Wednesday, January 24, 2007

இறுதிப்போரை எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகள்.

எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாததொரு புதிய பரிமாண வடிவத்தை வெளித்தள்ளப்போகிறது நடைபெறவிருக்கும் இறுதி யுத்தம்.

எதிரியின் சமகால போரியல் உத்திகளை கூர்ந்து அவதானிக்குமொருவர், முன்னைய கால விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களை முறியடிக்கும் தந்திர உபாயங்களை அரசு தற்போது பிரயோகிப்பதை உணர்ந்து கொள்வார்.

இருப்பினும் இனிவரும் யுத்த களத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் மரபு கெரில்லா போர் வழிமுறைகளைக் கற்று, அடுத்ததொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படச் சாத்தியமில்லை.

ஆயினும் வடக்கை இழந்தாலும், கிழக்கையாவது தக்க வைக்கும் கடைநிலை முடிவினை தமது மூல உபாயத்தில் அரசு நிர்ணயம் செய்திருக்கும்.

நிர்வாக ரீதியாக வடக்கு - கிழக்கை மூன்றாகப் பிரித்தாலும், மூர்க்கத்தனமான இராணுவ அழுத்தங்களை கிழக்கிலேயே அதிகம் சுமத்துகிறது.

யாழ். குடாவில் 40,000 படைகளை தக்க வைத்தபடி, கிழக்கில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள், புலிகளின் சமராடும் பலத்தை பரவலாக்குமென அதியுயர் இராணுவ தலைமை தனது வியூகத்தை வகுக்கிறது.

தற்போது கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நோக்கிய இராணுவப் படையெடுப்பை நிகழ்த்தியவாறு, வடபகுதியில் தமது முன்னரங்க நிலைகளிலிருந்து ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலோடு வான்வெளிக் குண்டுவீச்சினை நடத்துகிறது.

ஆகவே அரசின் இராணுவ நகர்வுகள் குறித்த நிகழ்ச்சி நிரலினை விடுதலைப் புலிகள் இலகுவாகப் புரிந்திருப்பார்கள். வன்னி வான்பரப்பில் ~வண்டு| என்று செல்லமாக அழைக்கப்படும் ஆளில்லா வேவு விமானம் வட்டமிட்டால், மணி ஓசையைத் தொடர்ந்து வரும் யானை போல், கிபீர் மிகையொலி விமானங்கள் குண்டு வீச்சினை நடாத்துமென்று வன்னிக் குழந்தைகளுக்கும் தெரியும்.

நாகர்கோவிலில் படை குவிக்கப்படுவதாக ஊடகச் செய்திகள் பெரிதுபடுத்தினால், கிளாலி முகமாலையூடாக வலிந்த படையெடுப்பை அரசு முன்னெடுக்கப்போவதாக புலிகளின் புலனாய்வுப் பிரிவு கூறித்தான் வடமுனைத் தளபதி அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.

சிறிலங்காவின் தந்திரோபாய இராணுவ நகர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய பட்டறிவினை சாதாரண மக்களே அனுபவத்தினூடாக பெற்றிருப்பர்.

ஆயினும் ஹபரணைத் தாக்குலை முன்கூட்டியே அறியக்கூடிய வலிமையான புலனாய்வுப் பிரிவு அரசிடம் இல்லையென்பதே முற்றிலுமான உண்மை.

போரியல் பலமென்பது வெறுமனே படைவீரர்களின் எண்ணிக்கையிலும், கூடியளவு இராணுவத் தளபாடங்களின் பலத்திலும் மட்டுமே தங்கியுள்ளதென அரசு போடும் தப்புக்கணக்கு, முன்பு பல தடவைகள் பொய்யாகிப்போயுள்ளன.

இப்பலவீனமான இராணுவ நிலையை உணர்ந்துள்ள அரசு, ஒட்டுக்குழுக்களின் துணையுடன் புலிகளின் ஆதரவாளர்களை அழித்தொழிப்பதையும், தமிழீழ தேசியம் பேசுவோரை கொலை செய்வதையும் மேற்கொள்கிறது.

அத்துடன் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணிகளை (டுசுசுP) உருவாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் தாக்குலையும் தொடுக்கிறது.

பேச்சுவார்த்தை தேனிலவு காலத்தில், ஆழ ஊடுருவும் குழுக்களால் கொலையுண்ட மூத்த தளபதிகளின் எண்ணிக்கை மிக அதிகம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஓரங்கட்டி, அரசு தொடுக்கும் தாக்குதல்களால், ஊடுருவித்தாக்கும் செயற்பாடுகளை முன்னரங்க நிலைகளை அண்மித்த பகுதிகளிலேயே மேற்கொள்ள முடிகிறது.

கண்ணில் தென்படும் வாகனங்களை எழுந்தமானமாகத் தாக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. அத்துடன் தென்பகுதியில் இடம்பெறும் வெடிகுண்டுகள் தாக்குதலின் எதிர்வினையான மாற்றச் செயற்பாடாகவே இது அமைகிறது.

வடகிழக்கிலுள்ள மாவட்டங்களை தனித்தனியாக வகை பிரித்தால், அங்குள்ள இராணுவ அதியுயர் கட்டளைத் தலைமையின் உயிர்பீடப் பின்தளங்கள், திருமலையைத் தவிர்த்து, கிழக்கு மாகாணத்தில் பெரியளவில் இல்லையென்றே கூறலாம்.

வடக்கைப் பொறுத்தவரை, பலாலி, தள்ளாடி, வவுனியா போன்றவை பரந்த பிரதேசத்தினை கட்டுப்படுத்தும் பின்தள மையப்புள்ளிகளாக அமையும்.

மட்டக்களப்பு அம்பாறை பிரதேசத்தில் இராணுவ உயர்பீடம் நகரப்பகுதியில் அமைந்தாலும், விசேட அதிரடிப்படைப் பிரிவின் அணியும் இணைந்து செயல்படுகிறது.

இவ்வுயர் பீடம் பலாலி, திருமலை போன்ற பலம் பொருந்தியதொரு பின்தளமாக அமையவில்லை. விமானப்படைத்தளம் இப்பிரதேசத்தில் இல்லாதிருப்பதும் ஒரு காரணியாக இருக்கலாம்.

ஆனையிறவில் முன்பு படைகள் குவிக்கப்பட்டிருந்தது போன்று சகல பின்தளங்களிலும் இன்று படைவலு பரவலாக்கப்படடுள்ளது. சம்பூரைத் தக்க வைக்க மேலதிக படையினர் தேவைப்படுவதால் ஓடிப்போன படையினருக்கு நிரந்தர பொது மன்னிப்பு வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள் மஹிந்தர் தள்ளப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் பக்கம் எமது பார்வையை நுழையவிட்டால், அவர்களின் படைவலுவென்பது மேலோட்ட பார்வைத் தளத்தில் புதிராகவே இருக்கும்.

அண்மையில் இடம்பெற்ற முகமாலைச் சமரில் புலிகளின் புதிய வியூக போரியல் வெளிப்பாட்டை அரசு உணர்ந்திருக்கும். எதிரியை உள்நுழைய விட்டு, பெட்டி வடிவத்தாக்குதலைத் தொடுப்பதென்பது புலிகளின் தந்திர சமராக இருப்பினும், முப்படையின் நவீன வலுவினை எதிர்கொள்ளும் முறியடிப்புச் சமரின் புதிய பரிமாணம் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரச படைவலு வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக்கூடிய புதிய வடிவங்களை தமது படைக்கட்டமைப்பிற்குள் இணைத்திருப்பதை மூதூர் இறங்குதுறை வரையான நீண்ட பாய்ச்சலில் புலிகள் நிரூபித்துள்ளனர்.

ஆனையிறவு பெரும் படைத்தளத் தகர்ப்பும், கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது தொடுத்த அழித்தொழிப்புத் தாக்குதலும், அரசின் எவ்வகையான வலிமை மிகுந்த இராணுவக் கட்டமைப்பையும் தங்களால் நிர்மூலமாக்க முடியுமென்கிற கள யதார்த்தத்தை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் புலிகள் புலப்படுத்தியுள்ளார்கள்.

இனிவரும் முழுமையான தேச விடுதலைப் போர் பின்தளச் சிதைப்பினூடே ஆரம்பிக்கப்படலாம்.

அதாவது பிரதேச கட்டளை மையங்களின் அழித்தொழிப்போடு வெடித்துக் கிளம்பலாம். ஆகவே முகமாலையிலிருந்து பலாலி வரை படை நகர்த்த வேண்டிய தேவையும் ஏற்படாது.
வன்னியை மையப்புள்ளியாகக் கொண்ட அரை வட்ட வடிவத்தின் வளைந்த கோட்டில், திருமலை, வவுனியா, மன்னார், யாழ். மன்னார், யாழ். குடா கட்டளைத் தளங்கள் அமைந்திருக்கின்றன.

வட்டத்தின் மையம், வன்னி நிலப்பரபில் எப்பகுதியில் நிலைகொண்டுள்ளதென்கிற ஊகத்தினை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

புலிகளின் படைக்கட்டுமானப் பிரிவுகளில், தரைநகர்வுப் படைகளுக்கும் சமனான அளவில் கடற்புலிகளின் பலமும் இருப்பதனை பல பாரிய சமர்களில் இனங்காட்டப்பட்டுள்ளது. இரண்டும் கலந்த ஈரூடகப் படையணியின் (ஆயசiநெ) களப்பங்களிப்பினை பனிச்சங்கேணி, மண்டைதீவு முறியடிப்புச் சமர்களில் கண்டுள்ளோம்.

இறுதியாக வெளிப்படுத்தப்பட்ட உந்துருளிப் படைப்பிரிவின் (மோட்டார் சைக்கிள்) உருவாக்கத்தின் பின், புதிய சமரணிகளும் தோற்றம் பெற்றிருக்கும்.

அரச முப்படைகளின் உபபிரிவினை எதிர்கொள்ளக்கூடிய நவீன போராளிகளையும் புலிகள் இணைத்திருப்பார்கள்.

ஆயினும் களமிறக்கப்படாத புலிகளின் வான்படை குறித்த எதிர்வு கூறல்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

இரண்டு இருக்கை கொண்ட சிறு விமானங்கள் புலிகளிடம் இருப்பதாகவே வெளிநாட்டு உளவுத்துறைகள் தாம் விரும்பியவாறு குறைத்துக் கணிப்பிடுகின்றன.

இரணைமடுவில் விமான ஓடுபாதை இருப்பதாக, ஆள் இல்லா வேவு விமானங்கள் பதிவு செய்த படங்களை ஊடகங்களில் உலவவிட்டு, இந்தியாவிடமிருந்து கண்காணிப்பு ராடர்களை (சுயனழசள) மட்டுமன்றி, விமான எதிர்ப்புக் கருவிகளை தமது இராணுவ முக்கியத்துவம் பெறும் நிலைகளில் அரசு நிறுத்திவைத்துள்ளது. இடைக்கிடையே வன்னி வான்பரப்பில் இனந்தெரியாத விமானங்கள் பறப்பதாக, புதினச் செய்திகள் கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தப்படுகிறது.

கேணல் சங்கர், கால்கோளிட்ட விமானப்படைப்பிரிவின் இன்றைய வளர்ச்சி நிலை குறித்து பலவித மயக்கமான ஊகங்கள் வெளிவந்ததாகவும் அதன் மொத்தப் பரிமாணமும் அந்திம களத்திலேயே முழுவீச்சாக வெளிப்படலாம் அன்று, புலிகளின் ~தீச்சுவாலையை| அரசும், அழிவுறும் மக்களை கைகட்டி வேடிக்கை பார்க்கும் சர்வதேசமும் உணரப் போகிறது.

ஓடுபாதையில்லாமலும், சில நவீன விமானங்கள் கிளம்புமென்பதை இராணுவ விற்பன்னர்கள் புரிவார்கள். மிக ஆழமான நிலத்தடி பதுங்கு குழிகளில் தரித்திருக்கும் விமானங்களுக்கு, ஓடுபாதையின் நீளம் அதிகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

பதுங்குகுழியின் நீட்சித் தூரம் போதுமானதாகவிருந்தால், வெளித்தரையில் ஓடுபாதையின் முக்கியத்துவம் தேவையற்ற தொன்றாகிவிடும். இவையனைத்தும் வேற்று நாட்டு போராட்ட களங்களில் முன்பு கண்டறியப்பட்ட தந்திரோபாய, பாதுகாப்பு அரண் சார்ந்த விடயங்களாகும். இவ்வாறான நிலத்தடி ஆழப் பதுங்கு குழிகளை ஊடுருவிச் சென்று உடைப்பதற்கு புதியரக குண்டுகளைக் கொள்வனவு செய்ய அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.

இக்குண்டின் கொள்முதல் விலையானது ஆயிரம் பேரின் வேலை வாய்ப்பினை விழுங்கி விடுமென சில அமைச்சர்களுக்கு சுடலை ஞானச்சிந்தனையும் வரலாம்.

புள்ளிவிபரப் புதிர்கள், கேட்பவர்களுக்கு அச்சத்தைத் தரலாம். ஆட்சியை தக்கவைத்து நீடிக்க முனையும் பௌத்த மேலாண்மை வாதிகளுக்கு இவையெல்லாம் மக்களின் வரிப்பணமென்பதும் புரியும்.

இறுதிக்காலத்தில், அரச வான்படைகளை எதிர்கொள்ள புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கைவசமிருக்கிறதாவென்கிற ஏளனப் பார்வையுடன் இராணுவத் தளபதிகள் நோக்குகிறார்கள்.

தமிழர் பகுதிகளின் மீது தாம் நடாத்தும் வான் தாக்குதல்களை எதிர்கொண்டு, ஒரு கிபீரையாவது புலிகளால் சுட்டு வீழ்த்த முடியவில்லையென்று பெருமிதம் கொள்கிறது சிங்கள அரசு. முன்பு வீழ்த்தப்பட்ட அரச வான் கலங்கள் பற்றிய புள்ளி விபரக் கொத்தினை மஹிந்தர் மறந்திருக்கலாம்.

அழிவினை ஏற்படுத்துவதையே வாழ்வியக்க வீச்சாகக் கொண்ட சிங்களத் தலைமைகளின் ஆளுமையை நேரிய வழியில் அழைத்துச் செல்ல அங்கு எவருமில்லை.

கட்டுநாயக்க வான் படைத்தள அழித்தொழிப்புச் சமர் பாரியளவு சேதத்தினை அதன் கட்டமைப்பில் ஏற்படுத்தினாலும் அவர்கள் திருந்தப் போவதில்லை. மேலாதிக்கச் சிந்தனையில் மாற்றமேற்படாது. இதுபோன்ற அழிப்புச்சமர் மேலும் நடைபெறும் வாய்ப்புக்கள் இல்லையென்று எதிர்வு கூற முடியாது.

இதுகாலவரை பிரயோகிக்கப்பட்ட சமராடும் போர் உத்திகளை ஒருங்கிணைத்து, பரந்துபட்டவாறு முழு இலங்கையிலும் புலிகள் செயற்படுத்தப்போகிறார்கள்.

வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள பொருளாதார இலக்கு மற்றும் இராணுவ விநியோக கட்டளை மையங்களை இயக்கமற்ற நிலைக்குச் செயலிழக்கச் செய்து போரின் வெப்ப நிலையை தணிக்க முற்படலாம்.

வன்னியை மையப்படுத்திய அரை வட்ட வளை கோட்டில் மறைந்துள்ள பலமிக்க பின்தளங்களை அழிப்பதனூடாக அரசின் வடகிழக்குப் படைவலுச் சமநிலை சீர்குலைக்கப்படலாம். இதை நிறைவேற்ற வான் வெளித்தாக்குதலோடு வேறு சில வழி முறைகளும் உண்டு. அதற்கு சிறிய ரக ~அக்னி| களும் உண்டு.

முற்றுகைச் சமரில் ஆனையிறவு பெருந்தளம் வீழ்த்தப்பட்டபோது, கட்டளைத் தளபதிகளின் இறப்பால், கீழ்நிலை அதிகாரிகளும் கடைநிலை சிப்பாய்களும், திறந்து விடப்பட்ட கிளாலிப் பாதையூடாகத் தப்பிச் சென்றார்கள். அங்கு மீட்டெடுக்கப்பட்ட படைக்கலங்கள், விடுதலைப் புலிகளின் படைவலுச் சமநிலையை அதிகரிக்க உதவின. அதுபோன்ற நன்கொடைகள் இனிவரும் சமரில் அதிகமாகவே கிடைக்கலாம்.

குடாநாட்டின் கட்டளை மையம் பலாலியில் இயங்கினாலும், படைவளங்கள் பெரும்பாலும் வரணி மற்றும் முகமாலை, நாகர்கோவில் முன்னரங்க நிலைகளிலேயே அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன.

மையம் சிதைக்கப்பட்டால், பரவலாக்கப்பட்ட இராணுவ வளங்கள் புலிகளின் வசப்படும், அரசின் இராணுவ நிகழ்ச்சி நிரலில் திருமலை மாவட்டத்தை பொறுத்தவரை, மூதூரை நோக்கிய எறிகணை வீச்சுக்கள், திஸ்ஸ கடற்படைத்தளம், குரங்குப்பாலம் மற்றும் கல்லாறு படைமுகாம்களிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு சீனன்குடா விமானத்தளத்தின் பங்களிப்பு குறைந்த நிலையில் காணப்பட்டாலும் கடல்வழி விநியோகப் பாதையில் புலிகளின், குறுக்கீடுகள் அதிகரிக்கப்பதால், படைக்கலங்களின் இறக்குமதி நிலையமாக இத்தளம் அமைகிறது.
அத்துடன் குண்டுவீச்சு விமானங்களின் தரிப்பிடத் தளமாகவும் விளங்குகிறது.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதேச புவியியலை எடுத்துக் கொண்டால், வாகரை தவிர்ந்த ஏனைய கடற்பகுதிகள் புலிகளின் ஆளுமைக்குள் உட்படாத நிலையில் காணப்படுகின்றன.

கடலோடு அண்மித்த பகுதிகளில் அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அமைந்தாலும், இதற்கு அப்பாலுள்ள மாவட்ட எல்லை வரையான தரைப்பகுதிகள் புலிகளின் வசமுள்ளது.

பாரிய படைத்தளங்களற்ற நிலையில், தரைவழி மரபுச் சமர்களே இப்பிரதேசத்தில் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு. அங்கு துணைப்படைகள் இன்னுமொரு ~ஜெயசிக்குறுவை| எதிர்கொள்ளலாம்.

அதேவேளை, வாகரைப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள கடற்புலிகளின் வலுநிலை மேலோங்கியிருந்தால், கடல்வழித் தரையிறக்கச் சமர்களில் அவர்களின் பங்களிப்பு அதிகமாயிருக்கும்.

ஆகவே முழுமையானதொரு மரபுசார் போரினை இப்பிரதேசத்தில் புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். துணைக்குழுக்களின் கரந்தடிப்போர் முறை ஆதரவோடு தமது மரபுவழி இராணுவத்தினரால் புலிகளை அழித்தொழிக்கலாமென மஹிந்தரும், இராணுவ தளபதிகளும் போர்த்திட்டங்களை வகுக்கலாம். இவையெல்லாவற்றையும் இயக்க அரசிற்கு மிக முக்கியமான கச்சாப் பொருளொன்று தேவை.

டாங்கிகள், விமானங்கள், பல்குழல் எறிகணைச் செலுத்திகளைத் தாங்கும் வாகனங்கள், சிப்பாய்களை ஏற்றி இறக்கும் கவச வண்டிகள் யாவும் இயங்குவதற்கு எண்ணெய் இன்றியமையாதது. அது இல்லாடிவில் இராணுவ அசைவியக்கம் செயலாற்றுப்போகும்.
இலக்குகளை இனங்காணுவது மிகச் சுலபமானது.

வரலாற்றை ஆசானாக வரித்துக்கொண்ட தலைமைக்கு, எதிர்கால நிகழ்வு குறித்த தரிசனங்கள், தெளிவாகப் புலப்படும். இத்தரிசனங்களை நிதர்சனமாக்க மக்களின் ஒருங்கிணைவு இரண்டறக் கலக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது யாசித்துப் பெறுவதல்ல.
நன்றி>தமிழ்நாதம்.

No comments: