Tuesday, January 09, 2007

இந்தியாவின் கருத்துக்கள் கொழும்பில் எடுபடுமா?

போரை முடிவுக்குக் கொண்டுவந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணவேண்டிய தேவை குறித்தும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் எனவும் இன்று கொழும்பு வரும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்குத் தெரிவித்தாலும், அதனைச் செவிமடுக்கும் நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இல்லையென கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே பிரணாப் முகர்ஜி வருகை தருகின்ற போதிலும், இலங்கையின் இன நெருக்கடி செல்லும் திசை தொடர்பாக இந்தியாவின் அக்கறையை கொழும்பில் தங்கியிருக்கும் போது முகர்ஜி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக பெருந்தொகையான தமிழ் மக்களின் இடப்பெயர்வு மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டமை, பொதுமக்கள் இலக்குகள் தாக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் முகர்ஜி அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நடத்தும் பேச்சுக்களின் போது, இந்தியாவின் அதிருப்தியைக் கொழும்பின் கவனத்துக்குக் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நிலைமை, தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவில் மேற்கொண்ட சந்திப்புக்கள், தமிழகத்தில் உருவாகியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு என்பன காரணமாக இந்தியா கடுமையான அழுத்தங்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியாவின் அழுத்தம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதிலும், தென்பகுதியில் இடம்பெற்ற பேரூந்து குண்டு வெடிப்புக்கள் மற்றும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்கள் கொழும்புக்கான இந்தியத் தூதுவருடன் கடந்த வாரத்தில் மேற்கொண்ட சந்திப்பு என்பன இந்தியாவின் கடும் போக்கில் மாற்றங்களைக் கொண்டுவருவதாக அமைந்திருக்கும் எனக் கருதப்படுகின்றது.

வடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியா அழுத்தங்கொடுக்கக் கூடாது என ஹெல உறுமயவினர் தெரிவித்ததை இந்தியத் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், இது தொடர்பிலான முடிவை எடுக்க வேண்டியவர்கள் இலங்கையர்களே எனவும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி. என்பவற்றின் அழுத்தங்களுக்கு உட்பட்டுச் செயற்படும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணியப்போவதில்லை என்பதே கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களின் கருத்தாகவுள்ளது. இந்தப் பின்னணியில் இந்தியாவும், கடும்போக்கைத் தவிர்த்து மென்போக்கான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்வு கூறுகின்றன.
நன்றி>புதினம்.

No comments: