Monday, December 04, 2006

விமானக்குண்டு வீச்சுக்கு சர்வதேசம் கண்டிக்கவில்லை!!!

விமானக் குண்டு வீச்சு நடத்திய போது சர்வதேசம் கண்டிக்கவில்லை- ஆகவே விடுதலைப் புலிகளை தடை செய்யலாம் என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நிப்போன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாடு நடத்தியது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாவது:

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது இராணுவ தலைமையகத்திற்குள் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதே அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடைசெய்து போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு அஞ்சி அச்சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டு விட்டது. அதனால் பொய்யான சமாதானத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளே வரப்பிரசாதங்களை அனுபவித்தனர். அனுபவிக்கின்றனர்.
இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் அரசாங்கம் விடுதலைப் புலிகளை இலக்கு வைத்து விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்திய போது சர்வதேச சமூகம் அராங்கத்திற்கு எதிராக எவ்விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அத்தருணத்தில் விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடை விதித்திருந்தால் சர்வதேச சமூகம் அமைதியாகவே இருந்திருக்கும்.

அரசாங்கப் படையினர், படை உயர் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம், படையினர் பயன்படுத்தும் உலங்குவானூர்திகளையே வழங்குகின்றது. அவ்வாறான வரப்பிரசாதங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக்கொண்டு படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

அரசாங்கம் ஒருபுறம் பதில் தாக்குதல்களை நடத்திக்கொண்டு மறுபுறம் சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றது. விடுதலைப் புலிகளை கைது செய்வதாக கூறிக்கொண்டு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வருகின்ற போதெல்லாம் அதற்கு நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம், விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அரசாங்கம் கிளிநொச்சிக்கு அனுப்புகின்றது. இவ்வாறான பரஸ்பர விரோதமான செயற்பாடுகளினால் விடுதலைப் புலிகளே பயன்பெறுகின்றனர்.

இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது தவறு செய்த அரசாங்கம் பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்க இன்றாவது தயாரா? விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரையில் போர் செய்வதாக ஒத்துக்கொண்டுள்ளார். போர் செய்வது வேறு விடயமானாலும் சமாதான காலத்தில் போர் செய்வதாக ஒத்துக்கொண்டதன் பின்னர் அரசாங்கம் இன்னும் விடுதலைப் புலிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக 14 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தெட்டத்தெளிவாக கூறியதன் பின்னரும் அரசாங்கம் இன்னும் மௌனம் காப்பது ஏன்?

நாட்டின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றவரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவின், அதுவும் அரச தலைவரின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்னும் மௌனம் காப்பதா? விடுதலைப் புலிகளை தடைசெய்யும் விடயத்தில் அரசாங்கம் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் நாடும், அராங்கமும் பல்வேறான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.
சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் வரப்பிராதங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் என்றால் அரசாங்கத்திற்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் தான் என்ன? அரசாங்க படையினரை இழந்ததுடன் முக்கியஸ்தர்கள் மீது இலக்கு வைத்ததேயாகும். இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டுமாயின் விடுதலைப் புலிகள்மீது உடனடியாக தடைவிதிக்க வேண்டும்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது தாக்குதல் நடத்த எடுத்த முயற்சியினை பல்வேறு தரப்பினரும் கண்டனம் செய்தனர். போருக்கு எதிரான அமைப்பும் கண்டித்துள்ளது. எனினும் அந்த எதிர்ப்பில் விடுதலைப் புலிகளினால் மேற்கோள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக எந்தவொரு இடத்திலேயும் குறிப்பிடப்படவில்லை.

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தான் மேற்கொண்டனர் என்று குறிப்பிடாமல் கண்டன அறிக்கை விடுவதற்கு அந்த அமைப்பிற்கு வெட்கம் இல்லையா? விடுதலைப் புலிகளை தடைசெய்து, போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து இன்னும் ஒருவார காலத்திற்குள் உத்தியோக பூர்வமாக விலகுவதõக அரசாங்கம் அறிவிக்கைவில்லையாயின், இவ்வாரம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டு அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும் என்றார்.

ஆதாரம்: வீரகேசரி.

No comments: