Thursday, December 07, 2006

பிரச்சினையை தீர்க்க : தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்.

இலங்கைப் பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று வியாழக்கிழமை சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றிய போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து உரையாற்றினர்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சினையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை.

தமிழக மக்களின் உணர்வு எப்படி எல்லாம் கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நான் புதுடெல்லி சென்ற போது சோனியா காந்தியிடமும் எடுத்துக் கூறி இருக்கிறேன்.

இப்போது வாய்ப்பு ஏற்பட்டாலும் புதுடெல்லி சென்று எடுத்துக்கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மணி ஆனாலும், மருத்துவர் இராமதாஸ் ஆனாலும், இலங்கைப் பிரச்சினையை என்னால்தான் தீர்க்க முடியும் என்று கூறும் போது முதலமைச்சர் பதவியில் இருப்பதால் என்னால் தீர்க்கமுடியும் என்று கருதுகிறார்களா? அல்லது கருணாநிதியால் முடியும் என்று கருதுகிறார்களா? என்று தெரியவில்லை.
இலங்கைப் பிரச்சினை நமது உணர்வோடு உயிர் மூச்சோடு கலந்தது. எனவே தனியாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம். நாமும் நெருக்கடிக்கு ஆளாக தேவையில்லை. தீர்மானத்தை ஒரு வாசகமாக வாசிக்கிறேன்.

"இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அங்கு நிலைமை மேலும் மோசமாகிறது. இது குறித்து ஆழ்ந்த வேதனையை சபை தெரிவித்துக் கொள்கிறது. பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு காண மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த தீர்மானம் அனைவருக்கும் பொதுவான தீர்மானமாக கருதி நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

கருணாநிதியின் உரையைத் தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நன்றி>புதினம்.

No comments: