Monday, December 11, 2006

இலங்கைக்கு ஆயுதம்: இந்திய தளபதி ஒப்புதல்!!!

கொழும்பு: இலங்கை கடற்படைக்கு ரேடார்கள், சோனார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுத தளவாடங்களை விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறியுள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் இனவெறித் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கைக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும், இந்தியா வழங்கக் கூடாது என தமிழக அரசியல் தலைவர்கள் ஒருமித்த குரலில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகள் செய்யப்பட மாட்டாது என அவ்வப்போது உறுதி கூறி வருகிறது.

ஆனால் சமீபத்தில் மதுரைக்கு அருகே இலங்கை கடற்படைக்கு வெடிபொருள் அனுப்பப்பட்ட லாரி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு வெடிபொருள் அனுப்ப அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு நேர் மாறாக பல ரகசிய நிகழ்வுகள் நடந்து வருவதை கொழும்பிலிருந்து வெளியாகும் டெலிகிராப் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த வெடிபொருட்கள், விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்பட்டதாக இலங்கையிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ்கள் செய்தியை திரித்து அனுப்பியுள்ள அதே நேரத்தில், இலங்கைக்கு பல்வேறு வகையான ராணுவ தளவாடங்களை அனுப்ப இந்திய அரசு, அனுமதி அளித்துள்ளதை கடற்படை தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் போட்டு உடைத்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி:

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசு விடுத்த கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷ் கூறுகையில், இலங்கையின் பாதுகாப்புக்குத் தேவையானதாக கருதப்படும் ஆயுத உதவியை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தாக்குதல் ஆயுதங்களைத் தருவதில்லை என்ற கொள்கை முடிவை மத்திய அரசு எடுத்துள்ள போதிலும், இலங்கையின் இறையாண்மையை காக்கத் தேவையான ராணுவ ரீதியிலான உதவியை செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்துடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். தற்போது சோனார்கள், ரேடார்கள், மின்னணு போர் தளவாடங்கள், கடற்படைக்குத் தேவையான தாக்குதல் துப்பாக்கிகள் போன்றவற்றை இலங்கைக்கு வழங்கவுள்ளோம்.

சில ஆயுத தளவாடங்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதி கிடைத்து விட்டது. இதுதொடர்பாக இலங்கை அரசு விடுத்த மேலும் பல கோரிக்கைகளையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு அருகாமையில் உள்ள இலங்கை, மியான்மர், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுடன் நல்ல உறவு நீடிக்கிறது என்று கூறியுள்ளார் அருண் பிரகாஷ்.

அருண் பிரகாஷின் இந்தப் பேட்டிக்கும், மதுரை அருகே பிடிபட்ட இலங்கைக்கான வெடிபொருள் லாரிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த ஆயுத வினியோகம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு முதல்வர் கருணாநிதியிடமே 'பொய்' சொல்லியிருக்கக் கூடும் என சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கனவே மேனன் மற்றும் நாராயணன் ஆகியோரை இலங்கை விவகாரத்தில ஈடுபடுத்துவதற்கு தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. காரணம் இருவருமே மலையாளிகள். இருவரும் இலங்கை அரசுக்கு சாதகமான கருத்தைக் கொண்டவர்கள்.

பாதுகாப்பு ஆலோசகராக நாராயணன் நியமிக்கப்படுவதற்கு முன்பு விடுதலைப் புலிகள் குறித்து காட்டமாக கட்டுரைகளை எழுதி வந்தவர் நாராயணன். அவர் தற்போது பிரதமரின் ஆலோசகராக இருப்பதால், அவரது ஆலோசனை எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமரை சந்தித்து ஆயுத உதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அப்போது, நிச்சயம் அதுபோன்ற உதவி வழங்கப்பட மாட்டாது என பிரதமரும் உறுதிப்படுத்தினார்.

ஆனால் அருண் பிரகாஷ் கொடுத்த பேட்டியைப் பார்க்கும்போது எல்லாமே தலைகீழாக இருப்பதாக தெரிகிறது. தமிழக அரசியல் தலைவர்களிடம் ஒரு நிலையும், இலங்கையிடம் இன்னொரு நிலையும் என இரட்டை நிலையை மத்திய அரசு கடைப்பிடிப்பதாக தெரிய வருகிறது.

இலங்கை அரசு தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை கிட்டத்தட்ட 28 சதவீதம் அதிகரித்துள்ளது. உக்ரைனிடமிருந்து 4 மிக் போர் விமானங்களை வாங்கவுள்ளது இலங்கை. இதேபோல 20 டி 55 ரக டாங்குகள், 5 சி130 ரக விமானங்கள், 10 பக்தர் ஷகான் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என ஆயுதங்களை வாங்கிக் குவிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது.

ஏ 9 , ஏ 15 ஆகிய சாலைகளை ராஜபக்ஷே அரசு ஏற்கனவே மூடி விட்டது. தமிழர்கள் மீதான தாக்குதல் உக்கிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்தும், பிற நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது என ராஜபக்ஷே அரசின் போக்கைப் பார்க்கும்போது தமிழர்கள் மீது இறுதித் தாக்குதலை தொடுக்க இலங்கை திட்டமிட்டிருப்பதை உணரலாம்.

இதுதவிர தமிழர்களுக்கு எதிரானதாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலுக்கு இலங்கை தயாராகி விட்டதை உணரலாம்.

மொத்தத்தில் கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என தமிழகத் தலைவர்கள் தொடர்ந்து விடுத்து வந்த கோரிக்கைகளை ஏற்பது போல தலையாட்டி விட்டு மறுபக்கம் இலங்கைக்கு பெரும் ஆயுதக் குவியல்களை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்து விட்டது புரிகிறது. அருண் பிரகாஷின் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்:

இந் நிலையில் நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரை அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர்களின் படகுகள் சில சேதமடைந்தன.

கோடியக்கரையைச் சேர்ந்த 80 மீனவர்கள் 45 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் பகுதியில் அவர்கள் வலைகளை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர்.

கோடியக்கரை மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிளால் சுட்டனர். அதிர்ஷ்வடசமாக இதில் மீனவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் சில படகுகள் சேதமடைந்தன.

இதையடுத்து வீசியிருந்த வலைகளை அறுத்தெறிந்து விட்டு அங்கிருந்து படகுகளுடன் கரைக்கு விரைந்து உயிர் தப்பினர் கோடியக்கரை மீனவர்கள்.
நன்றி>தற்ஸ்தமிழ்.

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

தமிழன் தலையில் யாரும் மிளகாய் அரைக்கலாம்.
இப்போது இந்திய நடுவண் அரசு அரைத்துக்கொண்டிருக்கிறது.

ENNAR said...

இது அமெரிக்க பாலிசியா