Tuesday, January 23, 2007

இடப் பெயர்வுகள் மூலம் உடைந்து போகாத மக்கள்.

விடுதலைக்காகப் போராடி வருகின்ற எந்தவொரு இனமும் தனது விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு நெடிய பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட வரலாற்றின் போது விடுதலையை வேண்டிப் போராடுகின்ற இனமும் அவ்விடுதலைக்கான இயக்கமும் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிறது. இச்சவால்களிற்குள் இடப் பெயர்வு என்பது மிகப் பெரிய சவலாகும். தமது பூர்வீக தாயகத்தை விட்டு அந்நியப்படாது பாதுகாப்பான இடத்தை நோக்கி சுதந்திர உணர்வு கொண்ட மக்கள் அனைவரும் நடப்பார்கள். இது மாபெரும் வரலாற்று வெற்றிக்கு வித்திடும்.

உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் எல்லாம் விடுதலைக்காக பாரிய இடப் பெயர்வுகளை அம்மக்கள் சந்தித்தார்கள். இடப் பெயர்வின் துன்ப துயரங்களை மறுத்து சுதந்திர தாகம் கொண்ட மக்கள் அனைவரும் போராளிகள் காட்டிய பாதையில் நெடுந்தூரம் நடந்தார்கள். அதுவே அவர்களுடைய விடுதலையை ஈட்டிக் கொடுத்தது. 1943.10.16 இல் சீனாவில் மாவோசேதுங் தலைமையில் சுமார் 120000 சீனர்கள் சியாங்கை செக் இன் சோமின்டங் படைகளின் மரணப் பிடியில் இருந்து தப்பி கால் நடையாக மாபெரும் இடப் பெயர்வை மேற் கொண்டார்கள். வரலாற்றின் மிக நீண்ட பயணம் என அழைக்கப்படும் இவ்விடப் பெயர்வில் சுமார் 12500 கிலோமீற்றர் தூரத்தை அம்மக்கள் கடந்தனர். பஞ்சம், கொடிய நோய் எதிரியின் தாக்குதல் என்பவற்றால் இறுதியில் சுமார் 20000 பேரே எஞ்சினார். இவ் 20000 மக்கள் தொகையை வைத்தே மாவோ சேதுங் நவ சீனத்தை உருவாக்கினார்.

இதேபோல் 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாத அதிகாலைப் பொழுது ஒன்றில் எரித்திரியத் தலை நகர் அஸ்மராவிற்கு அண்மையில் உள்ள கெரன் நகரை விட்டு (EPLF) எதிரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி;யினரின் வேண்டுகோளை ஏற்ற எரித்திரிய மக்கள் மாபெரும் இடப் பெயர்வை செய்தார்கள். இதுவும் வரலாற்றில் ஒரு மையில்கல. இதன் பின்னர் ஏற்பட்ட கொள்ளை நோய், பசி பஞ்சம், எதிரியின் கொடூரமான விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல் மோசமான கால நிலை என்பவற்றுக் கெல்லாம் முகம் கொடுத்து போராளிகளும் மக்களும் இணைந்து தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

எதியோப்பியா இராணும் மேற் கொண்ட கொடூரமான யுத்தத்தை போராளிகளுடன் மக்களும் சேர்ந்து இராணுவப் பயிற்சி பெற்று படைக் கட்டுமானங்களுடன் இணைந்து இறுதியில் தாம் இழந்த நிலங்களை மீட்டெடுத்தனர். கெரின் இடப் பெயர்வே இம் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. இந்த வகையிலே இடப் பெயர்வென்பதை சாதாரணமாக பின்னடைவாக எடை போட்டு விட முடியாது. அதை இராணுவ மொழியில் சொல்லப் போனால் மூலோபாயப் பின் வாங்கலாகவே கருத வேண்டும். மூர்க்கத்தனமாக வேகத்துடன் முன்னேறி வரும் எதிரியின் கையில் அகப்பட்டு அழிவதை விடுத்து- அல்லது நேரக்க நேர் நின்று போராடி அவ்வினமே அழிவதை விடுத்து மூலோபாய ரீதியாக பின் வாங்கி எதிரிக்கு முற்றிலும் சாதகமற்ற சூழலிற்குள் அவனைச் சிக்க வைத்து அவ்விடுதலை அமைப்பு தன்னை தக்க சூழலில் தயார் படுத்தி படிப்படியாக இழந்த நிலங்களை மீட்டேடுப்பதே சரியான வழி. இவ்வழிமுறையினை வெற்றி பெற்ற பல விடுதலைப்போராடடங்களிலே காணமுடியும்.

எமது தாயக விடுதலைப் போராட்டத்தை பொறுத்த வரை எமது விடுதலைக்கான நெருப்பாற்று நீச்சலில் பல கொடிய தடைகளை எம்மினம் சந்தித்திருக்கிறது. எம்மினம் பல முறை தமது சொந்த பூர்வீக நிலங்களை விட்டு ஏதிலிகளாக இடம் பெயர்ந்திருக்கின்றது. விடுதலைப் போராட்டம் புது வேகம் பிடிக்கத் தொடங்கிய 83 இலிருந்து இன்று வரை பல முறை எம்மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். 1983 இல் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ஆயிரக்கனக்கான அப்பாவித் தமிழர்கள் சிங்கள தேசத்தின் பகுதிகளிலிருந்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். ஏராளமான கொடூமைகளிற்கு மத்தியில் இவ்விடப் பெயர்வு நடை பெற்றது. இதன் மூலம் வடக்கு கிழக்கு பகுதி தமிழரின் மரபு வழித்தாயகம் தமிழரின் மரபு வழித் தாயகமே தமிழரிற்கு பாதுகாப்பு என்ற உண்மை உணரப்பட்டது.

தமிழர் வரலாற்றில் பதிவான மிகப் பெரிய இடப் பெயர்வாக யாழ் குடா நாட்டு இடப் பெயர்வை குறிப்பிடலாம். 1995 ஒக்ரொபர் மாதம் ஐந்து லட்சம் மக்களும் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத்தின் கலாச்சார தலை நகரான யாழ் குடா நாட்டை விட்டு வன்னியை நோக்கி இடம் பெயர்ந்தனர். இக்காலத்தில் விடுதலைப் போராட்டம் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. உணவுப் பஞ்சம் கொடிய நோய் விமானக்குண்டு வீச்சுக்கள் பொருளாதார இடர், மருத்துவத்தடைகள் எனப் பல நெருக்கடிகளுக்கு மக்களும் புலிகளும் முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆனால் தேசியத் தலைவரின் மதி நுட்பமான திட்டமிடலால் வன்னி பெரு நிலப்பரப்பு ஒரு பரீட்சார்த்த களமாயிற்று அங்கு தமது நிர்வாகத்தை மிகச் செம்மையாக நடை முறைப் படுத்தி மக்கள் சந்திக்கவிருந்த பாரியளவிலான அழிவிலிருந்து அவர்களை மீட்டெடுத்தனர். புலிகள் அழிந்து விட்டார்கள் எனக் கூறிய அரசாங்கத்தின் உச்சந் தலையில் புலிகள் ஓங்கி அடித்தனர். தமது படைக்கட்டுமானங்களை நன்கு வளர்த்தெடுத்த தலைவர் முல்லைத் தளத்தை மீட்டு பாரிய ஒரு மரபுக்கட்டுமானத்தை உருவாக்கினார்.

இதன் பின்னர் விடுதலைப்புலிகளின் பிரதான தளமான வன்னியை கூறு போட்டு அவர்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டியது இராணுவம். பெரும் எடுப்பில் அவர்கள் தமது முன்னேற்றத்தை மேற் கொண்ட போது வன்னிப் பகுதி மக்கள் பாரியளவில் இடப் பெயர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஜயசிக்குறுவிற்குப் பின்னான சத்ஜெயவிலும் தமிழரின் வன்னித் தள மையமான கிளிநொச்சியை விட்டு இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவ்வாறு 1997,1998, 1999 என குறிப்பிட்ட கால இடை வெளிகளில் தமிழர் தாயகத்தில் இருந்த மக்கள் பாரிய அளவில் இடம் பெயர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய இடப் பெயர்வே அவர்களிற்கு உறுதியைக் கொடுத்தது. இடப் பெயர்வின் அவலங்களே அவர்களுக்கு விடுதலைக்கான ஓர்மத்தை ஏற்படுத்தியது. அவர்கள் பட்ட அவலங்களால் அவர்கள் பலம் பெற்றார்கள். அதனால் ஏற்பட்ட வடுக்களால் அவர்கள் உருப் பெற்றார்கள். மாபெரும் சக்தியாகி தலைவர் பின்னால் அணிதிரண்டார்கள். வன்னி பெரு நிலப்பரப்பை மீட்டெடுத்தார்கள்.

சூழல்கள் எப்படி மாறியபோதும் வரலாறு ஒரே திசையிலேயே இயங்குகிறது. ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் இக்காலம் சமாதான காலமாக இருந்த போதும் இடப் பெயாவும் அவலங்களும் அதன் அழிவுகளும் இடை வெளியின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாரியளிவலான துன்ப துயரங்களிற்கு மத்தியில் தமது சொந்த பூமியை விட்டு அவலப் பட்டு நிற்கின்ற மக்கள் விரக்தி அடைகின்ற நேரம் இதுவல்ல. உலக வரலாறுகளும், எமது நெருப்பாற்று நீச்சலில் அழிக்க முடியாத பதிவுகளும் ஒவ் வொரு தமிழனுக்கும் கற்பிதங்களாக அமைந்து விரக்தியைத் தகர்தெறிந்து விடுதலைத்தீயில் புடம் போடப்பட வேண்டும்.

துயர வாழ்வு கலைந்து புதியதோர் உலகைப் படைக்க விடுதலைப் பாதையில் அணி திரள்வது அனைவரதும்; கடமையாகும்.
நன்றி>பதிவு.

No comments: