கொழும்பு துறைமுகத் தாக்குதல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா?
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது அரசினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தாக்குதலில் தாக்குதலாளிகளால் 4 கடற்கலங்கள் அழிக்கப்பட்டதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், சிறிலங்கா கடற்படையினர் தாம் சந்தேகத்திற்கு இடமான 3 படகுகளை அழித்ததாக நேற்று காலை தெரிவித்திருந்தனர்.
பின்னர் துறைமுகப்பகுதியிலிருந்து தப்பியோடிய சந்தேகத்திற்கு இடமான 9 பேரை கைது செய்திருப்பதாக நேற்று கடற்படையினர் தெரிவித்தனர்.
தாக்குதலின் பின்னர் சுமார் இரண்டரை மணிநேரம் துறைமுகம் மூடப்பட்டதுடன் ஊடகவியலாளர்களும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக உள்ள உட்துறைமுகப்பகுதிக்கே அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேற்று காலை நான்கு பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்களை கொழும்பின் கடற் கரையோரமாக தாம் கேட்டதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சிறிலங்காவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளதாவது:
"இத்தாக்குதல் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிக்கச் செய்வதுடன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படத்தலாம். அதாவது சிறிலங்காவின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகை அனைத்துலகத்தில் அதிகரிக்கலாம்.
கொள்கலன்களை இறக்கும் கப்பல்களின் உரிமையாளர்கள் அதிகளவிலான கட்டணங்களையும், அதிகளவிலான காப்புறுதித் தொகையையும் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இக்கட்டண உயர்வுகள் இறுதியில் வாடிக்கையாளர்களான பொதுமக்களையே பாதிப்படையச் செய்யும். தற்போதைய காப்புறுதி தொகை 0.05 விகிதம் இது பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பொறுத்து மாற்றமடையலாம்" என்றார் அவர்.
"நேற்றைய தாக்குதலால் உடனடியான பாதிப்புக்கள் ஏற்படாது. ஆனாலும் சிறிலங்காவிற்கு வரும் கப்பல்களினதும், கொள்கலன்களினதும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிக்கலாம்" என கடல்வள காப்புறுதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறிலங்காவின் கப்பல்துறை, துறைமுகங்கள் அமைச்சர் மங்கள சமரவீர, கப்பல்துறை துறைமுகங்கள் பிரதியமைச்சர் துமிந்த திசநாயக்கா ஆகியோர் நேற்று துறைமுகத்திற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
தாக்குதல் தொடர்பாக துமிந்த திசநாயக்கா கூறியுள்ளதாவது:
"இத்தாக்குதல் துறைமுகத்திற்கு வெளியே இடம்பெற்றதால் கப்பல் போக்குவரத்தை பாதிக்காது. முன்பு நடந்த தாக்குதல்கள் போல் அல்லாமல் இத்தாக்குதலில் கப்பல்கள் சேதமடையவில்லை. துறைமுகத்திற்கு வெளியில் தரித்து நின்ற வெளிநாட்டு கப்பல் ஒன்றில் இருந்த 3 கொள்கன்ங்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன.
கொள்கலன்களின் சேதத்திற்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக அதன் உரிமையாளர்களுடன் இன்னும் கலந்துரையாடவில்லை. இத்தாக்குதல் முறியடிப்பு துறைமுகத்தின் உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே கப்பல் போக்குவரத்திலோ அல்லது பொருளாதாரத்திலோ பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தாது" என்றார்.
1996 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்திலும் கொழும்புத் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. அதன் பின்னர் துறைமுகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் துறைமுகத்திற்கு அண்மையில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது
நன்றி>புதினம்.
Saturday, January 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment