தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்குவதாகக் கண்டுபிடிக்கப்படும் உதவி வழங்கும் அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இவ்விதம் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் அனைத்துலக அமைப்பொன்றின் அலுவலகம் நேற்று வியாழக்கிழமை ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்குகின்றதா என்ற சந்தேகத்தின் பேரில் பல உதவி வழங்கும் அமைப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தி வருவதுடன், அதனடிப்படையில் நெதர்லாந்து அமைப்பொன்று நாட்டைவிட்டு வெளியேற்றபபடலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
அண்மையில் படையினர் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கஞ்சிகுடிச்சாறு பகுதியிலுள்ள புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றிய வேளையில் நெதர்லாந்தைச் சேர்ந்த 'சோஆ' அமைப்புக்கு சொந்தமான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தங்களின் சின்னத்துடன் ஏதாவது உபகரணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பின் அது திருடப்பட்டதாகவே இருக்கும் என 'சோஆ' அமைப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளையில், குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குற்றத்துக்குரிய அமைப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விசாரணையின் கீழுள்ள அமைப்புக்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. 'சோஆ' என்று அரச சார்பற்ற அமைப்பொன்று விடுதலைப் புலிகளின் ஸ்ரான்லி முகாமிலுள்ள மருத்துவமனை ஒன்றை நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் ரம்புக்வெல, சில அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.
இதேவேளையில், விசாரணையின் போது எமது சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டால், எமக்கு அவர்களது விசாக்களை இரத்துச்செய்ய வேண்டியிருக்கும். அல்லது அவர்களாகவே நாட்டைவிட்டு வெளியேறவேண்டியிருக்கும் எனவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.
இருந்தபோதிலும் தம்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என 'சோஆ' அமைப்பின் பொது அலுவல்கள் முகாமையாளர் அன்ஸ் லெம் முனதற்றா தெரிவித்துள்ளார். அத்துடன் போரின் காரணமாக தாம் தமது அலுவலகத்தை மூடி வெளியேறும் போது எல்லாவற்றையும் எடுத்துவர முடியாது எனவும், பலவற்றைக் கைவிட்டு வரவேண்டியிருந்த பின்னணியிலேயே அவற்றைப் படைத்தரப்பு கைப்பற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளையில் கொழும்பு நாரகேன்பிட்டிய பகுதியிலுள்ள மேற்படி அரச சார்பற்ற அமைப்பின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவாளர்கள் அதனை அடித்து நொருக்கியிருக்கின்றனர். அங்கிருந்த பணியாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகக் குற்றஞ்சாட்டியே ஹெல உறுமயவினர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment