Saturday, February 24, 2007

சிறிலங்கா மீதான அழுத்தங்களில் இந்தியாவும் இணைந்து கொள்ளலாம்: மங்கள சமரவீர.

சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அதாவது இந்திய மத்திய அரசின் கொள்கைகள் தமிழ்நாட்டினால் வழி நடத்தப்படுகின்றன.

இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு எடுக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடுதான் பல தொழில்துறைகளில் அதன் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அபிவிருத்திகளால் இந்தியாவை உலக வரைபடத்தில் இனங்காட்டியுள்ளது.
இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியில் இந்தியா, உயிராபத்துக்களை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு விநியோகம் செய்யாது என தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவின் நிலையை தெளிவாக காட்டியுள்ளது. இந்தியாவின் இந்த போக்கை மாற்ற வேண்டுமானால் நாம் அதிகாரப்பகிர்வை அங்கிகரிப்பதுடன் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பணிகளிலும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரச ஊடகங்களை அரசு தவறாக வழி நடத்துகின்றது. அதன் மீது குற்றம் சுமத்தும் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒரு குற்றமாகும். அதாவது தகவல் தருபவர்களை கொல்லும் அரசின் திட்டம் அனைத்துலக சமூகத்தை எம்மிடமிருந்து விலகிச்செல்லவே வழிவகுக்கும்.
எனினும் எனது புதுடில்லி விஜயத்தின் போது இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்பட்டது. இது இராணுவ உதவிகளில் கூட சாத்தியமாக இருந்தது. இந்தியா எமது கோரிக்கைகளில் பலவற்றை தந்துதவ முன்வந்திருந்தது. இதில் கடற்படை மற்றும் விமானப்படைக்கான உதவிகளும் அடங்கும்.

உதாரணமாக எனது ஒரு வேண்டுகோளில் நான் இந்தியவின் பிரதமரையும், பாதுகாப்பு அமைச்சரையும் ஏற்றுக்கொள்ள வைத்திருந்தேன். அதனை தொடர்ந்து எமது தேவைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு 48 மணி நேரத்தில் இந்தியா தனது சிறப்பு குழுவை கொழும்பிற்கு அனுப்பியிருந்தது. இது நீங்கள் அரச தலைவர் பதவியை ஏற்ற பின்னர் இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான உதாரணமாகும்.

இந்திய அமைதிப்படை காலத்தில் இருந்தது போன்றதான உதவியை இந்தியா சிறிலங்காவிற்கு வழங்காது என முன்னாள் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தெரிவித்திருந்தார்.

கடத்தல்கள், படுகொலைகள் என்பன அரச படைகள், கருணா குழு, விடுதலைப் புலிகள் போன்றவற்றால் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது அரச கட்டுப்பாட்டுப்பகுதி மற்றும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் நிகழ்கின்றன. இவை அரசால் அல்லது பயங்கரவாதக்குழுவால் மேற்கொள்ளப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் அரசுக்கு அதை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாது விட்டால் அரசு மீது இந்தகைய நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கான குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்புள்ளது.

விடுதலைப் புலிகளினதும் அதன் முன்னணி அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரங்களின் மத்தியிலும் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விடுதலைப் புலிகள் மீதான தடையை கொண்டு வருவதற்கு சம்மதிக்க வைத்திருந்தது. உங்களின் வழிநடத்தலில் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திலும் கனடாவிலும் இதை செய்திருந்தது.
அரசு அதிகாரப்பகிர்வை அளிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் தான் ஐரோப்பிய ஒன்றியம் இதை செய்திருந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துலக சமூகம், குறிப்பாக இந்தியாவும் இதை ஆதரித்திருந்தது. எனவே நாங்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும், உதாசீனப்படுத்த முடியாது" என அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி>புதினம்.

No comments: