Thursday, December 07, 2006

உடன்படிக்கையின் 2.12 பிரிவை மாற்றுவது போர்நிறுத்த மீறலா?

பயங்கரவாத தடைச் சட்டத்தை நிராகரிக்கும் போர்நிறுத்த உடன்படிக்கையின் 2.12 பிரிவை மாற்றியமைக்க சிறிலங்கா அரசு முடிவெடுத்துள்ளது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்வதானால், செய்ய விரும்பும் பிரிவு அது குறித்து நோர்வே அனுசரணையாளர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இரு பிரிவும் ஒத்துக்கொண்ட பிற்பாடே மாற்றத்தைச் செய்யமுடியும். ஆனால் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சட்ட நிபுணர் குழுவைச் சேர்ந்த ஒருவர், அண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், பயங்கரவாத்தை ஒடுக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி மகிந்த, ரணிலுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால் பயங்கரவாதத்தை தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதில் தமக்கு விருப்பமில்லை என தெரிவித்துள்ள ரணில், தேவையெனில் அவசரகாலச் சட்டத்தை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை இயக்கத்தினரும் இச்சட்ட அமுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டம், 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அராங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை மீறுவதாக தோன்றுகின்ற போதிலும் இந்த சட்டம் குறித்த மேலதிக விவரங்களை பெறும் நோக்கில் அரச தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தின் மீள் அமுலாக்கம், போர்நிறுத்த மீறலா இல்லையா என அறிக்கையிட, அல்லது கருத்துக்கூற இன்னும் சிறிது கால அவகாசம் போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்குத் தேவை எனக்கூறிய கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஒமர்சன்,
சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொருட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகளோ அல்லது தேடுதல் நடவடிக்கைகளோ நடைபெறக்கூடாது என்பதையும், கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழேயே நடைபெற வேண்டும் என்றும் 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்தாகியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்து இலக்கம் 2.12 தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதாவது, போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அமுலில் இருந்த இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சட்டம் திருத்தங்களுடன் அமுல்படுத்தப்படுவதாக அராங்கம் நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கின்ற போதிலும் இது குறித்த மேலதிகமான தெளிவான விவரங்களை பெறும் பொருட்டு அராங்கத்துடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த தடைச் சட்ட அமுலாக்கம் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி>புதினம்.

No comments: