"மோதல்களை நிறுத்தி பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கு புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மேலும் மோசமான சண்டைக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்." இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு.வாகரையைக் கைப்பற்றிய இராணுவ வெற்றியை அடுத்து இலங்கைப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இறுமாப்புடன் இவ்வாறு அறிவித்தார். இத்தகவலை "ரோய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்டது.
நைந்து போயுள்ள 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனக் குறிப்பிடப்படும் வாகரைப் பகுதியை ஒரு வாரகால கடும் பீரங்கித் தாக்குதல்களின் பின்னர் அரசுப்படைகள் கைப்பற்றியிருக்கின்றன. இதன் மூலம் புலிகளின் பிடியிலிருந்து கிழக்கின் முக்கிய பிரதேசம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.
இராணுவம் அப்பகுதியைத் துடைத்தழித்ததையடுத்து கிழக்கில் உள்ள தொப்பிகல காட்டுக்குள் புலிகள் தங்கள் முகாம்களை நகர்த்தியுள்ளனர். "தொப்பிகல ஸ்திரமற்ற ஒரு பிரதேசம். படையினர் நேரத்துக்கு நேரம் தாக்குதலுக்கு இலக்காகிடும் ஆபத்து அங்கு உள்ளது. ஆகவே, அந்த ஆபத்தையும் விலக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது." இவ்வாறு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வியில் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்."மோதலை நிறுத்திவிட்டு, மீளப் பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குத் தாங்கள் தயார் என்று விடுதலைப் புலிகள் நாளையே அறிவிப்பார்களேயானால் நாம் உடனடியாகவே நிறுத்திவிடுவோம். அப்படி அவர்கள் செய்யா விட்டால், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ச் சிவிலியன்களை அவர்களது பிடியி லிருந்து விடுவித்து விட்டு அதன் பின்னரே அவர்களைப் பேச்சுக்கு அழைக்க வேண்டியிருக்கும்." என்றார் அமைச்சர் ரம்புக்வெல.
புலிகளை அவர்களது வட பகுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து விரட்டப் போவதாக அரசு எச்சரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "யுத்த நிறுத்தத்தையும் வைத்துக் கொண்டு இவ்வளவு காலமும் அவர்கள் புரிந்தவற்றைக் கவனித்தால், பேச்சு மூலமான தீர்வில் அரசுக் குரிய பற்றுதியை வெளிப்படுத்தி நிரூ பிப்பதற்கும் இன்னும் அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும்." எனப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.
"கிழக்கில் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும், போர் வலுவையும் தக்க வைப்பதில் ஒரு சமநிலை மாற் றம் அடிக்கடி மாறி மாறி நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றது." என்றும் புலிகளின் இராணுவப் பேச் சாளர் இளந்திரையன் மேலும் தெரிவித்தார் என்று "ரோய்ட்டர்' செய்தி குறிப்பிட்டது.
நன்றி>சுடர் ஒளி
Tuesday, January 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment