொறுப்புணர்வும் தமிழ்தேசிய கருத்தில் பர்வையும் அற்ற இம்சைத் தொடர்களும் தான் தமிழ் மக்களின் தேசிய உணர்வை கட்டி எழுப்பவதற்கு அத்தியாவசியமானவை என்று இந்த ஊடகங்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு சின்னத்திரை தொடர் அல்லது ஒரு இம்சைத் தொடர் ஒளிபரப்பப்படவில்லை என்றால் தொலைபேசி எடுத்து குழம்பும் ஒரு 50 அல்லது 100 பேரின் விருப்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த தமிழனத்தின் எதிர்கால நலன் என்ற விடயத்துக்கு இந்த ஊடகங்கள் கொடுப்பதில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய உண்மையாகும்.
ஆனால் சிறீலங்கா அரசு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஊடகங்களை பயன்படுத்துவதில் மிகத் திறமையாகச் செயற்பட்டு வருகிறது.
சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை அது தமிழிழ தேசியவிடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளாக . இருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மனோபலத்தை சிதைப்பது, தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு ஊடாக தனக்குத் தேவையான உளவுத் தகவல்களை திரட்டுவது என்ற இரண்டு அடைப்படை நோக்கங்களுக்காக பெருந்தொகைப் பணத்தையும் ஆளணி நிபுணத்துவ வசதிகளையும் பயன்படுத்துகிறது.
ஒரு நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு விடுதலை இயக்கம் நிரந்தரமான தளப்பிரதேசங்களையும், நகரும் அல்லது மிதக்கும் தளப்பிரதேசங்களையும் செல்வாக்குப் பிரதேசங்களையும் வைத்திருப்பது வழக்கமாகும். உதாரணமாக 90 களின் முற்பகுதியில் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் வன்னிப் பெரு நிலப்பரப்பையும் நிரந்தரமான தளப்பிரதேசங்களாகவும் தென் தமிழீழத்தை நகரும் தளப்பிரதேசங்களாகவும் செல்வாக்குப் பிரதேசங்களாகவும் வைத்திருந்தார்கள்.
இந்த நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் அந்தக்காலகட்டத்தில் எடுப்பதற்கு எதிரியினுடைய அரசியல் இராணுவ நோக்கங்கள் கள நிலைமை போரியல் தந்திரோபாயம் என்று பல் வேறு விடயங்கள் காரணமாக இருந்தன.
1990 களின் பிற்பகுதியில் இந்த நிலைமை மாறுகிறது. வட தமிழீழத்தில் வன்னிப் பெரு நிலப்பரப்பு நிரந்தர தளப்பிரதேசமாக மாற யாழ்ப்பாணக் குடாநாடு செல்வாக்குப் பிரதேசமாக மாறுகிறது. தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதி நிரந்தரத் தளப்பிரதேசமாகவும் வாகரை முதல் சம்பூர் வரையிலான பகுதிகளும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளும் நகரும் தளப்பிரதேசங்களாக மாறுகின்றன.திருகோணமலை நகரம் மற்றும் மட்டக்களப்பின் எழுவான்கரை பகுதிகள் செல்வாக்குப் பிரதேசங்களாக மாறுகின்றன.
அப்போது ஆட்சியிலிருந்த சந்திரிகா அரசின் போர்த்தந்திரங்களும் அரசியல் நோக்கங்களும் அதனால் ஏற்பட்ட கள நிலை மாற்றங்களும் இந்த தளப் பிரதேசங்கள் மாறுவதற்கு காரணமாக அமைந்தன.
தற்போது மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மகிந்த சிந்தனை என்ற பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இராணுவ அரசியல் நகர்வுகளால் மீண்டும் தளப்பிரதேசங்கள் மாறுகின்றன. நகரும் தளப் பிரதேசங்களாக இருந்த சம்பூர் மாவிலாறு வாகரை என்பன கைவிடப்படுகின்றன. இவை ஏன் கைவிடப்பட்டன என்பதற்கான பதில் விடுதலைப்புலிகளின் போத்தந்திரமும் நடை முறைத் தந்திரமும் சார்ந்ததாக இருக்கிறது.
எப்போதும் போரிடும் இரண்டு தரப்புகளுக்கு இடையில் தளப்பிரதேசம் என்று வருகின்ற போது ஒரு தரப்பு தற்காப்பு நிலையிலும் மறுதரப்பு தாக்குதல் நிலையில் இருப்பது வழக்கமாகும். ஒரு அரச படைகளுக்கும் ஒரு விடுதலை இயக்கத்துக்குமான களமுனைகளில் இந்தத் தற்காப்பு நிலை தாக்குதல் நிலை என்பது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். எப்போதும் ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட ஒரு அரசாங்கம் தனது இராணுவத்தை தற்காப்பு நிலையில் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து முடக்கி வைத்திருக்க விரும்புவதில்லை.அது அந்த இராணுவக் கட்டமைப்பை பலவீனமாக்கும் என்பதனாலேயே அவர்கள் அடிக்கடி ஆக்கிரமிப்பு படைநகர்வுகளை மேற்கொள்கின்றனர்.
இதேவேளை ஒரு அரசாங்கம் ஒரு விடுதலை இயக்கத்தின் தளப்பிரதேசங்களை கைப்பற்றவதற்கான ஆக்கிரமிப்பு படைநகர்வை முன்னெடுப்பதற்கு முன்பாகவே அந்த தளப் பிரதேசத்தை இழப்பது அந்த விடுதலை இயக்கத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சனை என்ற ஒரு மாயையை தன்னுடைய உளவு அமைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்குகிறது.
தன்னுடைய தந்திரோபாயத்தை புரிந்துகொள்ளதாக அந்த விடுதலை இயக்கம் தன்னுடைய போர் தந்திரம் நடைமுறைத் தந்திரங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு 'கௌரவப் போர்' ஒன்றுக்காக தன்னுடைய வளங்களை அந்தக் களமுனையிலே கொண்டு வந்து குவிக்கும் போது தன்னுடைய மற்றும் தனக்கு உதவுகின்ற மேலாதிக்க சக்திகள் வழங்குகின்ற பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அந்த விடுதலை இயக்கத்தை அழித்தொழித்துவிடுவது அல்லது பலவீனப்படுத்தி விடுவது நீன்ட நெடுங்காலமாக அனைத்து ஆக்கிரப்பு அரசுகளும் கையாண்டு வரும் போர் தந்திரமாகும்.
ஆக்கிரமிப்பாளர்களின் இந்தச் சதித்திட்டத்தை துல்லியமாக கணக்கில் எடுத்த பல விடுதலை இயக்கங்கள் 'ஓரடி முன்னால் ஈரடி பின்னால் அல்லது ஈரடி முன்னால் ஓரடி பின்னால்' என்கின்ற புகழ்பெற்ற இராணுவ அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் தங்களது தளப்பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி எதிரியை தாக்குதல் நிலையில் இருந்து தற்காப்பு நிலைக்குத் தள்ளி அகலக் கால் வைக்க வைத்து அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களையே சிக்கவைத்த வரலாறுகள் நிறையவே இருக்கின்றன.
விடுதலைப்புலிகள் சம்பூர் மாவிலாறு வாகரை ஆகிய பகுதிகளில் இருந்து பின்வாங்கியது இவ்வாறான ஒரு யுத்ததந்திரத்தின் அடிப்படையில் என்பது சிறிலங்கா அரசுக்குத் தெரியும். அதிலும் இந்த யுத்தந்திரம் ஏனைய நாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் பின்பற்றப்பட்ட யுத்ததந்திரங்களின் அச்சொட்டான கொப்பி அல்ல என்பதும் எப்போதுமே தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனக்கே உரித்தான தனித்துவமான போர்தந்திரங்களையும் வியூகங்களையும் வகுப்பதில் வல்லவர் என்பதும் சிறீலங்கா அரசுக்கும் அதன் படைத்துறை கொள்கை வகுப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். அவரது அடுத்த நகர்வு என்பது தங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை கொடுக்கக் கூடிய நகர்வாக அமையப் போகிறது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் அந்த நகர்வு நடைபெறுவதற்கு முன்பு தங்களுடைய படைகள் பேரிடும் ஆற்றலில் விடுதலைப்புலிகளை விட மேலானவர்கள்.அல்லது விடுதலைப்புலிகளை அழிக்கும் ஆற்றல் தங்களது படைகளுக்கு உள்ளது என்ற ஒரு தோற்றத்தை சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவதற்கு சிறீலங்கா அரசு முனைகிறது. ஒரு நீண்ட நெடிய உள்நாட்டு போரில் தளப்பிரதேசங்களை கைப்பற்றுவது என்பது தற்காலிக வெற்றி என்பதை மூடி மறைத்து அதை நிரந்தர வெற்றியாகக் காட்டி அதனூடாக தனது அரசியல் பொருளாதாரத் தேவைகளை தற்காலிகமாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் அது முயன்று வருகிறது.
இதேவேளை விடுதலைப்புலிகளின் அடுத்த நகர்வு எப்படி அமையப் போகிறது? எந்தக் களமுனைகளை அவர்கள் திறக்கப் போகிறார்கள்? தங்கள் போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு அவர்கள் என்னென்ன தயாரிப்புக்களை செய்கிறார்கள்? சர்வதேச ரீதியில் என்ன நகர்வுகளை அவர்கள் மேற்கொள்கின்றார்கள்? மேற்கொள்ளப் போகிறார்கள்? என்கின்ற தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் சிறீலங்கா அரசு தீவிரப் படுத்தியுள்ளது.
இதற்காக ஊடகத்துறையை கையில் எடுத்துள்ள சிறீலங்கா அரசு ரம்புக்வெல, பிரசாத்சமரசிங்க, பாலித கோஹன்ன இருந்து ஒட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள் என்று நுற்றுக்கணக்கானோரை களமிறக்கியிருக்கிறது. உண்;மையில் தமிழகத்திலும் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கண்ணுக்கு புலப்படத் தக்க வைகையிலும்- புலப்படாத வகையிலும் என்று ஊடக யுத்தம் ஒன்றையும் சிறீலங்கா அரச ஆரம்பித்திருக்கிறது.
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதி உயர் பாதுகாப்புடன் ஊடகவியலாளர் மகாநாடுகளை கூட்டும் ஹெகலிய ரம்புக்வெல 'தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்' என்று அரசாங்கம் தயாரிக்க இருக்கும் திரைப்படத்துக்கான கதையை சொல்லுவார். சில வேளைகளில் இந்தக் கதைக்கான மெருகூட்டல்களை பாலித கோஹன்னவும் பிரசாத் சமரசிங்காவும் செய்வார்கள்.
பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று முடிவின்றி தொடரும் இந்தக் கதைக்கு பின்னர் சிங்கள ஊடவியலாளர்களும் ஒட்டுக்குழுக்களின் ஊடகவியலாளர்களும் திரைக்கதை வசனம் எழுவார்கள். தமிழகத்திலுள்ள தமிழர் விரோத ஊடகங்களும் மேற்குலக ஊடகங்களும் இந்த கதை -திரைக்கதையை 'ஆஹா அற்புதம் அபாரம்' என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.
மறு புறத்திலே இந்த அபத்தமான கதையை அம்பலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செயற்படும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களும் அவற்றின் ஆய்வாளர்களும்- விமர்சகர்களும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஊடக யுத்தம் பற்றியோ அந்த யுத்தத்தக்கூடாக அரசாங்கம் அடைய நினைக்கும் இலக்குகள் பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.ஒரு ஊடக யுத்தத்தை -கருத்தியல் யுத்தத்தை எப்படி தர்க்க ரீதியாக எதிர் கொள்வது என்பது பற்றி எந்தவிதமான கொள்கையும் திட்டமிடலும் இல்லாது மேலெழுந்தவாரியாக மரபுவழி -மேற்குலகப்பாணியில் ஆய்வுகளை விமர்சனங்களை வைப்பதும் செய்திகளை உருவாக்குதும் தான் ஊடகத்துறையின் உச்சம் என்று நினைக்கும் போக்குத்தான் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களிடம் காணப்படுகிறது.
எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஓரு மோசமான எதிர் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கு மரபு வழியிலான பதில் பிரச்சாரத்தையே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் முன்வைக்கின்றன. இந்த மரபு வழி ஊடகப் பிரச்சார முறை என்பது தங்களது சந்தைப் பொருளாதார நலன்களுக்காவும் பிராந்திய அரசியல் நலன்களுக்காவும் மேற்குலக அதிகார வர்க்கம் கட்டமைத்த ஒருவடிவமாகும். மக்கள் செயற்பாட்டாளர்களாகவும் செற்திறன் உள்ளவர்களாகவும் மாறுவதையும் மாற்றப்படுவதையும் தடுத்து நிறுத்தி அவர்களை எப்போதும் நுகர்வோராக (அது கருத்துக்களாகவும் இருக்கலாம் பொருட்களாகவும் இருக்கலாம்) வைத்திருப்பதே இந்த ஊடகப் பிரச்சார முறையின் நோக்கமாகும்.
உதராரணமாக சம்புரை மாவிலாறை வாகரை சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பை 'விடுதலைப்புலிகளின் தோல்வியாகவும் சிங்கள பௌத்த (பேரினவாத)த்தின் வெற்றியாகவும் அந்தக் கருத்தியலின் காவலர்களாக இருக்கும் சிங்கள இரணுவம் விடுதலைப்புலிகளை விட மேலானது அவர்களை அழிக்கும் வல்லமை கொண்டது' என்ற கருத்துருவாக்கத்தை சிறீலங்கா அரசு தன்னுடைய சொந்தக் கருத்தியல் தளத்தில் நின்று மேற்கொள்கின்ற போது சிங்கள மக்களையும் சிங்களை படையினரையும் தமிழர்களுக்கு எதிராக போர் புரியும் - தமிழர் தாயகத்தை அழிக்கும் செயலூக்கமுள்ளவர்களாக மாற்றும் நோக்கம் அதில் அடங்கியிருக்கிறது.
மறு புறத்திலே இந்த பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்கு எதிரான முறியடிப்பு பரப்புரையை செய்வதாக சொல்லிக் கொள்ளும் தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் சிறீலங்கா அரசின் இந்த இராணுவ நடவடிக்கைகளின் பின்னால் உள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை கண்டு கொள்வதில்லை.
சம்;பூரை மாவிலாறை வாகரையை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் சிறீலங்கா அரசு என்ன செய்தது? அங்கிருந்த மக்களுக்கு எவ்வாறான நெருக்கடிகளைக் கொடுத்தது? இந்தப் பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை அது சொல்ல விரும்பியது? இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கான உடனடித் தேவை என்ன? நீண்டகாலத் தேவை என்ன? இந்த பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்த பின்பு சிங்கள பௌத்த பேரினவாதிகளினது கருத்தியல் வெளிப்பாடுகள் எவ்வாறு இருந்தன? 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் தென் தமிழீழம் சிறிலங்கா படைகளின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்த போது இடம்பெற்ற படுகொலைகள் என்னென்ன? இந்தப் படுகொலைகள் மூலம் சிங்கள பௌத்த பேரினவாதிகள் எதை சாதிக்க நினைத்தார்கள்? என்பவற்றை தர்க்க ரீதியான ஆய்வுக்குட்படுத்தி ஒட்டு மொத்தமான தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பக்கு எதிராக போராட வேண்டியது அவர்களது வரலாற்றுக்கடமை என்பதை தமிழ் மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதற்கு அவர்களை தயார் படுத்தவதற்கும் தவறிவிட்டன.
மாறாக சிறீலங்கா அரசும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் விரும்புவது போல தமிழ் மக்களை பார்வையாளர்களாக சிறந்த கிரிக்கட் ரசிகர்களைப் போல மாற்றும் முயற்சிகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு கிறிக்கட் ஆட்டத்தில் சிக்சர் அடித்தால் விசில் . பௌன்றி அடித்தால் கைதட்டல், ஒன்று இரண்டு மூன்று என்று ஒட்டங்கள் எடுத்தால் பரவாயில்லை என்றும் ஓட்டம் எதுவுமே எடுக்கவில்லை என்றால் இவர்களுக்கு ஆடத்தெரியாது என்றும் விமர்சிப்பதைப் போலவே பேராட்டத்தை விமர்சிக்கும் போக்கு வளர்ந்து வருகிறது.
இந்தப் போக்கை வளர்த்துவிடுவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
உயிரையும் இரத்தத்தையும் ஆகுதியாக கொடுத்து நடத்தப்படும் ஒரு வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தின் மதிப்பிட்டை அற்பத்தனமான நாணய அளவீடுகளாலோ சதாரணமான வார்த்தைகளாலோ அளவிட முடியாது என்பதை நமது ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்துவதற்கு மறந்துவிடுகின்றன.
என்னுடைய நிலத்தை- என்னுடைய மண்ணை- என்னுடைய வீட்டை என்னுடைய தாயகத்தை -பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது என்னுடைய கடமை என்பதையும், அதற்காக நான் என்ன செய்தேன் ? என்பதையும் ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். என்னுடைய தாயகம் அழிக்கப்படும் போது, என்னுடைய மண் ஆக்கிரமிக்கப்படும்போது ,நான் பார்வையாளனாக இருந்து விமர்சனம் வைத்துக் கொண்டுடிருக்க முடியாது என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். என்னுடைய நாட்டுக்காக -இனத்தக்காக - வருங்கால சந்ததிக்காக நான் என்ன செய்தேன்? என்ற கேள்வியை மக்களுடைய மனங்களிலே எழுப்பி அவர்களது மனச்சாட்சியை தூண்டி அவர்களை தாயக விடுதலைப்போரில் பங்காளர்களாக மாற்றவேண்டிய பெரும் பொறுப்பு தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு இருக்கிறது.
தளங்கள் மாறலாம் போர் களங்கள் மாறலாம் தமிழீழ தனியரசு என்ற இலக்கு மாறாது என்பதையும் அந்த இலக்கை விரைந்து அடைவதற்கு ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் இருந்த எதைச் செய்யலாம் எதைச் செய்யவேண்டும்? என்ற ஆக்க பூர்வமான சிந்தனையும் செயலும் தான் இப்போதைய தேவையாகும்.
-சிவா சின்னப்பொடி
நன்றி>யாழ்.காம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இது போன்ற கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும்.
நல்ல கட்டுரை, இணைப்புக்கு நன்றி.
Post a Comment