Monday, January 22, 2007

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் அதனை இரத்து செய்யவும்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை விடுத்துள்ளது.

இதேநேரம், நாட்டின் தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்குவதற்காக சகலரினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து அவர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின்போது விஷேட கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடனான இச்சந்திப்பின் போது இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தங்களது நிலைப்பாட்டை விளக்கும் கடிதமொன்றை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

ஒன்றியத்தினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்த கடிதத்தில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணைக்கு அமைய, சட்ட விரோதமான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு 5 ஆண்டுகள் பூர்த்தி அடைவதற்குள் அதை ரத்து செய்ய வேண்டும், சமாதான செயற்பாடுகளில் இருந்து நோர்வேயை உடனடியாக வெளியேற்ற வேண்டும், அதிகார பகிர்வினூடான சமஷ்டி முறை தீர்வை கொண்டு வருவதற்கான செயற்பாட்டை முற்றாக நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்து, அவர்களை முற்றாக தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்ற 4 விடயங்களை நிறைவேற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

இவையனைத்தும் நிறைவேற்றப்படாத சூழ்நிலை ஏற்படுமானால், அதற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்குமெனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் ஜனாதிபதிக்கான தனது கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளது.
நன்றி>லங்காசிறீ.

No comments: