இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம், விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கின்றது.
மோதலுக்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் ஜப்பான், அமெரிக்கா, உலக வங்கி என்பன கடுமையாக எதிர்த்திருக்கின்றன. ''இந்தப் பயங்கரமான மோதலுக்கு இராணுவ வழியில் தீர்வைக்காண முடியாது என்பது எமது உறுதியான நம்பிக்கை'' என்று அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளேக் காலியில் நடைபெறும் சிறீலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வு யோசனைகளுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தக்கூடிய சந்தர்ப்பத்தை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உரையாற்றுகையில் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
அதேவேளையில் இன நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதிலேயே சிறீலங்காவின் எதிர்காலம் தங்கியிருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிரிவுத் தலைவர் பிரவுல் பட்டேல் தெரிவித்திருக்கின்றார். இந்தவிடயத்தை நாகரீகமாக மூடிமறைத்துவிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஜப்பானியத் தூதுவர் சியோசி அராகி தமதுரையில், சிறீலங்காவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக எச்சரித்தார். இலங்கையின் மோதலை வன்முறையால் அல்லாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதேவேளையில், சிறீலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கான வளங்களை உள்நாட்டு யுத்தம் சின்னாபின்னப்படுத்துவதாக உதவி வழங்கும் சமூகம் கவலை தெரிவித்திருக்கின்றது. இதனால், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தியிருக்கின்றது.
1983 ல் மோதல்கள் தீவிரமடைந்ததையடுத்து, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 வரையிலான வீதத்தை மோதல்கள் ஏப்பம் விடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் 40 லட்சம் கிராம மக்களை வறுமைப் பிடியிலிருந்து மீட்கும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் திட்டமானது நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதிலேயே தங்கியிருப்பதாகவும் உதவி வழங்கும் சமூகம் கூறியிருக்கின்றது.
அமெரிக்காவோ வேறு எந்த அரசாங்கமோ வழங்கும் அபிவிருத்திக்கான தொகையானது மோதலுக்கு நிரந்தரத் தீர்வைக் காணாதவிடத்து எந்தவொரு அபிவிருத்தி தொடர்பான அனுகூலத்தையும் ஏற்படுத்த மாட்டாது என அமெரிக்கத் தூதுவர் பிளேக் இங்கு வலியுறுத்திக் கூறினார்.
நன்றி>புதினம்.
Tuesday, January 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment