Monday, December 25, 2006

விடுதலைப்புலிகளுக்கு நன்றி: ஜோர்தானிய கப்பல்மாலுமிகள்.

விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்: ஜோர்தானிய கப்பல் மாலுமிகள்.

முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர்.

முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர்.

கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்கவும் விடுதலைப் புலிகளால் நேற்று ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் அவர்கள் தொலைபேசி வழியாக தமது குடும்பத்தினருடன் உரையாடியுள்ளனர். கப்பல் கப்டன் தனது நிறுவனத்திடமும், இந்தியாவில் உள்ள ஜோர்தான் தூதரகத்துடனும் தொடர்பு கொண்டு தாம் விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று விடுதலைப் புலிகளால் இந்த மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் வைத்து கையளிக்கப்பட்ட இவர்கள், வவுனியா வழியாக கொழும்புக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊர்திகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய கப்பல் கப்டன் ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் மாலுமிகளை ஜோர்தானுக்கு அனுப்ப அந்த நாட்டு தூதரகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,
தாம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் வந்து இது தமது நிர்வாகப்பகுதி என்றும் தம்மால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டதாகவும், சரக்குக் கப்பலை இயக்க தாம் முயன்றும் அது முடியாமல் போனதாகவும், கடைசியில் விடுதலைப் புலிகளின் உதவியுடன் தாம் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனையே மற்றும் மாலுமிகள் தெரிவித்ததுடன் தாம் இங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தம்மை சகோதரர்கள் போலவும் நண்பர்கள் போலவும் அனுசரித்ததாகவும், தம் உயிர்களைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகளை தாம் என்றும் மறக்கப் போவதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தங்கள் நிலைமை தொடர்பாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை அறிந்து தமது உறவுகள் அச்சமடைந்து இருந்ததாகவும், ஆனால் தொலைபேசியில் தாம் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் பகுதியில் தாம் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் விரைவில் வந்து சேர்வோம் என்று தெரிவித்ததாகவும் அதன் பின்னரே உறவினர்கள் நிம்மதி அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கப்பலின் கப்டன் ரமாஸ் தாம் விடுதலைப் புலிகளுக்கு என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்று தெரிவித்தார்.

கப்பலின் முதன்மைப் பொறியியலாளர் கமால் அபு அப்தியல் தெரிவிக்கையில்,
தாம் இங்கு வாழும் மக்களின் நிலைமையை உணர்ந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளும் மக்களும் தமக்காக உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கப்பலின் 2 ஆவது பொறியியலாளர் அஸ்ரப் அப்துல் இப்ராகிம் தெரிவிக்கையில்,
தாம் செய்திகளில் அறிந்தளவில் விடுதலைப் புலிகள் பற்றியும் அவர்களின் கட்டுப்பாட்டுப்பாட்டில் சிறிய பகுதிதான் இருக்கிறது என்றும் அறிந்திருந்ததாகவும் ஆனால் இங்கு பார்க்கின்ற போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரமாண்டமும் அவர்களிடம் இப்படியொரு பெரிய நிலப்பகுதி கட்டுப்பாட்டில் இருப்பதையும் கண்டு வியப்படைந்தாகவும் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: