Saturday, January 27, 2007

'விடுதலைப் புலிகளை அழிக்கும் சிறிலங்கா அரசின் முயற்சி வெற்றி பெறுமா?': ரொய்ட்டர்ஸ்.

"திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றியுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தளங்களை அப்புறப்படுத்த போவதாக கூறிய சிறிலங்கா அரசு, இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆனால் தற்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விடுவதற்கு அது தீர்மானித்துள்ளது. ஆனால் யாருக்கும் வெற்றி இல்லை என்பது தான் தற்போதைய நிலை" என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்தி ஆய்வில்:

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய நகரான வாகரையை கைப்பற்றிய சிறிலங்கா அரசு, போரைத் தொடர்ந்து முன்னெடுத்து விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை முற்றாக அழித்துவிடுவதன் மூலம் 20 வருட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் நம்புகின்றது.

சிறிலங்காவின் அரச தலைவரும் அவரின் படையினரும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடுகின்றார்கள். அதன் மூலம் 1983 ஆம் ஆண்டிலிருந்து 67,000 பொதுமக்களும் கடந்த ஆண்டு 4,000 மக்களும் கொல்லப்பட்ட கொடூரமான போருக்குள் அரசு ஆழமாக இறங்கப் போகிறது என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

"இது ஒரு சக்கரம் அவர்கள் (அரசு) நினைக்கலாம் தாம் வெற்றியடைந்து விடலாம் என்று. அவர்கள் ஏதோ ஒன்றை முயற்சித்து பார்க்கப் போகின்றார்கள். ஆனால் நான் நினைக்கிறேன் போர் தொடரப் போகிறது என்றே, ஏனெனில் இரு தரப்புக்கும் அதனை நிறுத்தும் எண்ணம் கிடையாது. மறுபக்கம் பார்த்தால் அரசும் அதன் சிந்தனைகளும் மேலும் போரை நோக்கியே செல்கின்றன. அதற்கான காரணம் தாங்கள் வெற்றியடைந்து கொண்டு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே தாங்கள் எங்கும் தாக்குதலை நடத்தலாம் என அரசு எண்ணுகின்றது. இதனை நிறுத்த விடுதலைப் புலிகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும்" என தனது பெயரை குறிப்பிட விரும்பாத வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பகுதி காடுகளில் விடுதலைப் புலிகளை தேடி அழிப்பதிலும், புதிதாக கைப்பற்றப்பட்ட கிழக்கின் கரையோரப் பகுதியில் தமது நிலைகளை பலப்படுத்துவதிலும் அரச படையினர் காட்டிவரும் உற்சாகம் அவர்களின் ஆதிக்கம் தற்போது மேலோங்கி உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் பிறிதொரு சமருக்காக விடுதலைப் புலிகள் தற்போது பின்வாங்கியுள்ளார்கள், அவர்களின் சமரிடும் பலம் தக்கவைக்கப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"இராணுவம் விடுதலைப் புலிகளினது இராணுவத் தளங்களை தேடி அழிக்கப் போவதாகவும் அதில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிற்கு அமைய விடுதலைப் புலிகாளால் நிர்வகிக்கப்படும் வடபகுதியும் அடங்கும்" எனவும் அரச தலைவரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜேன்ஸ் பாதுகாப்பு வார இதழின் ஆய்வாளரான இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவிக்கையில்:

"இது ஒரு தெளிவான அறிவித்தல். அதாவது அரசு, விடுதலைப் புலிகள் மீதான போரை முழுமையாக மேற்கொள்ளப் போகின்றது. விடுதலைப் புலிகளால் அரச படைகள் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் உண்டு.

எனவே எதிர்வரும் கிழமைகளில் அல்லது மாதங்களில் மிகப்பொரும் சமர்கள் ஆரம்பமாகலாம். விடுதலைப் புலிகள் பேச்சுக்கு சம்மதித்தால் அல்லது அவர்கள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலே அமைதிப் பேச்சுக்கள் சாத்தியமாகலாம்.

விடுதலைப் புலிகளின் பலமான கடற்புலிகளின் பலம் குறைந்து விடவில்லை அவர்கள் தற்போதும் தமது போரிடும் திறனை தக்கவைத்துள்ளனர். அதாவது அவர்கள் முழு அளவிலான மோதல்களுக்கு முகம் கொடுத்து தமது படைகளை இழக்காது பின்வாங்கியுள்ளனர். எனவே தற்போதும் பலமான எதிரியாகவே அவர்கள் விளங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் வாகரையை கைப்பற்றியது அரசபடைகள் போரில் மேலோங்கி உள்ளதையே காட்டுகின்றது. ஆனால் அதன் மூலம் புலிகளின் இராணுவ வலிமை முறியடிக்கப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமில்லை.

கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக விடுதலைப் புலிகளை வெளியேற்றுவது இராணுவத்தின் மிகப்பெரிய நடவடிக்கை. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போது விடுதலைப் புலிகள் புதிய களமுனைகளை திறக்கமாட்டார்கள்" எனவும் அவர் தெரிவித்தார்.

போரை நிறுத்தும்படியும், படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் அனைத்துலக நாடுகளினாலும் அமைப்புக்களினாலும் விடுக்கப்படும் அறிவித்தல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது.

கடந்த காலங்களிலும் மற்றும் அண்மையிலும் இடம்பெற்று வரும் மோதல்களால் இடம்பொயர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு தரமான தங்கும் இடங்கள் கூட அற்ற நிலையில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். எனவே மோதல்கள் உக்கிரமடைந்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என பொதுமக்களும், அவதானிகளும் கவலை தெரிவித்தள்ளனர்.

நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஓமர்சன் தகவல் தெரிவிக்கையில்:

"கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதுலைப் புலிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது மோதல்கள் எல்லா இடங்களுக்கும் பரவுவதற்கே வழிவகுக்கும். இரு தரப்பினரும் கடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர் இது போர்நிறுத்த உடன்பாட்டின் கொள்கைகளுக்கு உகந்ததல்ல" என்றார் அவர்.
நன்றி<புதினம்.

No comments: