இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பெரும் மனித அவலங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது:
வாகரைப் பகுதிக்கான போக்குவரத்து மிகக் கடினமாக உள்ளது. அங்கு உணவுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் 20,000 மக்கள் வாகரைப் பிரதேசத்திலிருந்து வெளியேறியுள்ள போதும் மேலும் 15,000 மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
வாகரையில் தேன்றியுள்ள நெருக்கடி அங்கு வாழும் மக்களை பெரும் துன்பங்களுக்கு உள்ளாக்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஆணைக்குழு இந்த மக்களுக்கான விநியோகப் பணிகளுக்கும், ஏனைய உதவிகளுக்கும் என நிதியை ஒதுக்கியுள்ளது.
வாகரையிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான பணிகளுக்கான ஆணைக்குழுவின் சகோதர நிறுவனங்கள் ஆற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உதவிப் பணிகளில் அவசர தங்குமிட வசதிகள், உணவு மற்றும் உணவு அல்லாத அத்தியாவசியப் பொருட்கள், முகாம் முகாமைத்துவம், உளவியல் ஆதரவுகள், குடிநீர் வசதிகள் என்பன அடங்கும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment