இலங்கை இராணுவம் சமீபத்தில் பெற்றுள்ள இராணுவ வெற்றிகளாலும், வடகிழக்கை பிரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினாலும் உருவாகியுள்ள புதிய சூழ்நிலைகளுக்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்க முயலும் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் ஊடாகவே தீர்வைக் காண முயல வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் முன்வைக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகளை இல்லாமல் செய்துவிடக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை இருதரப்பும் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளாக், `தினக்குரல்' இற்கு அளித்த விசேட பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் அல்லது தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுப்பதை இருதரப்பும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் தனது பேட்டியில் மேலும் குறிப்பிட்டதாவது;
கேள்வி: இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்த உங்களது கருத்து என்ன? நம்பிக்கை தரக்கூடியதாக ஏதாவது உள்ளதாக கருதுகிறீர்களா?
பதில்: இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பொன்னான வாய்ப்பு தற்போதுள்ளதாக கருதுகின்றேன். ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் அதிகாரப் பகிர்வு யோசனைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன. இதற்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். இது முக்கியமான முயற்சியென கருதுகின்றோம். அரசாங்கத்திற்கு இந்த விடயத்தில் ஊக்குவிப்பையும் ஆதரவையும் வழங்கியுள்ளோம். மிக விரைவில் முழுமையான ஒரு யோசனையை உருவாக்குவதன் மூலம் அதனை அனைத்து கட்சி குழுவில் ஆராயலாம்.
இது தமிழ் மக்களினது அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவும், சிங்கள, முஸ்லிம் மக்களினது அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவும் அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
ஜனாதிபதி குறிப்பிடத்தக்க அரசியல் திறமையுள்ளவர் எனவும் அவரால் இதற்கான ஆதரவை தென்பகுதி மக்களிடமிருந்து பெற முடியும் என்றும் எதிர்பார்க்கின்றோம். இதன் காரணமாக நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.
இலங்கை தனது நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பு இதுவென கருதுகின்றோம்.
கேள்வி: பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பரஸ்பரம் காட்டப்பட்ட அக்கறை குறித்து?
பதில்: பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றன. முன்னர் நான் தெரிவித்தது போல இது விரைவாக முன்னெடுக்கப்படும் என கருதுகின்றேன்.
எவ்வளவு விரைவில் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுகின்றதோ அவ்வளவு விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் கூடிய விரைவில் யுத்தத்திற்கும் யுத்தத்துடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணலாம்.
கேள்வி: சர்வதேச சமூகத்தின் முயற்சிகள் எவ்வாறானதாகவுள்ளன?
பதில்: இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளை ஊக்குவிப்பதில் பெரும் ஆர்வத்துடன் உள்ளன. தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நான் இதுவரை தெரிவித்த அனைத்து விடயங்களையும் எனது இணைத்தலைமை சகாக்கள் ஆதரிப்பார்கள் என்று கருதுகின்றேன்.
அமெரிக்கா தொடர்ந்தும் நோர்வேயின் சமாதான முயற்சிகளையும், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பணியையும் ஆதரிக்கின்றது. இலங்கையின் நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமாகாது என்ற உறுதிப்பாட்டில் நாங்கள் ஐக்கியப்பட்டுள்ளோம். சகல சமூகங்களினதும் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய பேச்சுவார்த்தை மூலமான தீர்வே சாத்தியம்.
கேள்வி: யாழ்ப்பாணத்திற்கான உங்களது சமீபத்தைய விஜயம் எவ்வாறானதாக அமைந்திருந்தது? தமிழ் மக்கள் தமது ஒரு வருட கால அனுபவத்திற்குப் பின்னரும் சர்வதேச சமூகத்தினை நம்புவதற்கான காரணங்கள் உள்ளதாக கருதுகிறீர்களா?
பதில்: யாழ்ப்பாணத்திற்கு நான் விஜயம் மேற்கொண்டுள்ளேன். அவர்கள் அங்கு மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்கிறார்கள் என்பது தெரியும். அரசாங்கம் இதற்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது தெரியும். அதேவேளை, இன்னமும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. மனித உரிமைகள் அமைச்சர் சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அரசாங்கம் யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கான அறிகுறியாக நான் இதனை கருதுகின்றேன்.
கேள்வி: அரசாங்கம் யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கருதுகிறீர்களா?
பதில்: அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு தீவிரமான முயற்சிகளை எடுத்துள்ளதாக நாங்கள் கருதுகின்றோம்.
இன்னமும் செய்து முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. அரசாங்கம் இதனை ஏற்றுக் கொள்ளும் என நான் கருதுகின்றேன்.
கட்டிடப் பொருட்களுக்கான தேவையுள்ளது. மக்கள் மீண்டும் தமது தொழில்களை ஆரம்பிப்பதற்கும் வருமானத்தை உழைப்பதற்கும் இது அவசியம். மக்கள் நாளாந்த வாழ்வை மேற்கொள்ள இது உதவியாக அமையும். இதற்கு சீமெந்து போன்ற கட்டிடப் பொருட்கள் தேவை.
அரசாங்கம் இதற்கான வழி வகைகளை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாங்களும் அவர்களை இதில் ஊக்குவிக்கின்றோம்.
கேள்வி: காலியில் இடம்பெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருந்தீர்கள்?
பதில்: இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் உதவி வழங்கும் நாடுகளால் வழங்கப்படும் உதவிகளை கொண்டு செல்லும் பணியில் (விநியோகிக்கும்) அரச சார்பற்ற அமைப்புகள் மிக முக்கிய பணியாற்றுகின்றன என்பதே எமது நிலைப்பாடும், உதவி வழங்கும் சமூகத்தின் நிலைப்பாடுமாகும். அமெரிக்காவை பொறுத்தவரை அதன் சகல வகையான உதவிகளும் அவை கடல்கோள் நிவாரண உதவிகளாக அமையலாம் அல்லது வேறு உதவிகளாக இருக்கலாம். அவை யாவும் அரச சார்பற்ற அமைப்புகள் ஊடாகச் செல்கின்றன.
இதன் காரணமாக நாங்கள் மிக உறுதியாக அவர்களது பங்களிப்பை ஆதரிக்கின்றோம். அதேவேளை, உறுதிப்படுத்தப்படாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு எதிராக முன்வைக்கப்படுவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான இவ்வாறான குற்றச்சாட்டுகளை அனுமதிக்கப்போவதில்லை என உறுதியளித்துள்ளமை குறித்து நாங்கள் திருப்தியடைகின்றோம்.
அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் இது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எந்தவொரு அரசு சார்பற்ற அமைப்பாவது இலங்கையின் சட்டங்களை மீறும் விதத்தில் செயற்பட்டிருப்பது உறுதியாகும் பட்சத்தில் (அமெரிக்க சட்டத்தையோ) அதனை சரி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்.
ஆனால், இதற்கு முன்னதாக ஊடகங்களில் இது குறித்த எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.
ஏனெனில், இவ்வாறான அறிக்கைகள் அரசு சார்பற்ற அமைப்பின் செயற்பாடுகளை மிக மோசமாகப் பாதிக்கும். அரச சார்பற்ற அமைப்புகளின் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
கேள்வி: ஆட்கடத்தல், காணாமல்போதல் போன்றன அதிகரித்துள்ள இலங்கை சூழல் பற்றிய உங்களது கருத்து என்ன?
பதில்: இலங்கையில் மனித உரிமை நிலைவரம் கடந்த வருடம் மிக மோசமாகியுள்ளது. அமெரிக்கா தனது வருடாந்த மனித உரிமை அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடுகின்றது. இதில் உலகின் அனைத்து நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் 2006 இல் நிலைவரம் மோசமடைந்துள்ளது என்பதே எமது மதிப்பீடு.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது குறித்து நாங்கள் திருப்தியடைகின்றோம். அமெரிக்காவும் ஏனைய உலக நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இதற்கு நியமித்துள்ளன. ஆணைக்குழுவின் பணிகளை கண்காணிப்பதற்கும் அதற்கு ஆலோசனைகள் வழங்கவுமே இவர்களை நியமித்துள்ளோம்.
இந்தப் பணி ஆரம்பித்துள்ளது. இது மிக முக்கியமானது என நான் கருதுகின்றேன். எனினும், பிரச்சினைக்காக ஒரு பகுதி தீர்வு மாத்திரமே இது என நாங்கள் கருதுகின்றோம்.
அரசாங்கம் ஆட்கடத்தல், காணாமல்போதல், மனித உரிமை மீறல் போன்றவற்றிற்கு தீர்வு காண முயல வேண்டும்.
சர்வதேச சமூகம் இதில் எவ்வகையிலும் உதவுவதற்கு தயாராகவுள்ளது.
கேள்வி: இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் இன்றைய நிலை எவ்வாறானதாகவுள்ளது?
பதில்: இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு சில சவால்கள் உருவாக்கியுள்ளன. சுதந்திர ஊடகம் என்பது எந்த ஜனநாயக சமூகத்தினதும் மிக முக்கியமான பகுதி.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் சுதந்திர ஊடகத்திற்கான சூழலை எதிர்பார்ப்பதற்கான உரிமை நிச்சயமாகவுள்ளது.
நாங்கள் இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கான எமது ஆதரவை தெரிவிக்க விரும்புகின்றோம்.
உலகின் ஏனைய பகுதிளைப்போல் சுதந்திர ஊடகங்களை அழைத்து உரையாடுவதை ஒரு நடவடிக்கையாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இலங்கையின் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச சமூகம் இதனை செய்கின்றது. செய்யும்.
கேள்வி: தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: இல்லை, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நியாயபூர்வ தன்மை கொண்டதல்ல என நாங்கள் கருதுகின்றோம்.
பயங்கரவாதத்திற்கும் வன்முறை களுக்கும் எதிராக நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.
விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ஒரேயொரு வழி.
அரசாங்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் இதே கருத்தினை முன்வைத்துள்ளோம். இங்கு மாத்திரமல்ல உலகின் வேறு எந்த பகுதியிலும் வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடமில்லை.
கேள்வி: தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான துயரங்கள் உள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: ஆம், ஆம். நாங்கள் தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான துயரங்கள் உள்ளன. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
அரசாங்கத்தால் முன்வைக்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வு யோசனையின் முக்கிய நோக்கமாக இது அமைய வேண்டும்.
அதேவேளை, இதில் பயங்கரவாதத்திற்கோ எந்த இடமுமில்லை என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கான உங்களது செய்தி என்ன?
பதில்: விடுதலைப் புலிகளுக்கான எனது செய்தி அவர்கள் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் கைவிட வேண்டும் என்பதே. மேலும், அவர்கள் நேர்மையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
நான் முன்னர் சொன்னதுபோல 2007 இல் இந்த அழகிய நாட்டிற்கு முக்கியமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என நம்புகிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண்பதற்கான முன்னேற்றத்தை காண்பதற்கான சந்தர்ப்பம் இது.
பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை சாதகமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு வெளியே இருந்தாலும் சிறப்பானதொரு அதிகாரப் பகிர்வினை ஆதரிக்க தயாராகவுள்ளது.
இதனால், அரசாங்கத்திற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை செய்வதற்கான ஆதரவு கிடைக்கும். (இலங்கை மக்களின் ஆதரவும் கிடைத்தால்) ஆகவே இது முக்கியமான சந்தர்ப்பம் என கருதுகின்றேன். விடுதலைப் புலிகள் இதனை புரிந்துகொள்ள வேண்டும். இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல வருடகால வன்முறைகளை அவர்கள் கைவிட வேண்டும். இதன்மூலம் அவர்கள் எதனையும் சாதிக்கவில்லை. தமிழ் மக்களும் எதனையும் சாதிக்கவில்லை. இதற்கு மாறாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால் பெருமளவு துயரத்தினை அனுப்பவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இறுதி தீர்வை தொடர்ந்து ஆயுதங்களை கைவிடுவார்கள் என நம்புகின்றோம்.
கேள்வி: வட, கிழக்கு பிரிக்கப்பட்டது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில்: வாகரையிலும் ஏனைய பகுதிகளிலும் இராணுவம் அடைந்த வெற்றி தரை நிலைவரத்தை மாற்றியுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக வட, கிழக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் அதிகாரப் பகிர்வு யோசனைகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இருதரப்பும் இதற்கு உள்ள வாய்ப்புகளை மூடிவிடக் கூடிய நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும், எடுக்காது என்பதே எமது நிலைப்பாடு.
இருதரப்பும் முன்கூட்டிய நடவடிக்கைளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நன்றி>தினக்குரல்
Monday, February 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment