மன்னார் இலுப்பைக்கடவையில் சிறிலங்கா வான்படையினர் நடத்திய கோர வான் குண்டுவீச்சுத் தாக்குதலில் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து இருதரப்பும் போரை நிறுத்தி பொதுமக்களை பாதுகாப்பதுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள மக்கள் அங்கு இடம்பெற்று வரும் போரினால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இன்று (நேற்று) இடம்பெற்ற உயிரிழப்புக்கள் மிகவும் வருந்தத்தக்கது. போரில் ஈடுபடும் இருதரப்புக்களும் சர்வதேச விதிகளின் பிரகாரம் பொதுமக்களை பாதுகாக்க தவறியது கவலை தரும் விடயம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான உதவி ஆணையாளரும், அவசரகால உதவிப்பணிகளுக்கான இணைப்பாளருமான மகறீரா வல்ஸ்ரேம் தெரிவித்துள்ளார்.
நேற்று விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு பகுதியான இலுப்பைக்கடவை என்ற கரையோரக் கிராமத்தில் சிறிலங்காவின் வான் படையினர் நடத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்று என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான இணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. மேலும் இந்த குண்டு வீச்சில் பல சிறுவர்களும் கொல்லப்பட்டதுடன் 35 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மோதல்கள் தொடங்கியதிலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதுவரை இடம்பெற்ற இன மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 67,000 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஏறத்தாழ 213,000 மக்கள் கடந்த வருடம் மோதல்கள் தொடங்கியதிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை பேரனர்த்தத்தின் போது இருப்பிடங்களை இழந்த 120,000 தொடக்கம் 140,000 மக்கள் தற்போதும் முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். முன்னர் நடந்த போர்களில் பாதிக்கப்பட்ட 315,000 மக்கள் தற்போதும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒரு தடவை மோதல்களை நிறுத்தி அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுக்கொள்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும் சர்வதேச மனித உரிமைகளையும், மனிதாபிமான சட்டங்களையும் பேணும்படியும் கேட்டுக்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும், இடம்பெயர்ந்த மக்களும் வாழும் யாழ். குடாநாடு பயங்கரமான சூழலில் உள்ளதாகவும், கடந்த ஓகஸ்டில் தரைவழிப்பாதை மூடப்பட்டதானது அங்கு உணவு, மருந்து மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை தடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Wednesday, January 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment