சிறிலங்கா அரசு வேண்டுமென்றே பொதுமக்கள் மீது இலக்கு வைத்து தாக்குவதாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று அறைகூவல் விடுத்துள்ளது.
அண்மையில் கொழும்பில் 20 உயிர்கள் வரை பலி வாங்கிய பேரூந்து குண்டுவெடிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அறிக்கை, பாதிப்படையக்கூடிய மக்களில் அதிக பாதிப்படையக்கூடியவர்கள் வாகரையில் வாழும் மக்கள் என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளது.
வாகரை மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தயாராக உள்ளன. ஆனால் வாகரைக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல வழியில்லை.
தொடர்ச்சியான எதிர்ப்புக்களை அடுத்து கடைசியாக, இரண்டு வாரத்துக்குத் தேவையான மனிதாபிமான உதவிப் பொருட்கள் நவம்பர் 29 ஆம் நாள் வாகரைக்குச் சென்றன என்று அந்த அறிக்கை கூறியது.
கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளர் மார்கரத்தா வால்ஸ்டோர்ம், அந்தத் தாக்குதல் மிகவும் வேதனைக்குரியது என்று கூறினார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
வேண்டுமென்றே பொதுமக்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்கிறது. 20 பேருக்கு அதிகமாக மரணமடைந்து, பலர் காயமடைந்த அண்மைய பேருந்து குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்து வேதனை அடைகிறது.
நாடு முழுவதும் பொதுமக்களுக்குப் பாதுகாப்புத் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை, அறைகூவல் விடுக்கிறது.
வாகரையில் நிலைமை படுமோசமாகி வருகிறது. இது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியது. கையிருப்புக்கள் தீர்ந்துவிட்டதால் 15,000 வரையிலான மக்கள் அங்கு உணவோ மற்றும் அடிப்படை வசதிகளோ இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் நாள் கடைசியாக உதவிப் பொருட்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு பிறகு, வாகரை செல்ல மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதியில்லை.
"வாகரையில் அகப்பட்டுள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். இவர்கள் பாதிப்படையக்கூடிய மக்களில் அதிக பாதிப்படையக்கூடியவர்கள். எப்போதும் முதியவர்கள் - நோய் வாய்ப்பட்டவர்கள்- உடல்குறைபாடுள்ளவர் என மிகவும் பலவீனமாக உள்ளவர்களே பின்னால் தங்கி விடுவார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. அவர்கள் இன்னமும் உணவோ, அவசர மருத்துவ சேவையோ, தங்குவதற்குக் கூரையோ இல்லாமல் இருப்பதுடன் தொடர்ச்சியான தாக்குதல்களின் மத்தியில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்" என்று இடைக்கால அலுவலக அதிகாரியும் மனிதாபிமான உதவிகள் ஒருங்கிணைப்பாளருமான அமின் அவார்ட் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வாழும் 70,000-க்கும் அதிகமான மக்களின் அடிப்படை மனிதாபிமானத் தேவைகளில் உதவவும் அவர்களைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தை ஆதரிக்கும் பரவலான நடவடிக்கைகளை உள்ளூர் அமைப்புக்கள் மற்றும் பங்காளி அமைப்புக்கள் வழியாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அதிகம் செய்து வருகிறது.
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு இடப்பெயர்வுக்கான வழிகாட்டிக் கொள்கைகள் குறித்து பாதுகாப்பு சபை தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்துலக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தில் உள்ள கடப்பாட்டை இருதரப்புக்கும் ஐக்கிய நாடுகள் சபை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Monday, January 08, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment