Friday, January 26, 2007

'இராணுவத் தீர்வே அரசின் திட்டம்'

இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தடுக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் சாதிக்கக்கூடாது எனவும், சமாதான முயற்சிகளினுடாக இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்தியா மற்றும் கனடாவுக்கான தூதுவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.


இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதித் தூதுவர் ஏ.மாணிக்கம் ஆகியோருடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலையும், கனடியத் தூதுவருனான சந்திப்பு நேற்றுப் பிற்பகலும் இடம்பெற்றது.

இந்த இரு சந்திப்புக்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரு சந்திப்புக்களிலும் இந்திய மற்றும் கனடியத் தூதுவர்களுக்கு நாட்டின் தற்போதைய நிலைமைகளை விளக்கிய தமிழ்க் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ ரீதியான முன்னெடுப்புக்கள் எவ்வித பலனையும் தரப்போவதில்லை எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சமாதான முயற்சிகள் தொடர்பாக இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்து விட்டு தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது என கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இங்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:

'ஏ-9 மற்றும் ஏ-15 போன்ற பிரதான வீதிகளை மூடி பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தனது சொந்த நாட்டு மக்களையே பட்டினிச்சாவுக்குள் வீழ்த்தி பழிவாங்கிக்கொண்டிருக்கின்றது. அரச படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக உள்ளுரிலும், தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலுள்ள இன்றைய சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு அரச படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கிழக்கில் மாணவர்களும், இளைஞர்களும் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும், அரச படையினரின் தாக்குதல் சம்பவங்களும் திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்து நீதியான தீர்வைக்காண்பதற்கு அழுத்தத்தைத் கொடுக்கவேண்டும்."

இவ்வாறு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய மற்றும் கனடிய தூதுவர்களைக் கேட்டுக்கொண்டனர்.

நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

மேலே உள்ள படம் அருமை.