Saturday, December 16, 2006

சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்: சோனியா.

தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை சிறிலங்கா அரசு பயன்படுத்தும் என்பதால் அந்நாட்டு அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு உறுதியளித்து இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வெடிமருந்து பொருட்களை எடுத்து சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியது தொடர்பாக கடந்த 11 ஆம் நாள் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. உங்களின் கவலையை நான் முழுமனதாக உணர்கிறேன். நாம் 9 ஆம் நாள் சந்தித்த போதும் இந்த விவகாரத்தை நீங்கள் பேசினீர்கள்.

இந்த வெடிமருந்து பொருட்கள், கடல் அகழ்வுப் பணிகளான மண் தோண்டுதல், பாறைகளை உடைத்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்துவதற்காக சிறிலங்கா கடற்படை மூலமாக தனியார் வெடிமருந்து விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கானவை என்று கப்பல் முகவர் கூறுவதாக எனக்கு கூறப்பட்டு உள்ளது. இது சரிதானா என்பதை அறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.

எந்த சூழ்நிலையில் எந்த அதிகாரியால் இந்த வெடிமருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது என்று ஆழ்ந்து விசாரிக்கப்படும் என்று எனக்கு உறுதியளிக்கப்பட்டு உள்ளது. சிறிலங்கா அரசுக்கு எந்தவித ஆயுதங்களோ, பொருட்களோ, அவை பொதுமக்கள் மீது, சிறப்பாக தமிழ் மக்கள் மீது பயன்படுத்தக் கூடும் என்பதால் அவற்றை வழங்குவதில்லை என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்று மத்திய அரசு எனக்கு உறுதியளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நலன்மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உயிரையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடிய எவற்றையும் செய்யக்கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:


இலங்கையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட பெரும்பாலும் தமிழர்களின் பல அப்பாவி உயிர்கள் பறிபோய்விட்டது மிகவும் கவலையையும், துயரத்தையும் அளிக்கும் விடயமாகும். இத்தகைய வன்முறை சம்பவங்களில் எந்தவித நியாயமும் இல்லை என்று நாங்கள் உறுதியாக குறிப்பிட்டு வருகிறோம். அப்பாவி மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சிறிலங்கா அரசாங்கத்தில் பொருத்தமான அத்தனை மட்டங்களுக்கும் இதை எடுத்துச் சென்று இலங்கையில் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து கவலையை எடுத்து சொல்லி வருவதை தாங்கள் அறிவீர்கள்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை பெறும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் அவசர அவசியத்தையும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. தொடர்ந்து இந்த விடயம் மேலான கவனத்தில் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

2 comments:

நாமக்கல் சிபி said...

//இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை பெறும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணும் அவசர அவசியத்தையும் உயிரிழப்புகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது. தொடர்ந்து இந்த விடயம் மேலான கவனத்தில் கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
//

மகிழ்ச்சியான செய்தி.

Anonymous said...

இனியாவது கருணாநிதியை துரோகி என்று கூறுவதை ஈழ மக்கள் நிறுத்துவார்களா?

KR