பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
ஒரு பக்கம் கிழக்கில் போரை நடத்திக்கொண்டே மறுபக்கம் அமைதி பற்றி அரசாங்கம் பேசுகிறது. முன்பு ஜெனீவாவில் அமைதிப் பேச்சு நடந்தபோது, போர் நிறுத்த உடன்பாடு பற்றிப் பேசுவதற்கு நிதியுதவி வழங்கும் நாடுகளும் கண்காணிப்புக் குழுவினரும் வலியுறுத்திய வேளையில், சிறிலங்கா அரசாங்கமோ, நாங்கள் அது பற்றிப் பேசவரவில்லை என்று நிராகரித்து விட்டது.
இப்படி இருக்கையில் இப்போது அமைதிப் பேச்சு என்று சொல்லும் அரசாங்கத்தை எப்படி நம்ப முடியும் என்றும் தமிழ்முரசிடம் கேள்வி எழுப்பினார் இளந்திரையன்.
அமைதி உடன்பாட்டைக் கையில் வைத்துக்கொண்டே, தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகிறது. அதேநேரத்தில் நிதியுதவி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்ற சிறிலங்கா அரசாங்கம் உதட்டளவில் இந்தக் கருத்துகளைக் சொல்லி வருகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதற்கும் மேலாக பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது எனக்கூறினார் இளந்திரையன்.
அண்மைய காலத்தில் இராணுவத் தாக்குதல்களை எதிர்த்து எதிர்த்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தாததாலும் எதிர்ப்புக்காட்டமல் அவர்கள் பின்வாங்கி வருவதாலும் முகாம்களை வேறு இடத்தில் மாற்றி அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் அவதானிகள் கூறுவது பற்றி 'தமிழ்முரசு' கேட்டபோது, சிறிலங்கா அரசாங்கம் நாட்டின் கிழக்கே மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றார் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்.
அத்துடன் கிழக்கின் 95% நிலப்பகுதியை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் உண்மையில்லை. அங்கு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துதான் நாங்கள் விலகியிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் கட்டளைப் பணியகமும் போராளிகளும் இன்னமும் கிழக்கில் இருக்கிறார்கள். கிழக்கில் ஏராளமான நிலப்பகுதியும் மக்கள் வாழிடங்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு வாவியின் மேற்குப்பகுதியில் வாகரையைவிட பல மடங்கு பரந்த நிலப்பகுதியையும் பல மடங்கு மக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளனர். ஏறக்குறைய 85% நிலம் விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. இதில் 95% எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் அரச படையினர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், இத்தகைய தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்துவதில்லை என்றார்.
எங்கள் நிலைப்பாட்டை அனைத்துலக அரங்கில் வந்து சொல்ல எப்போதும் தயாராகத்தான் இருக்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுக்கள் எங்கள்மீது இருக்கும் தடையை நீக்கும் பட்சத்தில் நாங்கள்அவர்களைத் தாராளமாகச் சந்தித்துப் பேசலாம் எனவும் குறிப்பிட்டார்.
நன்றி>புதினம்.
Wednesday, January 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment