Wednesday, January 31, 2007

இனப்பிரச்சினையில் மீண்டும் இந்தியா? முக்கியஸ்தர்கள் புதுடில்லியில் பேச்சு!

இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் இந்தியா மறைமுகமாக ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ள சம்பவங்களைத் தொடர்ந்து இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்திருக்கின்றது.


சிறிலங்காவின் முக்கிய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் புதுடில்லிக்குச் சென்றுள்ளதையடுத்தே இராஜதந்திர வட்டாரங்களில் இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம, சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன ஆகியோர் புதுடில்லிக்குச் சென்றுள்ளதையடுத்தே இந்தச் சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

பிரதமர், எதிர்ககட்சித் தலைவர் ஆகியோர் புதுடில்லி சென்றுள்ள பின்னணியில், சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாககமவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அழைப்பொன்றைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லி பயணமாகியிருக்கின்றார்.

இந்திய வெளிவிவகார அமைச்சரையும், முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கும் அவர், சிறிலங்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ள அரசியல் மாற்றங்கள் தொடர்பாக விளக்கிக் கூறுவார் எனத் தெரிகின்றது.

சிறிலங்கா அரச சமாதான செயலகப் பணிப்பாளரும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோகன்னவும் இந்தியா சென்றிருக்கின்றார். சமாதான முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும், சர்வ கட்சிக் கூட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகவும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லியில் இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ள பின்னணியிலேயே புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன நெருக்கடியுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருப்பது சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்தியா முமேற்கொண்டுள்ள ஒரு புதிய நகர்வின் ஒரு அங்கமாகவே இருக்கவேண்டும் என இராஜதந்திர வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தின் மாதிரியுடனேயே பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கவும், பாலித கோகன்னவும் புதுடில்லிக்குச் சென்றிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தீர்வு யோசனைகள் தொடர்பாக இந்தியா தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளையில், இனநெருக்கடிக்கு அதிகாரப் பகிர்வின் மூலமாக தீர்வைக் காண்பதற்கான புதிய செயற்திட்டம் ஒரு மாத காலத்தில் முன்வைக்கப்படும் எனவும், அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க புதுடில்லியில் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி>புதினம்.

No comments: