Tuesday, January 02, 2007

"சண்டே லீடர்" ஆசிரியரின் கைது முயற்சியும் பின்னனியும்!!!

கடந்த வாரம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பதுங்கு குழி விவகாரத்தை அம்பலப்படுத்திய காரணத்தால் சிறிலங்கா அரசு, "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்ய முயற்சித்த போதும் ஊடகத்துறை, அரசியல்வாதிகள், மற்றும் ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பின் மத்தியில் பின்னர் அது கைவிடப்பட்டது.


அண்மையில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடாமல் போனது எப்படி என்பதை "சண்டே லீடர்" வார ஏடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.06) இதழில் வெளியிட்டிருந்தது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கலின் பின்னர் "சண்டே லீடர்" வார எட்டுக்கு பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அவரது கையொப்பத்துடன் அனுப்பபட்டது. அதில் பாதுகாப்பு தரப்பு சம்மந்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர். தேசிய பாதுகாப்பு ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரியான லக்ஸ்மன் குலுகலவிடம் சிறப்பு அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பாக "சண்டே லீடர்" வார ஏட்டின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க தனது செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரியான லக்ஸ்மன் குலுகலவுடன் கடந்த வியாழக்கிழமை (21.12.06) தொடர்பு கொண்டு உரையாடினார். அந்த உரையாடல் வருமாறு:

ஆசிரியர்: ஹலோ லக்கி, நான் லசந்த

குலுகல: காலை வணக்கம்

ஆசிரியர்: காலை, வணக்கம். லக்கி, புதிய அவசரகால சட்ட விதிமுறைகள் தொடர்பாக எனக்கு சில விளக்கங்கள் தேவை. அந்த சட்டங்கள் ஊடகத்துறைக்கு உரித்தானவை இல்லை தானே?

குலுகல: இல்லை

ஆசிரியர்: இல்லை, ஆகவே நாங்கள் உங்களிடம் கலந்தாலோசித்ததன் பின் எதை வேண்டுமானாலும் எழுதலாம் அப்படித்தானே? ஆனால் சட்ட விதிகள் ஊடகத்துறைக்கு எதிரானவை அல்ல, சரியா?

குலுகல: இல்லை, இல்லை, இல்லை. இந்த சட்டம் அரச பணியாளர்கள், ஊடகத்துறையினர், மக்களின் அன்றாட வாழ்க்கை என்பவற்றை பாதிக்காது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்: சரி, அப்படியானால் நாங்கள் என்ன செய்தி வெளியிட்டாலும் இந்த சட்ட விதிகளுக்குள் வராதா?

குலுகல: இல்லை, இல்லை, இல்லை. இந்த சட்டம் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே.

ஆசிரியர்: பயங்கரவாதிகளுக்கு மட்டும் எனில், உதாரணமாக ஒரு ஆயுதக்கொள்வனவு தொடர்பான செய்திகளை வெளியிட்டால் அல்லது விசேடமான கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்பான செய்தி வெளியிட்டால், அது இந்த சட்ட விதிமுறைகளுக்குள் வராது அப்படித்தானே?

குலுகல: இல்லை, இல்லை, இல்லை. நீங்கள் உண்மையை எழுதும் வரைக்கும்.

ஆசிரியர்: உண்மையாக. நன்றி லக்கி. நாம் சில தகவல்களை பெற்றால் அதை ஆராய்ந்து பார்க்க முடியுமா?

குலுகல: ஆம், நிச்சயமாக...

ஆசிரியர்: விசேடமாக அமைக்கப்பட்டு வரும் கட்டட அமைப்பு தொடர்பான செய்தி ஒன்று உள்ளது. நாங்கள் உங்களுடன் சரி பார்க்க முடியுமா? ஆனால் நாம் அந்த இடத்தை குறிப்பிடப் போவதில்லை. அது சரி தானே?

குலுகல: ஆம், எங்கே?

ஆசிரியர்: அந்த இடம் (இடம் மறைக்கப்பட்டுள்ளது)

குலுகல: சரி, நாம் எந்த தகவலும் தரப்போவதில்லை

ஆசிரியர்: நீங்கள் தரத்தேவையில்லை. நாங்கள் அதை எழுதினால் அது உண்மையானால். அது அவசரகாலச் சட்ட விதிகளுக்குள் வராது அப்படித்தானே?

குலுகல: இல்லை, இல்லை, இல்லை.

ஆசிரியர்: நன்றி.

இந்த உரையாடலின் பின்னர் "சண்டே லீடர்" வார ஏடு பதுங்கு குழி தொடர்பான செய்தியை இரு இடங்களில் குலுகல குறித்து வெளியிட முடிவு செய்தது.

பாதுகாப்பு அமைச்சு, பதுங்கு குழி செய்தியை மட்டுமல்லாது சண்டே லீடரில் வெளியான ஆசிரியர் தலையங்கத்தில் மகிந்தவின் குடும்பத்தை பற்றிய விமர்சனத்தையும் கைதுக்கு முக்கிய காரணமாக கருதியது.

"சண்டே லீடர்" ஆசிரியரை புதிய சட்டவிதிகளின் பிரகாரம் உடனடியாக கைது செய்யும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றப் புலனாய்வுத்துறை பணியகத்தை பணித்தார்.

குற்றப் புலனாய்வுத்துறை பணியக அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்பட விரும்பவில்லை. அவர்கள் சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக் முடிவெடுத்தார்கள். தலைமை நீதிபதி சி.ஆர்.டீ.சில்வாவின் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டனர்.

குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகளின் முன்னிலையில் சட்டவிதிகளை ஆராய்ந்த நீதிபதி, கைது செய்வது சட்ட விரோதமானது என்று தெரிவித்தார். எனினும் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு அமைச்சுடன் நீதிபதியை பேசும்படி குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் நீதிபதி பேசிய பின்னரும் அழுத்தம் குறையவில்லை.

மீண்டும் கடந்த வியாழக்கிழமை (28.12.06) காலை நீதிபதியின் கருத்தை விடுத்து கைதை மேற்கொள்ளம்படி குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்ப்பட்டது. எனினும் கைது செய்வது சட்டவிரோதமானது என்று குற்றப் புலனாய்வுத்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியப்படுத்தியது.

இந்த கைது மூலம் மனித உரிமை மீறல் குற்றங்களில் சிக்க நேரலாம் என்று குற்றப் புலனாய்வுத்துறை கருதியதுடன் தமது பதவிகளுக்கும் ஆபத்தாகலாம் என்று அச்சப்பட்டனர்.

இந்த நேர இடைவெளியில் கைது விவகாரம் ஊடகத்துறை மூலம் வெளியே கசிந்தது. அரச தனியார் ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் என்று பெரும் தொகையான மக்கள் "சண்டே லீடர்" காரியாலயத்தின் முன்பாக குவிந்தனர். "சிரச" தொலைக்காட்சி மாலை 2.00 மணியளவில் இந்த செய்தியை வெளியிட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது விவகாரத்தை கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன் பின்னர் தொலைக்காட்சிகளில் கண்டனங்கள் வெளிவரத் தொடங்கின.

மகிந்தவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரணில், தனது அதிருப்தியை வெளியிட்டார். அதேவேளை, அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவிற்கும் தொலைபேசியில் அதிகளவில் எதிர்ப்பு அழைப்புக்கள் வரத் தொடங்கின.

சிறிது நேரத்தில் தொலைபேசியில் ரணிலை தொடர்பு கொண்ட மகிந்த, கைது விவகாரம் தனக்கு தெரியாது என்றும் அதை மீளப்பெற்றுக்கொள்ள தான் உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்கவை கைது செய்வதற்காக விரைந்து கொண்டிருந்த குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் கைது செய்வதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க.

இதன் மூலம் கைது விவகாரம் முடிவுக்கு வந்தது.

நன்றி>புதினம்.

No comments: