Saturday, December 02, 2006

அரசிற்கு இணைத்தலைமை நாடுகளின் பச்சைக்கொடி.

அமெரிக்க, வாசிங்ரனில் கடந்த மாதம் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட சிறிலங்கா அரசுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இது தொடர்பாக "வேர்ல்ட் சோசலிஸ்ட் வெப்" இணையத்தளத்துக்கு நந்தா விக்கிரமசிங்க எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்புக்கு ஊக்கமளித்துள்ளது.

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஜெனீவாப் பேச்சு தோல்வியடைந்த மூன்று வாரங்களில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இணைத் தலைமை நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை, நாட்டில் நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்கள் பற்றி "கவலை" தெரிவித்ததோடு. 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையை மதித்து நடக்குமாறு இருதரப்புக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனால் அந்த அறிக்கை, சமாதான உடன்படிக்கையை மீறி, கடந்த ஜூலை மாதம் முதல், விடுதலைப் புலிகள் பகுதிகளைக் கைப்பற்ற அரசு மேற்கொண்டு வரும் கடுமையான இராணுவத் தாக்குதல்கள் எதையும் கண்டிக்கவில்லை.

மிகக் கவனமாக 2002 ஆம் ஆண்டு உடன்படிக்கையைப் பயன்படுத்துங்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறதே தவிர, அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறவில்லை. அப்படிக்கூறும் பட்சத்தில் இராணுவம் கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் பிரதேசங்களில் இருந்து திரும்பப் பெற வேண்டியிருக்கும். அதனால் அரசுக்கு சாதகமான வாசகங்களை அந்த அறிக்கை பயன்படுத்தியுள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தாக்குதல்களை தூண்டுவதாக விடுதலைப் புலிகள் மீதும், அத்தகைய இடங்களில் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களின் உயிரிழப்புக்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணமாக இருப்பதாக அரசாங்கத்தின் மீதும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இதன் மூலம் விடுதலைப் புலிகள் பொதுமக்களை "மக்கள் கவசமாகப்" பயன்படுத்துவதாக மறைமுகமாகக் குறை கூறுகிறது.

இணைத் தலைமை நாடுகளின் அனுமதியை அடையாளம் கண்டுகொண்ட கொழும்பு அரசாங்கம் தனது இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விடத்தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் மீது இணைத் தலைமை நாடுகள் எந்த "முத்திரையையும்" குத்தவில்லை என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
"இணைத்தலைமை நாடுகள் அரசாங்கத்தை கடுமையாகக் கண்டிக்கப்போகிறது என்பது வெறும் கட்டுக்கதை. அப்படி எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதிகள் தாக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பதிலடி கொடுப்போம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் வெளிப்படையாகவே அரசாங்கத்தையும் அதன் இராணுவத் தாக்குதல்களையும் அங்கீகரித்துள்ளார்.

"நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். நாட்டின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் கட்டிக்காக்க பிரிவினை வாதத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க அரசாங்கத்துக்கு உரிமையுள்ளது என்பதை நாம் நம்புகிறோம். அரசின் உயர் மட்ட அதிகாரிகளை நாம் அடிக்கடி சந்திக்கிறோம். சிறிலங்கா அரசை அமெரிக்காவின் நட்பு நாடாகக் கொள்கிறோம்" என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பற்றிக் கேட்டதற்கு, "மிகவும் தீவிரமானது. அதைத் தொடரும் நோக்கமுள்ளது" என்று கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த பேர்ன்ஸ், "அமெரிக்கா நடுநிலைமையாகச் செயற்படவில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நாங்கள் சிறிலங்கா அரசுடன் பங்காளியாகப் பணியாற்றுகிறோம்" என்றும் கூறினார்.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை மகிந்த உக்கிரமாக்க அமெரிக்காவின ஆதரவே முக்கிய காரணம். விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து, விடுதலைப் புலிகளுக்கான எவ்வித அரசியல், பொருளாதார உதவிகளுக்கும் தடைகளை விதிக்குமாறு புஷ் நிர்வாகம் கனடாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலியுறுத்தியது.

அதே நேரத்தில் பேர்ன்சின் கருத்து, பென்ரகன் சிறிலங்கா இராணுவத்துக்குப் பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்குவதன் மூலம் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருவதைக் கோடி காட்டுகிறது.

பேர்ன்சின் கருத்தை வரவேற்றுப் பேசிய சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல, அது "அரசாங்கத்துக்கு பெரும் ஊக்கத்தைத் தருகிறது" எனக் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் செயற்பாடுகளே அதற்கு விளக்கமளிக்கின்றன. ஏ-9 பாதை மூடப்பட்டே இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்கிறது. பொதுமக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் நாளுக்கு நாள் தொடர்கிறது.

கிழக்கில் விடுதலைப் புலிகளின் பகுதிகளான கதிரவளி, வாகரை, மாங்கேணி பகுதிகளை பாதுகாப்புப் படை மையம் கொண்டிருக்கிறது. ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளிடம் இருந்து இந்தப் பகுதிகளை இராணுவம் கைப்பற்றியது.
கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற இராணுவம் மேற்கொண்ட வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல் நடவடிக்கையால் ஏறக்குறைய 30,000 பேர் வாகரையில் இருந்து வெளியேறி அகதிகளாகினர்.

வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவடங்களில் கடந்த மாதம் 20 ஆம் நாள் முதல் இராணுவம் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 22 ஆம் நாள் கடற்படைப் பயிற்சித் தளத்தில் வான்படை தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறினார்.
கடந்த மாதம் 25 ஆம் நாள் தற்கொலைப் படையினரின் பயிற்சித் தளம் என்று கூறி, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைமையகத்தின் அருகே போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் குறிப்பேட்டில் இருந்து மகிந்த ராஜபக்சவின் அரசு நீக்கப்பட்டுவிட்டது. "தற்கொலைப் படையினரின் பயிற்சி முகாம்" என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் தளங்களில் நடத்தப்படும் தாக்குதல்களை தற்காப்புத் தாக்குதலாக அது நியாயப்படுத்துகிறது.

இந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளின் எந்த படைத் தளத்தையும் தாக்க முடியும், அது 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்தாலும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது கொள்கைப் பிரகடன உரையில், சமாதான ஒப்பந்தம் முறிந்து விட்டது, அதற்கு அரசே காரணம் எனக் கூறியிருந்தார்.

கைது செய்வது, சிறைப்பிடிப்பது, துன்புறுத்தல், பாலியல் வன்முறை, கொலை, கடத்தப்படுதல், குண்டு வீசுதல், வான் தாக்குதல், இராணுவத் தாக்குதல்கள் அனைத்தும் கேட்பாரற்றுத் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று வேதனைப்பட்டிருந்தார்.

சர்வதேச சமூகத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் விடுத்த வேண்டுகோள், போரை அங்கீகரிக்கும் அமெரிக்காவையும் ஏனைய வல்லரசுகளுக்குமானது.

நோர்வே தூதுவர் ஹன்சன் பௌயர் வருகையால் சமாதானப் பேச்சுகள் மீண்டும் தொடங்கும் என்ற நப்பாசை எவருக்கும் இல்லை. சமாதானத்துக்கான "எந்தப் புதிய திட்டத்திலும்" நோர்வே ஈடுபடாது. ஆனால் சமாதான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட இருதரப்பும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இருதரப்புடனும் தொடர்பில் இருக்கும் என்று எரிக் சோல்ஹெய்ம் நோர்வேயில் கூறியுள்ளார் என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: